முத்துக்குமார் கொடுத்த பணம்!

குறைந்த வயதில் சாதனை செய்தவர்களும் உண்டு. நிறைந்த வயதில் சாதனை செய்தவர்களும் உண்டு. நிறைந்த வயது வாழ்ந்து எந்த விதமான சாதனைகள் செய்யாமல் போனவர்களும் உண்டு.
முத்துக்குமார் கொடுத்த பணம்!

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -31
குறைந்த வயதில் சாதனை செய்தவர்களும் உண்டு. நிறைந்த வயதில் சாதனை செய்தவர்களும் உண்டு. நிறைந்த வயது வாழ்ந்து எந்த விதமான சாதனைகள் செய்யாமல் போனவர்களும் உண்டு.
கம்பியில்லாத் தந்தியை மார்க்கோனி கண்டுபிடித்த போது அவருக்கு வயது 29. இன்றைக்கு இணையதளமும் செல்போனும் வந்த பிறகு கம்பியில்லாத் தந்திக்கு வேலையில்லாமல் போய்விட்டது. பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்துமுறையை லூயிஸ் பிரையில் கண்டுபிடித்தபோது அவருக்கு வயது 20. ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ் காசநோயால் மறைந்தபோது அவருக்கு வயது 26. இவர் எழுதிய "இசபெல்லா' என்ற கதைக் கவிதையைத் தழுவித்தான் "எழிலரசி' என்ற குறுங்காவியத்தை 1933-ஆம் ஆண்டு பேராசிரியர் இலக்குவனார் படைத்தார்.
கணிதமேதை இராமானுஜம் காசநோயால் மறைந்தபோது அவருக்கு வயது 32. ஆதி சங்கரர் மறைந்தபோது அவருக்கு வயது 32. திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரும், சமயகுரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரும் மறைந்தபோது அவர்களுக்கு வயது 32.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் மறைந்த போது அவருக்கு வயது 32. இவரை வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் மாறன் சடகோபன் என்றும் இலக்கியங்கள் போற்றிப் புகழும். கம்பர் இராமாயணத்தைத் திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றம் செய்வதற்கு முன்பு இவரைப் பற்றித்தான் சடகோபர் அந்தாதி பாடினார்.
மாவீரன் அலெக்சாண்டர் மறைந்தபோது அவன் வயது 33. ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்தபோது அவர் வயது 33.
காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் மறைந்தபோது அவர் வயது 31. பக்தித் தமிழ்மூலம் பைந்தமிழை வளர்த்த திருஞான சம்பந்தர் மறைந்தபோது அவர் வயது 16. திருவாசகத்தை ஆங்கிலத்தில் ஜி.யு. போப் மொழி பெயர்த்த போது அவர் வயது 79.
தினமணி ஆசிரியராக இருந்த ஏ.என். சிவராமன் தன்னுடைய 92-ஆவது வயதில் தான் அரபி மொழியைக் கற்றுக் கொண்டார். அரபி மொழி மூலம்தான் குரான் படித்தார். கலைஞர் கருணாநிதி "உளியின் ஓசை' படத்திற்கு வசனம் எழுதும்போது அவர் வயது 85. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்தபோது அவர் வயது 29.
திரைக்கவிஞர்களில் குறைந்த வயதில் பலர் மறைந்திருக்கிறார்கள் என்றாலும் அண்மைக் காலக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்தவர் நா. முத்துக்குமார்.
சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளைப் பலமுறையும் மத்திய அரசின் விருதை இருமுறையும் பெற்றவர். அவரது பாடல்களில் பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும் என்றாலும்,
"சுட்டும் விழிச் சுடரே சுட்டும்விழிச்சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே'
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். கண்களைக் கறுப்பு வெள்ளைப் பூக்களென்றும், வண்டை உண்ணும் பூக்கள் என்றும் அவர் சொல்லிய நேர்த்தியை யாரும் மறக்கமுடியாது. "உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்' என்று அவர் சொன்னதுபோல் இதுவரை எந்தக் கவிஞரும் சொன்னதில்லை.
2013 -ஆம் ஆண்டு தமிழக அரசு எனக்குக் கபிலர் விருது வழங்கியது. கபிலர் விருது கம்பர் விருது, உ.வே.சா. விருது, சொல்லின் செல்வர் விருது போன்ற பல விருதுகளை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து முதன்முதல் கபிலர் விருதை எனக்குத்தான் வழங்கினார். அப்போது கால் நரம்பு பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்தேன். தமிழ் வளர்ச்சித்துறை அனுப்பிய அரசு வண்டியில் ஒருவர் உதவியுடன் ஏறிச் சென்றுதான் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கரத்தால் அதைப் பெற்றேன். நீண்டநேரம் அப்போது நிற்கவும் முடியாது. பிசியோ தெரப்பி முறையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன்.
இதைக் கேள்விப்பட்ட நா. முத்துக்குமார் அப்போது குமுதம் பத்திரிகையில் சினிமா நிருபராக இருந்த தேனி கண்ணனிடம் 25 ஆயிரம் ரூபாய்க்குக் காசோலை கொடுத்து அனுப்பியிருந்தார். அப்போது என்னிடம் பணம் இருந்தது. அதனால், "முத்துக்குமார் கொடுத்ததற்கு நன்றி. என்னிடம் பணம் இருக்கிறது. அதனால் காசோலையைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்'' என்று சொல்லி தேனி கண்ணனிடமே கொடுத்து அனுப்பிவிட்டேன்.
ஆனால் முத்துக்குமார் அதை ஏற்க மறுத்து, "ஐயா முத்துலிங்கம் மீது மிகவும் மதிப்பு வைத்திருக்கிறேன். என்னுடைய மரியாதையின் அடையாளமாகவாவது அவரை வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்'' என்று திருப்பி அனுப்பினார். நானும் அவர் அன்பின் காரணமாக அதை ஏற்றுக் கொண்டேன். இள வயதிலேயே மிகப்பெரிய சாதனை படைத்தவர் அவர். எந்த வயதிலும் எவரும் சாதனை படைக்கலாம். வயது அதற்குத் தடையில்லை என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு.
கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்த காலத்திலே பாட்டெழுத வந்து அவருக்கிணையாகக் கோடம்பாக்கத்தில் கொடிகட்டிப் பறந்தவர் வாலி ஒருவர்தான். எது கண்ணதாசன் பாடல் எது வாலி பாடல் என்று தெரியாமல் பலருக்கும் மயக்கத்தைத் தந்த பாடல்கள் அவர்கள் பாடல்கள்.
"உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் வாலி எழுதிய "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே" என்ற பாடலை ஒருமுறை மேடையிலேயே கண்ணதாசன் எழுதியது என்று ஞாபக மறதியில் சொல்லிவிட்டார் அண்ணன் எம்.எஸ். விஸ்வநாதன். அந்தப் படத்திற்கு இசையமைத்ததே அவர்தான். அவருக்கே கண்ணதாசனா வாலியா என்று மயக்கம் ஏற்படுமானால் கண்ணதாசனும் வாலியும் அந்த அளவுக்கு சமமான புலமைத்திறன் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம்.
இதைப் போல் கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் காரில் போய்க் கொண்டிருக்கும் போது வானொலியில் "இருமலர்கள்' படத்தில் இடம் பெற்ற "மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்" என்ற பாடல் ஒலிபரப்பானது. அதைக் கேட்டு முடித்த கண்ணதாசன், ""எப்படி விசு இருக்கிறது நான் எழுதிய இந்தப் பாட்டு? எப்போது கேட்டாலும் இந்தக் கரகரப் பிரியா ராகம் நன்றாகத்தான் இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்.
உடனே விஸ்வநாதன், "அண்ணே இது நீங்கள் எழுதிய பாட்டல்ல; வாலி எழுதிய பாட்டு'' என்றார். அதற்கு கண்ணதாசன், ""வாலி எழுதியதா? நான் எழுதியது போலல்லவா இருக்கிறது. வா போய் வாலியைப் பாராட்டிவிட்டுப் போவோம்'' என்று அயல்நாட்டு மதுபாட்டில் ஒன்று வாங்கிக் கொடுத்து வாலியைப் பாராட்டினாராம். இது அண்ணன் விஸ்வநாதன் என்னிடம் சொன்ன செய்தி.
கண்ணதாசனுக்கே தான் எழுதியதா, வாலி எழுதியதா என்று மயக்கம் ஏற்பட்டதென்றால் இருவரும் புலமைத்திறத்தில் சமமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதுதானே பொருள். இதைவிட வாலிக்கு என்ன சிறப்பு வேண்டும்?
அதனால்தான் தான் எழுத வேண்டிய ஒரு பாடலை வாலியை வைத்து எழுதிக் கொள்ளுங்கள் என்றார் கண்ணதாசன். வாலியிடமும் "நான் ஊரிலிருந்து வந்ததும் உங்களுக்குப் பணம் தருகிறேன். அந்தக் கம்பெனியில் வாங்க வேண்டாம்' என்றார்.
கண்ணதாசன் ஊரில் இருந்து வந்தவுடன் பாட்டைக் கேட்டுவிட்டு பாடல் நன்றாக இருக்கிறது. வாலியின் பெயரையே அந்தப் பாடலில் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல, எனக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்களோ அதே தொகையை அவருக்குக் கொடுத்துவிடுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார். கவிஞர்களெல்லாம் பெருந்தன்மையுடன் திகழ்ந்த காலம் அது.
அதுவரை கண்ணதாசன் பெயரில்தான் அந்தப் படத்தின் பாடல்கள் வருவதாக இருந்தது. கண்ணதாசனுக்குப் பதிலாக வாலி எழுதி அந்தப் பாடல்தான் "முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்" என்ற பாடல். இப்பாடல் இடம் பெற்ற படம் "நெஞ்சிருக்கும் வரை' டைரக்டர் ஸ்ரீதர் செய்த படம்.
இருக்கும் வரையிலும் எழுதிக் கொண்டே, இயங்கிக் கொண்டே இருந்த சினிமா கவிஞர் அவர்தான். ஒருவன் இயங்கிக் கொண்டே இருந்தால்தான் வாழ்கின்றவர்கள் பட்டியலில் வைக்கப்படுவான். சோம்பல் காரணமாக இயங்காமல் இருந்தால் இறந்தவர்கள் பட்டியலில்தான் சேர்க்கப்படுவான்.
பூமிப் பந்து சுழன்று கொண்டே இருப்பதைப் போல, நதிகள் ஓடிக்கொண்டே இருப்பதைப் போல, காற்று வீசிக் கொண்டே இருப்பைதப் போல ஒருவன் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதைத்தான் அப்துல்கலாம், ""மூச்சு நின்று விடுவதல்ல மரணம். முயற்சி நின்று விடுவதே மரணம்'' என்றார். ஆகவே ஒருவன் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் முன்னேறுவதற்கு. அப்படிப்பட்டவன்தான் வாழ்க்கையில் வெற்றிக் கோட்டைத் தொடுவான்.
அந்த வகையில் 82 வயதிலும் திரைப்பாடல்கள் எழுதி சாதனை செய்து வெற்றிச் சிகரத்தைத் தொட்ட திரைப்படக் கவிஞர் வாலி ஒருவர்தான். உலகத் திரைப்பட வரலாற்றில் ஏறத்தாழ ஒன்பதாயிரம் பாடல்கள் வரை எழுதிய கவிஞரும் இவர்தான். இவரை ஒதுக்கிவிட்டு மற்றைய திரைப்படக் கவிஞர்களைச் சொல்லுவது வலம்புரி ஜான் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ஈரலை அறுத்தெறிந்துவிட்டுக் காற்று வாங்கக் கடற்கரைக்குச் செல்வதைப் போன்றதாகும்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com