எதிர்க்கப்படும் திரைப்படங்கள் - சா. கந்தசாமி

1987 -ஆம் ஆண்டில் அண்ணாசாலையில் உள்ள மினி ஆனந்த் திரைப்பட அரங்கில் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக பாரதிராஜாவின் "வேதம் புதிது' படம் காட்டப்படவிருந்தது.
எதிர்க்கப்படும் திரைப்படங்கள் - சா. கந்தசாமி

1987 -ஆம் ஆண்டில் அண்ணாசாலையில் உள்ள மினி ஆனந்த் திரைப்பட அரங்கில் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக பாரதிராஜாவின் "வேதம் புதிது' படம் காட்டப்படவிருந்தது. அரசு சாராத நான்கு உறுப்பினர்களும், திரைப்படத் தணிக்கை வாரிய ஓர் உறுப்பினரும் சேர்ந்து படம் பார்த்து ஆலோசனை வழங்குவார்கள். அதன் அடிப்படையில் திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கும்.

காலை பத்து மணிக்குத் திரைப்படத் தணிக்கை வாரிய அதிகாரி வந்தார். அவர் சிந்தி மொழிக்காரர். நாட்டின் பிரிவினையின்போது சிந்து மகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து மும்பை வந்தவர். தமிழ்மொழி பேச, எழுதத் தெரியாதவர்.

அவர் தன் சிறிய கைப்பெட்டியைத் திறந்து கத்தைக் காகிதத்தை எடுத்துக்கொண்டு, "மதிப்புமிக்க உறுப்பினர்களே. நாம் பார்க்க இருக்கும் வேதம் புதிது திரைப்படம் பற்றி ஜனாதிபதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, பிரதமர், தமிழ்நாட்டு கவர்னர், உயர் நீதிமன்ற நீதிபதி, முதலமைச்சர் என்று பலருக்கும் நிறைய புகார்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றின் நகல்கள் நமக்கும் வந்து இருக்கின்றன. புகார் மனுவில், ஆதிசங்கரரைப் பற்றி அவதூறு செய்கிறது. இந்து மதத்தைத் தவறாகச் சித்திரிக்கிறது என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. எனவே வேதம் புதிது திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்று எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில புகார் மனுக்களை நான் படிக்கிறேன்'' - என்று படிக்க ஆரம்பித்தார்.

நான் எழுந்து, "இது முறையல்ல. நமக்கும் திரையிடத் தணிக்கைச் சான்றிதழ் கேட்டு வந்து இருக்கும் படத்திற்கும்தான் சம்பந்தம். அதனை விட்டுவிட்டு யார் யாருக்கோ எழுதப்பட்ட புகார் மனுக்களை எல்லாம் படிப்பதோ, கேட்பதோ முறையில்ல. முதலில் திரைப்படத்தை திரையிடுங்கள். நாம் பார்த்து விதிப்படி முடிவு செய்வோம்'' என்றேன்.

திரைப்படத் தணிக்கை வாரிய அதிகாரி அதனை ஏற்றுக்கொண்டார். "வேதம் புதிது' திரையிடப்பட்டது. பெரிய பிரச்னைகள் ஏதுமின்றி சான்றிதழுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர், புகார் மனுக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டோம்.

திரைப்படம் என்பது காட்சி ஊடகம். அது பயன்பாட்டிற்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆகிறது. கதை சொல்லும் திரைப்படத்தில் வசனம், பாட்டு, நடனம், சண்டை, சமாதானம் எல்லாம் உண்டு. அதோடு அது நிகழ்கிறது. எனவே மக்கள் பார்த்துப் பரவசமடைகிறார்கள். அதனால் ஒவ்வொரு மொழியிலும் - ஒவ்வொரு நாட்டிலும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து பல திரைப்படங்களை வரவழைத்துக் காட்டுகிறார்கள். திரைப்படங்கள் பொதுத்தன்மை பெற்று உள்ளதால் நல்ல வரவேற்பு பெறுகின்றன.

எளிய முறையில் நேராகக் கதை சொல்வதுபோல எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சி, ரசிகர்களின் எதிர்ப்பு, அமெரிக்கப் படங்களின் ஆதிக்கம் போன்றவற்றில் எல்லா நாடுகளிலும் ஆடம்பரமாக அதிகமாகச் செலவு செய்து பெரும் லாபம் ஈட்டும் வகையில் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் திரைப்படங்களில் இருந்த எளிமையான அழகு இல்லாமல் போய்விட்டது.

திரைப்படத்தை கலையென்று சொன்னாலும் அது பணம் போட்டுப் பணம் அள்ளும் தொழில். எனவே, திரைப்படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகள், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள், அரசியல் விமர்சனங்கள், நையாண்டி பேச்சுகள் மற்ற மதத்தினரை, சாதியினரை நுட்பமாக நிந்தனை செய்யும் காட்சிகள் எல்லாம் பணம் சம்பாதிக்கவே சேர்க்கப்படுகின்றன.

திரைப்படம் எடுக்கப்படும்போதே அது பற்றி சரியாகவும், தவறாகவும் பல செய்திகள் ஊடகங்கள் வழியாக மக்களிடம் வருகின்றன. அதன் வழியாகத் திரைப்படம் பற்றி அறிந்து கொண்டவர்கள், படம் தங்களைப் பழிக்கிறது. தங்களின் பெண்களை அவமரியாதை செய்கிறது. இளைஞர்களை மோசமாகச் சித்திரிக்கிறது, சமய ஆசாரங்களை அவதூறு செய்கின்றன. எனவே, திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று போராட, கலவரம் செய்ய முன்வருகிறார்கள். குறிப்பாக தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆபாசமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படும்போது கொதித்தெழுந்து விடுகிறார்கள்.

திரைப்படம் எடுத்த கலைஞர்கள், நாங்கள் யாரையும் நிந்தனை செய்ய படம் எடுக்கவில்லை. உண்மையான கதையை உண்மையாகவே எடுத்திருக்கிறோம். அதில் எங்களுக்கு உள்நோக்கம் எதுவும் கிடையாது. கலைஞர்கள் சுதந்திரமாகப் படம் எடுப்பதைத் தடுக்கக் கூடாது என்று பதில் சொல்கிறார்கள். ஆனால் எல்லா நாடுகளிலும் திரைப்படத்திற்குத் தணிக்கை இருக்கிறது. அதில் சுய தணிக்கை முறையும், அரசு தணிக்கை முறையும் உண்டு. கட்டற்ற சுதந்திரம் கொண்டவர்கள் கலைஞர்கள் என்பது அரசியல் சாசனப்படி ஏற்கப்பட்டது இல்லை. எனவேதான் உச்சநீதிமன்றம் தணிக்கை முறை திரைப்படங்களுக்கு அவசியம் என்று தீர்ப்பளித்து இருக்கிறது.

இந்தியாவில் அரசியல், சமூக, கலாசார முறைகள் வேகமாக மாறி வருகின்றன. ஒவ்வொரு மாநில மக்களும் புலம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். அவர்களுக்குத் தங்களின் இன, மாநில பெருமைகளைச் சொல்ல பழைய கதைகள், வரலாற்று நிகழ்வுகள் தேவையாக இருக்கின்றன. அவற்றைச் சொல்லி பெருமிதம் அடைகிறார்கள்.

அவற்றை முன்னெடுத்துச் செல்வதில் காட்சி ஊடகங்களில் திரைப்படம் முன்னேறி இருக்கிறது. அதோடு அது நல்ல தொழில். பெரும் லாபம் தருவதோடு, சமூக அந்தஸ்தும் கொடுக்கிறது. எனவே சிலர் திரைப்படம் எடுக்க முன் வருகிறார்கள். அவர்களுக்குப் பழைய கதை மட்டும் போதுமானதாக இல்லை. மக்களைக் கவர, படம் பார்க்க வைக்க புத்திசாலித்தனமாக இடைசெருகல்களைச் சேர்த்து வசனங்கள், நடனங்கள், தந்திர காட்சிகளைச் சேர்த்து படத்தை ஆடம்பரமாக ஆக்குகிறார்கள். அந்தச் சேர்ப்பு - இடைசெருகல் சில நேரங்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதுதான் "பத்மாவதி' திரைப்படத்திற்கு நேர்ந்திருக்கிறது.

பலரும் அறிந்த "சித்தூர் ராணி பத்மினி' தான் பத்மாவதி. அவள் ராஜபுத்ர மன்னன் ராணாவின் மகள். பேரழகி. அவளை மணந்து கொள்ள பல இளவரசர்கள் விரும்பினார்கள். ஆனால் அவளோ ராஜ்புத்ர வம்சத்தில் வந்த ரத்தன் சிம்ஹாவை திருமணம் செய்து கொண்டு சித்தூர் ராணியானாள். அவளுக்குத் திருமணமாகிவிட்டாலும், சில மன்னர்களுக்கு அவள் மீது கொண்டிருந்த மோகம் குறையவே இல்லை. அவர்களில் ஒருவன் டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி. சித்தூர் மன்னனைக் கொன்றுவிட்டு, ராணியைத் தூக்கிக் கொண்டுபோய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசைப்பட்டான். எனவே பெரும் படையுடன் சித்தூர் கோட்டையை முற்றுகையிட்டான். சில மாதங்கள் கடுமையாகப் போர் நடைபெற்றது. சித்தூர் மன்னன் போரில் கொல்லப்பட்டான்.

அலாவுதீன் கில்ஜி படைகள் கோட்டைக் கதவுகளை உடைத்துக்கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தன. அதில் முதல் ஆளாக அலாவுதீன் இருந்தான். ஏனெனில் பத்மாவதியை முதலில் நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற பேரவாதான். ஆனால், அவன் ஆசை நிறைவேறவில்லை. அவன் படைகள் அரண்மனைக்குள் நுழைந்துவிட்டன என்பதைக் கேள்விப்பட்டவுடனேயே ராணி பத்மாவதி தீயில் பாய்ந்தாள். நூற்றுக்கணக்கான ராஜபுத்ர பெண்களும் தீயில் விழுந்து மாண்டார்கள்.
உயிர் தியாகம் புரிந்த உத்தமிகளின் கதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ராஜபுத்திரத்தில் நாட்டுப்புறக் கதையாகச் சொல்லப்பட்டும், கேட்கப்பட்டும் வந்தது. பலர் அதற்கு மெருகூட்டி காவியத்தன்மை ஏற்றி வைத்திருந்தார்கள். வாய் மொழி கதையை 1540 - ஆண்டுகளில் சூஃபி கவிஞர் மாலிக் முகமது சாயாஜி அவந்தி மொழியில் எழுதினார்.

காதல் கதையாகவும், துன்பவியல் நாடகமாகவும், பெண்களின் தியாகத்தைச் சொல்லும் கதையாகவும் வரலாற்றோடு சேர்ந்த கற்பனைக் கதை பலருக்குப் பிடித்தமானதாகிவிட்டது. பாரசீகம், அரபு, உருது, வங்காளம், இந்துஸ்தானி - என்று பல மொழிகளிலும் மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன.

பத்மாவதி ஒரு நாட்டுப்புறக் கதை என்பதைத் தாண்டி உண்மையான சரித்திரக் கதை - ராஜபுத்ர பெண்ணின் உயிர் தியாகத்தைச் சொல்லும் கதையென்று பெயர் எடுத்துவிட்டது. ஒவ்வொரு தலைமுறையிலும் - அவர்களுக்கு ஏற்ற முறையில் சொல்ல பல வசீகரமான அம்சங்கள் இருப்பதால், நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர் என்று ஊடகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.

பத்மாவதி உண்மையான சரித்திரக் கதையில்லை. டில்லி சுல்தான் அலாவுதீனுக்கு, சித்தூர் ராணிக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இருவரும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்தவர்கள். இந்துக்களைக் கவர்வதற்காக - ராஜ்புத்ர பெண்ணின் தியாகத்தைச் சொல்வதற்காகச் சேர்த்துவிட்டார்கள் என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வதைக் கேட்க யாரும் தயாராக இல்லை. வட இந்திய இந்து மக்கள் பத்மாவதியைத் தங்கள் பெண்ணாகவே கருதுகிறார்கள். அவள் உயிர் தியாகம் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதற்குப் பங்கம் ஏற்பட்டிருக்கிறது என்ற நிலை ஏற்பட்டதும், கிளர்தெழுந்து போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். சில அரசியல் கட்சிகள் போராட்டக்காரர்கள் பின்னால் இருக்கிறார்கள்.

வட இந்தியாவில் சில மாநில அரசுகள் "பத்மாவதி' திரைப்படத்திற்குத் தடைவிதித்துவிட்டன. ஆனால், வங்க பெண் முதலமைச்சர் மம்தா பானர்ஜி "ஒரு திரைப்படத்தைத் திரைப்படமாகவே பார்க்க வேண்டும். அது வெளியாக, திரையிட அனைத்து உதவிகளும் செய்யப்படும்' என்று அறிவித்துவிட்டார்.

1963-ஆம் ஆண்டில் ஸ்ரீதர் - இளங்கோவன் வசனத்தில் பத்மாவதி கதை, "சித்தூர் ராணி பத்மினி' என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக வெளிவந்தது. எளிய முறையில் நாட்டுப்புறக் கதையை அப்படியே சொல்லும் திரைப்படம். சிவாஜி கணேசன், வைஜெயந்தி மாலா நடித்தது. கதையின் மீது விமர்சனம் எதுவும் கிடையாது. அதனால் பிரச்னை ஒன்றும் ஏற்படவில்லை.

மக்களுக்குத் தெரிந்ததொரு கதை மீது தன் கருத்தை ஏற்றிச் சொல்லும்போது - கதையென்பதே மாறி விடுகிறது. அதில் உள்ள கெட்ட நோக்கத்தைப் புரிந்துகொண்டதும், பதறிப் போய் கிளர்ச்சி , போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அரசின் கொள்கைகள், கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கப்படும்போது, அரசு தனக்குள்ள அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு திரைப்படத்திற்குச் சான்றிதழ் கிடைக்காமல் செய்துவிடுகிறது. சான்றிதழ் பெற்று வெளிவந்தால் கலவரம் ஏற்படும் என்று தடை விதித்துவிடுகிறது.

1952-ஆம் ஆண்டில் தீபாவளியின்போது திரையிடப்பட்ட படம் "பராசக்தி'. கலைஞர் மு. கருணாநிதிதான் திரைக்கதை வசனம். அவருக்கு அப்போது இருபத்தெட்டு வயதாகி இருந்தது. அவர் முற்போக்குவாதி, சமூக நீதிக்காகப் போராடும் திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவர். பராசக்தி இந்துக்களின் புனித அடையாளங்களை பரிகாசம் செய்கிறது; கடவுள் இல்லை என்கிறது. ஒருதரப்பு மக்களை இழிவாகச் சித்திரிக்கிறது. எனவே அதற்குத் திரைப்படத் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக் கூடாதென்று திரைப்படத் தணிக்கை வாரியத்தில் இருந்த உயர் அதிகாரி மணிக்கொடி சீனிவாசனிடம் முறையிட்டார்கள்.

அவர் தணிக்கைக் குழு சட்டத்தின் படி தன் கடமையைச் செய்யும். திரைப்படம் வெளிவந்ததும்; தங்கள் கருத்துகளைச் சொல்லவும், எழுதவும் அறிவுறுத்தி அனுப்பி விட்டார். பராசக்தி சிவாஜி கணேசனுக்கு முதல் படம். தமிழ் மக்கள் ஒரு புதிய கதாநாயகனைப் பார்த்தார்கள். தாங்கள் அதுவரையில் கேட்காத வசனங்களைக் கேட்டார்கள். புதியதொரு கதையை பார்த்தார்கள். திரைப்படம் பெரும்பான்மையானவர்களுக்குப் பிடித்திருந்தது.

சென்னை மகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு பராசக்தி பிடிக்கவில்லை. அதற்குத் திரைப்படத் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டது தவறானது என்று கருதினார். ஆனால், தடை விதிக்கவில்லை. மத்திய அரசுக்குத் தடை விதிக்கும்படி எழுதினார். ஆனால், அதற்கு மத்திய அரசு உடன்படவில்லை.
"பராசக்தி' தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கிறது.

திரைப்படத்திற்கான மக்கள் எதிர்ப்பு - அரசின் எதிர்ப்பு என்பதெல்லாம், திரைப்படத்தின் உள்ளே இருந்து வருகிறதா? வெளியில் உள்ள சமூக, அரசியல் காரணிகளால் உண்டாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இரண்டுந்தான் என்று பதில் சொல்ல வேண்டும். எதிர்ப்பு என்பது சுதந்திரத்தின் குரலை நெறிப்பதுதான். அதுவும் ஒவ்வொரு அரசும் கலைஞர்கள், படைப்பு எழுத்தாளர்கள், சினிமா இயக்குநர்கள், மகத்தான ஓவியர்கள், சிற்பிகள் கருத்துகளால் தங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதே காரணமாகிறது என்று பொதுவாகச் சொல்லிவிட்டாலும், சமூகப் பொறுப்பற்றவர்கள் பணம் சம்பாரிக்க ஆபாசப் படங்களும், தீவிரவாதிகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத் திரைப்படம் எடுப்பதும், சமூக நல்லுறவைக் குலைக்கும் விதமாக சமூக விரோதிகள் படமெடுத்து திரையிட சான்றிதழ் கொடுப்பதும் தடுக்கப்பட வேண்டியதுதான்.

சுதந்திரம் என்பது வரையறுக்க முடியாதது. ஒவ்வொரு நாட்டிலும் அரசியல், சமூக காரணிகளுக்கு ஏற்பப் பொருள் கொள்ளப்படுகிறது. அதன் நெகிழும் தன்மையே சுதந்திரம் பற்றிப் பேசவும், எழுதவும் வைக்கிறது.

திரைப்படம் கவர்ச்சிகரமான வெகுஜன ஊடகமாக இருப்பதால் அதன் மீதான ஒவ்வொரு நடவடிக்கையும் அதிகமான கவனம் பெற்றுவிடுகிறது. பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுத்தவர்கள் எளிதாக சமரசம் செய்து கொண்டு பிரச்னையைத் தீர்த்துக்கொண்டு விடுவார்கள். அதுதான் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருகிறது. "பத்மாவதி' திரைப்பட விவகாரத்திலும் அதுவே நடக்கப் போகிறது.

"என் மகள் தீபிகா'' - பிரகாஷ் படுகோன்

பிரபல முன்னாள் பேட்மின்ட்டன் விளையாட்டு வீரரும், நடிகை தீபிகா படுகோனின் தந்தையுமான பிரகாஷ் படுகோன், கடந்த பத்தாண்டுகளில் தன்னுடைய மகள் திரையுலகில் பிரபலமாக எடுத்துக் கொண்ட கடின உழைப்பு பற்றி இங்கு விவரிக்கிறார்:

உங்கள் மகள் தீபிகா விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுக்காமல் நடிப்புத் துறையில் பெற்றுவரும் வெற்றி குறித்து?
பெற்றோர் என்ற முறையில், தீபிகா அவராகத் தேர்ந்தெடுத்த துறையில் பேரும் புகழும் பெற்று வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு அவரது மன உறுதியும் கடின உழைப்பும்தான் காரணமாகும். அவரது எதிர்கால வாழ்க்கையிலும் அது தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
குழந்தை பருவத்தில் அவர் பேட்மின்ட்டன் பயிற்சி பெற்று தேசிய அளவில் விளையாடியதுண்டு. கூடவே அவருக்கு ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளிலும் ஆர்வமிருந்தது. அவரது முதல் விருப்பம் மாடலிங் ஆகும். சினிமா வாய்ப்பும் கூடவே வந்தது.

முதன்முதலில் தீபிகாவை திரையில் பார்த்தபோது உங்களுக்கு என்ன தோன்றியது?
முதன்முதலில் எங்கள் மகளை திரையில் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. பாலிவுட்டிற்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நேரத்தில், தீபிகா இந்தி திரையுலகில் நுழைவதற்கு ஷாரூக் கான், ஃபாரா கான் ஆகிய இருவரும் உதவியாக இருந்ததை மறக்க முடியாது. இன்று தீபிகா உயர்ந்த நிலையில் இருப்பதற்கு அவர்களே காரணம். முதல் படமான "ஓம் சாந்தி ஓம்' பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கடந்த பத்தாண்டுகளில் தீபிகாவின் வளர்ச்சி?
கடந்த பத்தாண்டுகளில் அவர் மிகவும் பொறுப்புள்ளவராக மாறியிருக்கிறார். தன்னுடைய தொழிலையும், வாழ்க்கையையும் எப்படி நிர்வகிப்பது என்பதில் தெளிவாக இருக்கிறார். 

தீபிகா நடித்த படங்களிலேயே உங்களுக்கு பிடித்தது எது?
"பாஜிராவ் மஸ்தானி''. அந்தப் படத்தில் தீபிகா ஏற்றிருந்த பாத்திரமும் நடிப்பும் எங்களைக் கவர்ந்தது. "ஓம் சாந்தி ஓம்' படத்தில் நடித்ததை விட இந்தப் படத்தில் அவரது நடிப்பு முதிர்ச்சி அடைந்திருப்பது சிறப்பாக இருந்தது.

தீபிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு சில நடிகைகளை போலவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதே?
தொடர்ந்தாற்போல் அவர் இடைவெளி இல்லாமல் நடித்து வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு அது. நல்ல வேளையாக ஆரம்பத்திலேயே எங்களது கவனத்துக்கு வந்ததால் உடனடியாக அவரை மன அழுத்தத்தில் இருந்து மீட்க முடிந்தது. 

"பத்மாவதி' திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
திரையுலகைப் பொருத்தவரை எப்போதுமே சர்ச்சைகள் என்பது ஒரு பகுதியாகும். நாங்கள் இந்த விவாதங்களில் கவனம் செலுத்துவதில்லை. இவை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். அதை எதிர்கொண்டே ஆக வேண்டும்.
-அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com