பிடித்த பத்து: என் தாய்தான் என் முதல் குரு

நான் மேடை ஏறிய சமயம், இவை இரண்டும் சாதாரணமாக என்னுடன் இணைந்தன. பின்னர் அதுவே பிரதானமாக
பிடித்த பத்து: என் தாய்தான் என் முதல் குரு

பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருது பெற்றவரும், கர்நாடக மற்றும் திரை இசை பாடகியுமான சுதா ரகுநாதன் தனக்கு பிடித்த பத்து பற்றி கூறுகிறார்: 

இசை: என்னை பொருத்தவரை எனக்கு இசை தான் எல்லாமே. எனது உயிர் மூச்சே அதுதான்.எந்த வகையான இசையாக இருந்தாலும் என்னை அது மயக்கும். கர்நாடக இசை மட்டும் அல்லாமல் ராக், ஜாஸ், சூஃபி, பாப், திரைப்பட இசை  என்று நல்ல இசை எங்கிருந்தாலும் நான் கேட்காமல் சென்றதில்லை. அதே போல்தான் எல்லா இசை கலைஞர்களையும் நான் மிகவும் மதிப்பவள், அவர்களது திறமையைப்  பாராட்டுபவள். "இசை கேட்டால், புவி அசைந்தாடும்' என்பது தெரிந்த ஒன்று தானே.   

குரு: எனது தாயார் சூடாமணி தான் எனது முதல் குரு. அவரிடம் நான் ரொம்பவும் சாதாரணமாக கற்று கொண்டேன் அதாவது குரு சிஷ்யை என்ற பாவம் இல்லாமல்.  பலமுறை புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவைச் சந்தித்து உள்ளேன் . அவர் என்னை அழைத்ததே "கீத சுதா' என்று தான். திடீரென்று தனது கையால் வரவழைத்து பல பரிசுகளை எனக்கு அளித்துள்ளார். அவர் எதிரில் பஜன் பாடிய பெருமையும் எனக்கு உண்டு. கல்லூரி வாழ்க்கை முடிந்த உடன் மருத்துவ துறையில் கால் ஊன்ற விருப்பம். அப்பாவுக்கோ நான் ஐஏஎஸ், ஐஎப்எஸ்  படிக்க வேண்டும் என்பது விருப்பம். இந்த சமயத்தில் தான் சங்கீத கலாநிதி எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் சிஷ்யை ஆனேன். அவர் எனக்கு பாட்டை மட்டும் கற்று கொடுக்கவில்லை. வாழ்க்கை முறையையும் கற்று தந்தார். இன்று நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு  காரணம் சத்ய சாய் பாபாவும், என் குருநாதரும் தான்.

பட்டுப் புடவை -மல்லிகை பூ: நான் மேடை ஏறிய சமயம், இவை இரண்டும் சாதாரணமாக என்னுடன் இணைந்தன. பின்னர் அதுவே பிரதானமாக ஆகிவிட்டது. இன்று நான் மேடையில் அமர்வதற்கு முன் வீட்டிலேயே இதற்காக தனியாக பட்டுப் புடவை எடுத்து வைத்துள்ளேன். அதே போன்று மல்லிகைப் பூ பல சமயங்களில் வாடி விடுவதால் ஆஸ்திரேலியாவில் உள்ள எனது ரசிகை ஒருவர் கொடுத்த செயற்கை "பூ' வை தலையில் வைத்துக் கொண்டு தான் இப்போதெல்லாம் கச்சேரிக்கு செல்கிறேன். ஆனால் இது சென்னைக்கு கிடையாது. வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கு மட்டும் தான்.

குடும்பம்: எனது  கணவர் ரகுநாதன்தான் என்னுடைய பலம். என்னுடைய சுதந்திரத்தில் என்றுமே தலையிடாதவர். கச்சேரிக்கு செல்லும் பொது இந்த பாடலைத் தான் பாட வேண்டும் என்றோ அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ சொல்லாதவர். என்னுடைய குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோது அவர்களுடன் நான் அதிக நேரம் செலவழிக்கவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கும் இருந்தது. என் மேல் என் குடும்பத்தார் அனைவருக்கும் அதிகமான பாசமும், பிரியமும் உண்டு. என் மகனுக்கு வாய்த்த மனைவியும் எனது வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர். என்னைப் பற்றி வெளியே அவர்கள் பெருமையாக பேசுவதை பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன். அவர்கள் நல்ல விமர்சகர்கள்.

வெளிநாடு: இசை என்னை பல வெளிநாடுகளுக்கு அழைத்து சென்றுள்ளது . ஹவாய் , ஸ்விட்ஸர்லாண்ட், நியூஸிலாந்து  ஆகிய நாட்டில் உள்ள இயற்கை எழிலை நாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அங்குள்ள மக்களும் சரி அவர்களது ரசனையும் சரி மிக உயர்ந்தது என்று கூற வேண்டும் . காரணம் அவர்களுக்கு பிடித்து விட்டால் நம்மை மிகவும் உயரத்தில் ஏற்றி விடுவார்கள் .வெள்ளை மனம் கொண்டவர்கள் .ஒருமுறை ஆல்ப்ஸ் மலையின் சிகரத்திற்கு சென்றிருந்தேன். "சிவந்த மண்" படத்தில் கண்ணதாசன் பாடலில்   ஒரு வரி வருமே "ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்' அந்த வரி என் நினைவுக்கு வந்தது. நம் நாட்டில் என்றால் மூணார் சென்றபோது "வள்ளிக்கு கணவன் பெயரை', என்ற பாடலை பாடி சந்தோஷப்பட்டேன். சிம்லா, டார்ஜிலிங், மானசரோவர் ஆகிய இடங்கள் பார்க்க வேண்டிய ஒன்று.  

சமையல்: நான் சென்னையில் இருக்கும்போதெல்லாம் என் வீட்டில் நான்தான் சமைப்பேன். புதிது புதிதான, அதே சமயம் கஷ்டமான சமையல் செய்முறையை கூட செய்து பார்க்க ஆசைப்படுவேன். உருளைக்கிழங்கு ரோஸ்ட் நான் செய்தால் எல்லோருக்கும் பிடிக்கும் . ஒருமுறை நான் ஜெர்மன் நாட்டிற்கு சென்றபொழுது அங்கு எனது தோழியின் வீட்டில் தங்கி இருந்தேன். காலையில் எழுந்து நானே சமைப்பது என்று முடிவு செய்து முதலில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்தேன். அந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சாப்பிட்ட பிறகு நாங்கள் எல்லாம் ஊர் சுற்ற கிளம்பினோம். மாலையில் வீடு வந்து சேர்ந்தபோது பக்கத்து வீடு, எதிர்வீடுகளில் உள்ளவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து கை அசைத்து "சுதா  பொட்டேட்டோ இஸ் வெரி நைஸ்' என்றார்கள். பின்னர் தான், என் தோழி அவர்களுக்கு  நான் காலையில் செய்த சமையலை சாப்பிட கொடுத்துள்ளார் என்று தெரிந்தது. அன்றிலிருந்து இன்று வரை ஜெர்மன் தோழி என்னை "சுதா பொட்டேட்டோ' என்றுதான் அழைப்பார்.

ஷாப்பிங்:  நான் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் எது சிறப்போ அதை வாங்கி விடுவேன் அது ரொம்ப விலை உயர்ந்தது என்றால் வாங்குவதில் எனக்கு தயக்கம் உண்டு.  ஒருமுறை "இத்தாலி நாட்டில் என்ன சிறப்பு?' என்று கேட்டபொழுது அவர்கள் ஒரு வகையான பை குறித்து சொன்னார்கள். அந்த பை ஏதோ ஒரு இடத்தில மட்டுமே கிடைக்கும் என்று கூறினார்கள். தேடிப் போய் அந்த பையை வாங்கினேன் . வித்தியாசமாக இருந்தது உண்மை தான், ஆனால் பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை.

சினிமா: எனக்கு எல்லா சினிமாவும் பிடிக்கும். நேரம் கிடைத்தால் நல்ல படங்களை பார்க்க தவற மாட்டேன். பல பேர் விமான பயணத்தின்போது தூங்கி விடுவார்கள். ரொம்பவும் அசதியாக இருந்தால் மட்டுமே தூங்குவேன். மற்ற சமயங்களில் எல்லாம் விமானத்தில் போடும் படங்களை பார்ப்பது என் பொழுதுபோக்கு. தென்னக மொழிகள் மட்டும் அல்லாமல் ஆங்கிலம் , சீன தேசத்து படங்கள் என்று அனைத்தையும் பார்ப்பேன். விமர்சனம் நன்றாக இருந்தால் அந்த படத்தை தேடித் போய் பார்த்துவிடுவேன். 

ஆச்சரியப்படுத்துதல்: ஒருவரை ஆச்சரியப்படுத்துவது எனக்கு என்றுமே விருப்பமானது. என் தோழிகள் பலருக்கு இது தெரியும் . என் நெருங்கிய தோழிகளின் பிறந்த நாள், திருமண நாள் அல்லது அவர்களது வீட்டில் நடந்த இனிய சம்பவம், மகிழ்ச்சியான  தருணம் என்று எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு அவர்களை ஆச்சரியப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியடைய செய்வது எனக்கு என்றும் பிடிக்கும் . வயதாகிவிட்டால் தங்களது பிறந்த நாளையோ, திருமண நாளையோ கொண்டாட மாட்டார்கள் ஆனால் அதை நினைவு கூறும்முகமாக ஒரு பூச்செண்டோ அல்லது ஒரு இனிப்போ அவருக்கு அனுப்பினால் இந்த ஆச்சரியம் அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷத்தை தரும் என்று எனக்குத் தெரியும், அதை இன்றும் தொடர்கிறேன்.

முகமூடி:  நான் பல்வேறு முகமூடிகளை சேகரித்து வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் தபால் தலை, நாணயங்கள் கேட்போரைப் போன்றுதான் நானும் ஆரம்பித்தேன். இந்த முகமூடி சேகரிப்பு என்னை பற்றிக்கொண்டது. தென் ஆப்பிரிக்கா , மலேசியா, மொரோக்கோ, இலங்கை, ஜெர்மனி, இத்தாலி, மேற்கு ஆப்பிரிக்கா,  பாங்காக்  ஆகிய வெளிநாடுகளில் இருந்தும்  நம் நாட்டிலும் வாங்கி வந்துள்ள 35 முகமூடிகள் என்னிடம் உள்ளன. ஒரு முறை வெனிஸ் நகரத்தில் புதுமையான முகமூடி கிடைக்கிறது, விலையும் அதிகம் இல்லை என்று கூறினார்கள்.  சரி வாங்கிவிடலாம் என்று முடிவு செய்தேன். அந்த இடத்துக்குச் செல்ல காலையிலேயே கிளம்பினோம்.  காரில் சென்று  ஓர் இடத்தில் காரை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தோம். பின் அங்கிருந்து படகு சவாரி செய்து அந்த இடத்தை அடைந்தோம் . அந்த முகமூடியை பார்த்து வாங்கிய பிறகு, நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு வர அரை நாள் ஆகிவிட்டது . அந்த முகமூடியை "கண்டோலா' என்றார்கள். இன்றும் என்னைப் பார்க்க வருபவர்கள் என் வித்தியாசமான சேகரிப்பை பாராட்டுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com