சாதனைகள் நிறைந்த மாற்றுத் திறனாளிகள் உலகம்

குறைபாட்டுடன் வாழ்வதில் உள்ள சாதனைகளையும் சவால்களையும் வெளிப்படுத்தும் 2017}ஆம் ஆண்டுக்கான புகைப்படங்களுக்கும்,
சாதனைகள் நிறைந்த மாற்றுத் திறனாளிகள் உலகம்

குறைபாட்டுடன் வாழ்வதில் உள்ள சாதனைகளையும் சவால்களையும் வெளிப்படுத்தும் 2017}ஆம் ஆண்டுக்கான புகைப்படங்களுக்கும், கட்டுரைகளுக்கும் பரிசு வழங்கும் விழாவை சென்ற வாரம் அனைத்துலக ரெட்கிராஸ், பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா இணைந்து நடத்தின.
திருவனந்தபுரம் "மலையாள மனோரமா' நாளிதழின் முதன்மை நிருபர் மஹேஷ் குப்தனின் "அவர்களும் நம் செல்லப் பிராணிகள்தாம்' என்ற கட்டுரைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு "மலையாள மனோரமா' முதன்மை சப் எடிட்டர் டி. அஜீஷுக்கு "வீல் சேர் வாழ்க்கை' என்ற கட்டுரைக்குக் கிடைத்தது. மூன்றாம் பரிசு, "ஏபிள் டு இன்ஸ்பயர்' என்ற ஆங்கிலக் கட்டுரையை "தி வீக்' பத்திரிகையில் எழுதிய மினி தாமஸ் பெற்றார்.
புகைப்படங்களில் முதல் பரிசு ஹிமான்ஷு வியாசுக்கு அளித்தார்கள். இவர் ஜெய்ப்பூர் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் சிறப்புப் புகைப்படக் கலைஞர். இவருடைய நேஷனல் வீல் சேர் டிராயாங்குலர் டி}20 கிரிக்கெட் புகைப்படங்கள் இவருக்கு இந்தப் பரிசை வாங்கிக் கொடுத்திருக்கின்றன. இவை பேசும் புகைப்படங்கள். (ஓர் ஆட்டக்காரர் பந்தைப் பிடிக்கும் ஆவேசத்தில், வீல் சேரிலிருந்து விழுந்து அதைப் பிடித்திருக்கும் நிலையை இவர் "படம் பிடித்து'க் காட்டியிருக்கிறார்!)
இரண்டாவது பரிசு பெற்ற புகைப்படக் கலைஞர் ராஜ்.கே.ராஜ், "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் சிறப்புப் புகைப்படக் கலைஞர். தில்லி இந்தியா கேட் அருகே மக்களை மகிழ்விக்கும் குள்ளரான சார்லி மாமாவைப் பல கோணங்களில் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளியிருக்கிறார். 
மூன்றாவது பரிசு பெற்ற புகைப்படக் கலைஞர் குனால் பி. பண்டிட். இவரும் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' சிறப்புப் புகைப்படக் கலைஞரே. "இழந்தவை கரங்கள்}கனவுகள் அல்ல' என்ற தலைப்பில், இந்தியாவின் பாரா ஸ்விம்மர் நீச்சல் போடும் துணிச்சலைப் படமாக்கியிருக்கிறார். 
தலைமை வகித்த சந்தோஷ் பாபு ஐஏஎஸ், வித்தியாசமான அரசு அதிகாரி. "சாதனைகளை எழுதுங்கள். பிறர் பின்பற்றுவார்கள்' என்றார். இவர் தமிழ்நாடு கைவினைகள் கார்ப்பரேஷனின் சி.எம்.டி. 
தில்லியிலிருந்து வந்திருந்த ரெட் கிராஸ் இன்டர் நேஷனலைச் சேர்ந்த ஜெரமி, ""மொழி மக்களுக்கு அடையாளத்தை (லேபிள்) சூட்டிவிடுகிறது. அந்த அடையாளங்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. உலகில் எங்குமே மொழி சரியாகக் கையாளப்பட்டதாக நான் காணவில்லை!'' என்றார்.
ஆமாம், தமிழ்நாட்டுப் புகைப்படக் கலைஞர்கள் கண்ணில் இதுபோன்ற மாற்றுத் திறனாளி சாதனையாளர்கள் படவில்லையா, அல்லது இவர்களைப் படமெடுத்து என்ன புண்ணியம் என்று கண்ணை மூடிக்கொண்டார்களா, தெரியவில்லை. 
- சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com