அனுபவம் பணத்தால் கிடைக்காது!

செல்வந்தர்களின் வீட்டில் பிறப்பவர்களை "பார்ன் வித் சில்வர் ஸ்பூன்' என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் திராவியா டோலக்யா.
அனுபவம் பணத்தால் கிடைக்காது!

செல்வந்தர்களின் வீட்டில் பிறப்பவர்களை "பார்ன் வித் சில்வர் ஸ்பூன்' என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் திராவியா டோலக்யா. சூரத்தைச் சேர்ந்த வைரத் தொழிலதிபர் டோலக்யாவின் மகன். 71 நாடுகளில் தொழில், ரூ.6 ஆயிரம் கோடி சொத்து என செல்வச் செழிப்பில் திளைப்பவர் திராவியா. 
இவரின் அப்பா டோலக்யா தனது நிறுவனத்தில் பணியாற்றும் 1,200 தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸôக கார், வீடு போன்றவற்றை வழங்கி உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தவர்.
அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தபோது படிப்புக்கு இடையே விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தார் திராவியா. அறுசுவை உணவுகள், நண்பர்களுடன் பார்ட்டி, விலையுர்ந்த பொழுதுபோக்கு என்று நேரத்தைச் செலவழிக்கலாம் என்று நினைத்தவருக்கு காத்திருந்தது புதிய சவால். சற்றும் பரிச்சயம் இல்லாத ஊருக்குச் சென்று வேலை பார்க்க வேண்டும் என்றார் அப்பா.
"என் மகனுக்கு மூன்று முக்கிய விதிமுறைகளை விதித்தேன். வேலை தேடி சம்பாதித்து அதில் வரும் பணத்தைக் கொண்டு தனக்குத் தேவையான உணவு, தங்குமிடம் ஆகியவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஓரிடத்தில் ஒரு வாரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது. திராவியா தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தவோ, செல்போனைப் பயன்படுத்தவோ, கையில் உள்ள ரூ.7 ஆயிரத்தையோ எந்தச் சூழலிலும் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் விதிமுறைகள்.
வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் ஏழை, எளிய மக்கள் ஒரு வேலைக்கும் பணம் சம்பாதிக்கவும் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதையும் கற்றுக் கொள்ளவே என் மகனை அனுப்பினேன். எந்த பல்கலைக்கழகமும் அவனுக்கு இதுபோன்ற வாழ்க்கையின் அனுபவத்தைக் கற்றுக் கொடுக்க முடியாது'' என்கிறார் டோலக்யா.

இது குறித்து மகன் என்ன சொல்கிறார்?:
"ஒரு பையில் மூன்று செட் துணிகள், குளிக்கத் தேவையான பொருள்கள், ரூ.7 ஆயிரம் பணம் ஆகியவற்றை மட்டுமே வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டேன். ஆனால் அந்தப் பணத்தையும் நான் செலவழிக்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தது. நான் கிளம்பும் வரை எங்கு போகப் போகிறேன் என்ற எந்தத் திட்டமும் இல்லாமல் இருந்தேன். என் அப்பா கேரள மாநிலம் கொச்சிக்கு டிக்கெட் வாங்கி வைத்திருந்தார். அப்போதுதான் நான் கேரளத்துக்குப் போகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டேன்
கேரளத்துக்கு வந்து சேர்ந்தேன். ஆங்கிலம், ஹிந்தி மட்டுமே எனக்குத் தெரியும், மலையாள வாசனை கூடத் தெரியாது. முதல் ஐந்து நாள்கள் சாப்பாட்டுக்கும், தங்குவதற்கும் மிகவும் சிரமப்பட்டேன். ஆறாவது நாள் ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு தயாராகும் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். அதே பேக்கரியில் பணிபுரியும் ஊழியர்களோடு தங்கி, அவர்களுடனேயே சாப்பாடு. ஒரு வாரம் முடிவடைந்தது.
மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வேறு வேலைத் தேடி போனேன். ஒரு பிரபல ஷூ விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது. பயிற்சிக்கு பிறகுதான் வேலைக்கு சேர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்ததால் அங்கிருந்து புறப்பட்டேன்.
அடுத்து ஒரு கால் சென்டரில் வேலை கிடைத்தது. அந்த நிறுவனம் சூரியமின் உற்பத்தி தொடர்பான சேவையை அமெரிக்காவுக்கு அளித்து வந்தது.
நான் திறமையாக பணியாற்றியதால் தினக்கூலி அளிக்க ஒப்புக் கொண்டனர். ஆனால் அந்தப் பணம் எனக்கு போதவில்லை. அங்கு பணியாற்றியபோது ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சாப்பிடுவேன். அதுவும் ஒரு சாம்பார் சாதம் மட்டுமே. மாலையில் அதே நிறுவனத்தில் பிஸ்கட் கொடுப்பார்கள். அவ்வளவு தான் என் உணவு. ஒரு வாரம் முடிந்ததும் அங்கிருந்தும் கிளம்பினேன்.
இறுதியாக பிரபலமான ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.30 சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன். ஆனால் அங்கு தொடர்ந்து பணியாற்றவில்லை. காரணம் அப்பாவின் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்துச் செல்ல ஆள்கள் வந்தனர். கடைசி இரண்டு நாள்கள் நான் பணிபுரிந்த அனைத்து இடத்துக்கும், என்னுடன் நட்பு பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பரிசுகள் அளித்து விடைபெற்றேன்.
ஒரு மாத காலப் பயணத்தில் நிராகரிப்பு என்றால் என்ன, ஒரு வேலையின் மதிப்பு என்ன என்பதை உணர்ந்தேன். ஏனென்றால் 60 இடங்களில் எனக்கு வேலை நிராகரிக்கப்பட்டது. நான் வேலை பார்த்த இடங்களில் குஜராத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன் என்றும், பிளஸ் 2 வரை படித்துள்ளேன் என்றும் கூறினேன். விலைப் பட்டியலைப் பார்க்காமலேயே பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் பணம் படைத்த குடும்பத்தில் பிறந்த நான், ஒரு வேளை சாப்பாட்டுக்கு ரூ.40 கிடைக்காமல் கஷ்டப்பட்டேன்.
பொதுவாக பெற்றோர் தங்களது பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்றே நினைப்பார்கள். ஆனால் என் அப்பாவோ அந்தக் கஷ்டங்களை எப்படி சமாளிப்பது என்று எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் இதுபோன்ற அனுபவங்களை வாங்க முடியாது.
பல நேரங்களில் அடுத்தவர்களின் கஷ்டங்களைக் கண்டு கொள்ளாமல் கோபப்படுவதுண்டு. இந்த ஒரு மாத கால அனுபவம், அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கற்றுக் கொடுத்தது.
ஒரு கடையில் குறிப்பிட்ட ஆவணத்தை நகலெடுக்கச் சென்றேன். அங்கிருந்த பெரியவர் என்னிடம் காசு வாங்கவில்லை. "உனக்கு வேலை கிடைத்ததும் வந்து பணம் கொடு'' என்றார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் எனக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் அவருடனேயே என்னை தங்க வைத்து, எனக்கு உணவும் கொடுத்தார். இப்படி பல மறக்க முடியாத நபர்களை நான் சம்பாதித்திருக்கிறேன்'' என்கிறார் திராவியா.
கூடுதல் தகவல் என்னவென்றால், திராவியாவின் குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் இதற்கு முன்பே இதே அனுபவபங்களைப் பெற்றுள்ளனர்!
- ஜெனி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com