தெரிந்த பெயர், தெரியாத விவரம்: சென்னைத் துறைமுகம்

சென்னை மாநகருக்கென்று பல சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்கது சென்னை மாநகரின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகம்.
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: சென்னைத் துறைமுகம்

சென்னை மாநகருக்கென்று பல சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்கது சென்னை மாநகரின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகம். இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில் 3-ஆவது பழமையான துறைமுகமாக திகழ்வது சென்னைத் துறைமுகம். 
* இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை வகிக்கிறது இத்துறைமுகம்.  தென் இந்தியாவின் நுழைவுவாயில் என்ற பெருமை  சென்னைக்கு கிடைக்க இந்த துறைமுகம்தான் காரணம்.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இத்துறைமுகத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
* ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலநிலைகளிலும் இயங்கிவரும்  இத்துறைமுகம் ஒரு செயற்கை துறைமுகமாகும்.  
* இது கோரமண்டல் கடற்கரை எனப்படும் கிழக்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தொடக்கப் பகுதிகள், 1861-ஆம் ஆண்டில் கட்டப்பட்டவை ஆகும். ஆனால் 1868-ஆம் ஆண்டிலும், 1872-ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட சூறாவளியினால் இது பயன்படுத்தப்பட முடியாததாயிற்று. புதிய கட்டுமானப் பணிகள் 1881-இல் தொடங்கின.
* அப்போது மீண்டும்  ஏற்பட்ட சூறாவளியால், பெரும்பாலும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இருந்த துறைமுகத்தை அடித்துச் சென்று விட்டது. இத் துறைமுகம் புதிதாக அமைக்கத்தொடங்கிய 1881-ஆம் ஆண்டையே தொடக்கமாகக் கொண்டு 2007-ஆம் ஆண்டில் சென்னைத் துறைமுகத்தின் 125-ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.
* சரித்திர காலத்தில் இருந்தே இந்த துறைமுகம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. பல்லவர்கள், சோழர், பாண்டியர் மற்றும் விஜய நகர அரசுகள் இக் கடற்கரையை தங்களது கடல் வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக,  பல்லவர் காலத்தில்,  மாமல்லபுரம் முதல் மயிலாப்பூர் வரை புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கியதாகவும், ரோமானிய அரசில் மயிலாப்பூர் "மேலியாபோர்'' (meliyapor) என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
* ஆங்கிலேயர் ஆட்சியின் போது தான், இத்துறைமுகம் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டது. 1815-ஆம் ஆண்டு வரை சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலேயே கப்பல்கள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் கடற்கரைக்கு சரக்குகள் கொண்டுவரப்பட்டன.  அவ்வாறு கொண்டுவரப்படும் சரக்குகள் வழியில் திருடு போக ஆரம்பித்தன.  இதனால் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்குப் பெருத்த நஷ்டம் தொடர்ந்து  ஏற்பட்டதால், செயற்கையாக, பெரிய கப்பல்கள் நிறுத்துவதற்கு முதல் துறைமுகம் கட்டப்பட்டது.
* இது, 125 வருடங்களுக்கு  மேலாக பயன்பாட்டில் உள்ளது எனினும், 1639-ஆம் ஆண்டிலிருந்தே இங்கிருந்து கடல் வழி போக்குவரத்து துவங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
* கடல் வழி பயணிகள் போக்குவரத்துக்காக, இந்திய கப்பல் கழகம் கண்டறிந்த ஐந்து துறைமுகங்களில் சென்னையும் ஒன்று. 
* கோவா, கொச்சின், மும்பை மற்றும் மங்களூர் போன்றவை  மற்ற நான்கு பயணிகள் போக்குவரத்து நடைபெறும் துறைமுகங்களாகும். 
* கடந்த 100 ஆண்டுகளாக, சிங்கப்பூர், மலேசியா, மணிலா, சூயஸ், ஏடன், கொழும்பு மற்றும் லண்டன் போன்ற அயல்நாட்டு நகரங்களுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சென்னையில் இருந்து நடந்து வந்திருக்கிறது.
* மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல ஆசிய நாடுகளோடு பயணிகள் போக்குவரத்து இங்கு மும்முரமாக நடந்து வந்தது. 1984 வரை சென்னை - சிங்கப்பூர் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொகுசுக் கப்பல்கள் சென்னைத் துறைமுகத்தைத் தொட்டுச் செல்கின்றன. 
* இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஜவகர்லால் நேரு நினைவாக "ஜவகர் நிறுத்தம்'(Jawagar dock) 1964-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, லால் பகதூர் சாஸ்திரி அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதில், ஒரே நேரத்தில் 6 பெரிய கப்பல்களை நிறுத்திவைக்க முடியும்.  
* 1974-ஆம் ஆண்டு பாரதியின் பெயரால், மற்றுமொரு நிறுத்தம்  நிறுவப்பட்டது.
* தற்போது, பாரதி, ஜவகர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் ஆகிய பெயர்களில் மொத்தம் 3 நிறுத்தங்கள்  உள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 23 கப்பல் நங்கூரமிடும் இடங்கள் பயன்பாட்டில் உள்ளன.  
* இப்போது, கப்பல் நிறுத்தும் இடங்களில் கடலின் ஆழம் 17 மீட்டர்(56 அடி) வரை உள்ளது. இதனால் நான்காம் தலைமுறை கப்பல்கள், அதாவது, நவீன சொகுசுக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் போன்றவை  இந்த துறைமுகத்தில் வந்து செல்லும் வசதி உள்ளது.
* ஓர் ஆண்டில் மட்டும் இங்கிருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 
- முகவை க.சிவகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com