கோவிந்தவாடி கிராமத்தின் தட்சிணாமூர்த்தி!

காஞ்சிபுரம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமமான கோவிந்தவாடி, ஞானத்தை அளிக்கும் சிவனின் வடிவமான தட்சிணாமூர்த்தி சுவாமி கோயிலுக்காகப் புகழ் பெற்ற ஊராகும்.
கோவிந்தவாடி கிராமத்தின் தட்சிணாமூர்த்தி!

காஞ்சிபுரம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமமான கோவிந்தவாடி, ஞானத்தை அளிக்கும் சிவனின் வடிவமான தட்சிணாமூர்த்தி சுவாமி கோயிலுக்காகப் புகழ் பெற்ற ஊராகும். வியாழன் கிரகத்தின் முதன்மை கடவுள் என்றும், பிரஹஸ்பதி என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
சிநேகர், சனந்தனர் என்ற முனிவர்கள் இரு பக்கங்களிலும் வீற்றிருக்க தட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இந்த சிலை தெற்கு பக்கத்தில் இருப்பதால் கோயில் வளாகத்தில் தெற்கு வாயில் தற்போது பயன்பாட்டில் உள்ளது. எனினும், கைலாசநாதர் என்ற பெயரில் வழிபடப்படும் சிவபெருமான் சந்நிதி, துவஜஸ்தம்பத்துடனும் நந்தி மண்டபத்துடனும் கோயிலின் கிழக்கு வாயில் முன்பு அமைந்துள்ளது. 
பிரதான லிங்கத்தின் முன் அமைந்துள்ள மண்டபத்தின் சோழர் காலத் தூண்கள், இந்தக் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. இங்குள்ள கல்வெட்டுகளும் அதை உறுதிசெய்கின்றன. அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் இக்கோயிலில் வழிப்படப்படும் பார்வதி தேவியின் சந்நிதி, கைலாசநாதர் சந்நிதிக்கு அருகிலும் தெற்கு முகமாகவும் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள், கால பைரவர், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள் ஆகிய கடவுள்களும் இக்கோயிலில் வழிப்படப்படுகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பழைமையான கல்வெட்டு பேரரசன் முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி.1012-1044) ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. கி.பி.1021 வருடத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டில், அருகிலுள்ள மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க ஊரான தக்கோலத்தில் உள்ள நிலத்தை இக்கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 
பிற்காலத்தைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் யோகானந்த தீர்த்த ஸ்வாமி என்பவர் தட்சிணாமூர்த்தியின் பக்தராக இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, வேறொரு கல்வெட்டில் கைலாசநாதர் மீதும் தட்சிணாமூர்த்தி மீதும் பக்தி கொண்ட ஒருவர், கோயிலுக்கு நில தானம் அளித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிந்தவாடிக்கு அருகிலுள்ள கூரம் கிராமம், பழைமையான வரலாற்று சிறப்புமிக்க இரு கோயில்களுக்காகப் புகழ் பெற்றது.
சோழர் கால கல்வெட்டு: முதலாம் ராஜேந்திர சோழனின் 11-ஆவது கல்வெட்டு இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்டது.
தேவியின் பெயர்: பார்வதி தேவி இங்கு அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டு பிரதான கடவுள்கள்: கைலாசநாதர், தட்சிணாமூர்த்தி ஆகிய இரு கடவுள்களும் இங்கு வழிபடப்படுகின்றன.
அமைவிடம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தைக் கடந்து சென்று கோவிந்தவாடியை அடையலாம். காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில் இந்த கிராமம் உள்ளது.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் - கோயில் சிற்பங்கள் ஆய்வாளர்
தமிழில்: பிரவீண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com