9 ஆண்டுகளாக கடையைத் தேடிவரும் காக்கை!

கூரைமேல் சோற்றைப் போட்டால் ஆயிரம் காக்கைகள் பறந்து வரும் என்பது பழமொழி.  இந்துக்கள் தங்களது முன்னோர் நினைவாக காகங்களுக்கு சாதம் படைத்து வழிபடுவது வழக்கம்.
9 ஆண்டுகளாக கடையைத் தேடிவரும் காக்கை!

கூரைமேல் சோற்றைப் போட்டால் ஆயிரம் காக்கைகள் பறந்து வரும் என்பது பழமொழி.  இந்துக்கள் தங்களது முன்னோர் நினைவாக காகங்களுக்கு சாதம் படைத்து வழிபடுவது வழக்கம். அதேபோல, பண்டிகை நாள்களிலும் முதலில் காகத்துக்கு உணவு படைத்துவிட்டே உணவு அருந்தும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நாள்தோறும் வீட்டில் உணவு அருந்தும் முன்னர் காகத்துக்கு எள்சாதம் படைக்கின்றனர். அந்த அளவுக்கு காகம் நம் வாழ்க்கையில் ஒன்றியிருக்கிறது.

இந்நிலையில்,  கோவை, கவுண்டம்பாளையத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் எதிரே மளிகைக் கடை நடத்தி வரும் வியாபாரி பொன்ராஜின் கடைக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக அண்டங்காக்கை ஒன்று அன்றாடம் உணவுக்காக வருகிறது. 

இதுகுறித்து பொன்ராஜ் கூறுகையில்:  "கடைக்கு முதலில் காகம் வந்தபோது முறுக்கு, காராசேவு ஆகியவற்றை தீனியாகக் கொடுத்தேன்.   அதன் பிறகு நாள்தோறும்  அந்தக் காகம் சுமார் 10 முறைக்கு மேல் கடைக்கு வரப் பழகியது.   

அப்போது,  "அண்டங்காக்கைக்கு உணவு வைத்தால் குடும்பத்துக்கு ஆகாது' என்று பலர் எச்சரித்தும், ஏளனம் செய்தனர். அதற்கு நான்,  "நம்மைப் போன்று அதுவும் ஓர் உயிர்தான்' என்று கூறி,  அந்தக் காகத்துக்கு கடை திறக்கும் போதே தின்பண்டம் எடுத்து வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

அந்தக் காகமும் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மரங்களில் எங்கு இருந்தாலும், நான் கடை திறந்தவுடன் தேடி வரத் தொடங்கியது. முதலில் முறுக்கு, காராசேவு போன்றவற்றை வைத்தபோது அதை எடுத்துச் சென்று நீரில் நனைத்துத் தின்றது.

அதன்பிறகு, காராசேவு போன்ற தின்பண்டங்களை சிறிய பெட்டியில் போட்டு அதன் பார்வையில் படும்படி வைப்பேன்.  பசியோடு வரும் அந்தக் காகம் அதை கொத்திச் சென்றுவிடும். சில சமயங்களில் அங்கேயே  அமர்ந்து உணவு அருந்தும்.

கடந்த சில ஆண்டுகளாக தனது குஞ்சுகளையும் கடைக்கு அழைத்து வருகிறது. அந்தக் குஞ்சுகள் வளரும் வரை சுமார் மூன்று மாத காலம் இங்கு வந்து உணவை எடுத்துச் செல்லும்.  தற்போது மூன்றாவது தலைமுறைக் குஞ்சுகளுடன் அந்தக் காகம் வந்து உணவு அருந்துகிறது'' என்றார் பாசத்துடன். 

தற்போது அவரது கடைக்கு வரும் ஒவ்வொருவரும் காகத்துடன் நெருங்கிப் பழகியது போல அதுகுறித்து ஆவலுடன் விசாரித்துச் செல்கின்றனர்.   கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் இவரது கடை உள்ளதால், பேருந்து மற்றும் வாகனங்களில் செல்பவர்களும் அவரது கையில் இருந்து காகம் உணவு உட்கொள்வதை வியப்புடன்  பார்த்துச் செல்கின்றனர்.         
- ஆர்.தர்மலிங்கம்.
படம்: எல்.அனந்தராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com