ஷங்கர், முருகதாஸ் படங்களில் நடிக்க ஆசை

"வேலைக்காரன்' முழுக்கவே ஆக்ஷன் த்ரில்லர். முக்கியமான சினிமாவாகவும் இருக்கும். "தனி ஒருவன்'-இல் அசத்தின மோகன் ராஜா, இதில் இன்னும் அழுத்தமான திரைக்கதை தந்திருக்கிறார்.
ஷங்கர், முருகதாஸ் படங்களில் நடிக்க ஆசை

சிவாவின் அடுத்த சினிமா "வேலைக்காரன்'. படத்துக்கு படம் காமெடி விருந்து வைக்கிறவர், இப்போது முதன் முறையாக சீரியஸ் சினிமா பக்கம் வருகிறார்.
"சினிமாவில் என் போக்கில் ஓடிக் கொண்டு இருக்கிறேன். அப்போது நடிக்கிற படங்களைப் பற்றி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிக் கொண்டு இருக்கும். ஆனால், ஹீரோயின் பின்னாடி சுற்றுவது, பிக்கப் செய்வது என எனக்கே ஒரு சலிப்பு. அதுதான் அடுத்த கட்டத்துக்கு போய் விட்டேன். 

"வேலைக்காரன்' முழுக்கவே ஆக்ஷன் த்ரில்லர். முக்கியமான சினிமாவாகவும் இருக்கும். "தனி ஒருவன்'-இல் அசத்தின மோகன் ராஜா, இதில் இன்னும் அழுத்தமான திரைக்கதை தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரைக்கும் "ஏன் இப்படி நடக்குது?', "அடுத்து என்ன நடக்கப்போகிறது ?'- இண்டு கேள்விகளும் உங்களைத் துரத்திட்டே இருக்கும்!'' நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் சிவகார்த்திக்கேயன். படத்துக்கு படம் ஏறும் வர்த்தகம், அடுத்தடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது.

ஹீரோ மூலமாக "தனி ஒருவன்'-இல் சமூகத்துக்கு மெசேஜ் சொன்னவர் மோகன் ராஜா. அவர் இயக்கும் "வேலைக்காரன்' படத்துக்கு எப்படி உங்களை டியூன் செய்து கொண்டீர்கள்?
ஏன் பாஸ் நாங்களும் சமூகத்துக்கு மெசேஜ் சொல்லக் கூடாதா? மோகன்ராஜாவின் "தனி ஒருவன்' படத்தில் ஒவ்வொரு வசனமும் பவர்ஃபுல்லா இருக்கும். "வேலைக்காரன்' படமும் சீரியஸ் மெசேஜ் சொல்கிற படம்தான். ஆனால், அதை செம ஜாலியாகவும் சொல்லியிருப்பார். ஒரு படம், ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்; இல்லையென்றால் ஓர் அனுபவம் கொடுக்க வேண்டும்; அதுவும் இல்லையென்றால் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும். "வேலைக்காரன்' ரசிகர்களுக்கு இந்த மூன்று அனுபவங்களையும் கொடுக்கும்.

முழுதாக தயாரான பின் எப்படியிருக்கிறது "வேலைக்காரன்'?
மாறிக் கொண்டே இருக்கிற இந்த வாழ்க்கைதான் கதை. தமிழ் சினிமாக்கள் பேசாத வாழ்க்கை இல்லை. இருந்தாலும், இந்த வாழ்க்கை ஆச்சரியம்தான். காதல், குடும்பம், அன்பு எல்லாவற்றுக்கும் பிரதானமாக இருப்பது பணம்தான். அது இருந்தால்தான் வாழ்க்கை அழகாக மாறும். இல்லையென்றால் இங்கே யாரும் இல்லை. இங்கே எல்லாவற்றையும் தீர்மானிப்பது பணம்தான். காதல், காமம் கூட இங்கே பணத்தால் தீர்மானிக்கப்படும் நிலை வந்திருப்பது வருத்தமான விஷயம். அதிகபட்ச எதிர்பார்ப்பு எழும் போதுதான் இங்கே உறவுகளுக்குள் சிக்கல். அதே நேரத்தில் பணத் தேவைக்காக இன்னொருவரை சார்ந்து இருக்காத பெண்கள் பெருகி வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் குவித்து ஒரு மையமாக்கி கதை சொல்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. குடும்பம், தனி மனித வாழ்க்கை, சமூகம் என எல்லா பக்கங்களிலும் ஒரு சீரியஸ்தனம் இருப்பது இந்த கதையின் சிறப்பு அம்சம். 

ஆரம்பக் கட்டத்திலேயே அசுரமாக தெரிகிறது உங்கள் வளர்ச்சி... இதை இன்னும் பல ஆண்டு காலம் கொண்டு செல்வது உங்களுக்கு இருக்கும் பெரும் சவால். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 
அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்கிறேன். பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனின் வாழ்க்கை. "Life of an actor gets tough and tougher’ என்று சொல்லுவார்கள். ஒரு நடிகன் தன் இமேஜை, இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, கஷ்டத்துக்கு மேல கஷ்டம் அனுபவித்தே தீர வேண்டும். 
இருபது, முப்பது வருடங்களாக ஒரு நடிகனைத் தலை மேல தூக்கி வெச்சுக் கொண்டாடுகிற ரசிகர்கள் திடீரென்று அவனை வெறுக்க ஆரம்பித்தால், அதற்கு முழுக் காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகர்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் இப்போது மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். 

உங்களுக்கென ஒரு மார்க்கெட் உருவாகி வளர்ந்து வந்திருக்கிறது. இதில் யாரைப் போட்டியாக பார்க்கிறீர்கள்?
சினிமா போட்டி என்பது ஒரு டிரெண்ட்தான். அந்த கால கட்டங்களில் யார் யார் படம் ஓடுகிறதோ, அவர்களை இணைத்து வைத்து பேசுவது, எழுதுவது என காலம் காலமாக இங்கே நடந்துக் கொண்டே இருக்கிறது. நடிகர்களுக்குள் போட்டி இருக்காது. ஆனால், அவரவர்களின் ரசிகர்கள் இன்னொரு நடிகரைப் போட்டியாகப் பார்த்து வருவார்கள். யோசித்தால், எனக்குப் போட்டி என்று யாருமே இல்லை. ஒரே பாதையாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசம் காட்டி படம் நடிக்கிறவன் நான். அதனால் ஹீரோக்கள் என்னைப் போட்டியாக நினைக்கிறது இல்லை. அப்படி ஒரு சூழல் வந்தால், எனக்குப் போட்டியாக யாரையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். இப்போதைக்கு போட்டி என்றால் அது என் முந்தைய படமான "ரெமோ'தான். உழைப்பு, அனுபவம், வர்த்தகம் என எல்லாவற்றையும் அதை விட ஒரு படி மேல் போய் நிற்க வேண்டும் என்ற இலக்கு வைத்துதான் வேலை பார்த்திருக்கிறேன். சக நடிகர்கள் யாரும் எனக்குப் போட்டி இல்லை. 

நடிகர்கள்தான் சகட்டு மேனிக்கு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை எப்படி பார்க்கிறீர்கள்? 
ஜாலியான மீம்ஸ்களை எல்லாரையும் போல நானும் ரொம்பவே ரசிக்கிறேன். கடுமையான விமர்சனங்களில் இருக்கும் நியாயத்தை மட்டும் கவனிச்சு, என் அடுத்தடுத்த படங்களில் திருத்திக் கொள்கிறேன். பொதுவாக, எல்லா ஹீரோக்களைப் பற்றியும்தான் சோஷியல் நெட்வொர்க்குகளில் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் தாக்குதலாக, அவர்களின் மனதைப் புண்படுத்துவது மட்டுமே நோக்கமா இருக்கும் விமர்சனங்கள்தான் நிறைய இருக்கிறது. அப்படியான விமர்சனங்களை நான் கண்டுக்கவே மாட்டேன். "ரெமோ' படத்தை விமர்சனம் செய்யும் போது கூட, இது சமூக அவலம் என்பது போல் எழுதினார்கள். அந்தளவுக்கு அந்தப் படத்தில் என்ன இருந்தது என்பது தெரியவில்லை. அது ஒரு காமெடி படம். அப்படியே அதை பார்த்திருக்க வேண்டும். 

சினிமா கேரியரில் முக்கியமான கட்டத்தில் இருக்கிறீர்கள்.... அடுத்து எந்தெந்த இயக்குநர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை..?
எந்த இயக்குநராக இருந்தாலும் சரி. அது மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். வாழ்நாள் லட்சியம் என்றால் அது ஷங்கர் சார், முருகதாஸ் சார் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் என்னை அழைக்க வேண்டும் என்றால், அவர்கள் கண்ணுக்கு தெரிகிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும். அதற்கான முதல் கட்டம்தான் இந்த "வேலைக்காரன்'. அதற்கு ஏற்ற படங்கள், திறமை, மனசு, உடம்புனு எல்லா விஷயங்களையும் தயார் செய்து கொண்டே இருக்கிறேன். இதுதான் இப்போதைக்கு என் கனவு. அதை நனவாக்க ஓடிக் கொண்டே இருக்கிறேன்.
ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com