ஏடிஎம்முக்கு 50 வயது!

இன்று உலகம் முழுவதும் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட ஏடிஎம் மெஷின்களுக்கு இந்த ஆண்டு ஜுன் 27-ஆம் தேதியுடன் 50 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது.
ஏடிஎம்முக்கு 50 வயது!

இன்று உலகம் முழுவதும் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட ஏடிஎம் மெஷின்களுக்கு இந்த ஆண்டு ஜுன் 27-ஆம் தேதியுடன் 50 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இந்தியாவில் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்தியாவில் உள்ள ஷில்லாங்கில் பிறந்து, பிரிட்டனில் வளர்ந்து கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த ஜான் ஷெப்பர்டு பாரன், ஒருமுறை குறித்த நேரத்திற்குள் வங்கியில் காசோலையைச் செலுத்த முடியவில்லை. அதே வருத்தத்தில் குளியலறை நீர்த் தொட்டியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்த ஜான் ஷெப்பர்டுக்கு ஓர் ஐடியா தோன்றியது. மெஷின் மூலம் சாக்லெட்டைப் பெறும்போது, ரூபாய் நோட்டுகளைப் பெற முடியாதா என்று தனக்குத் தோன்றிய ஐடியாவை பார்க்லே வங்கியிடம் விற்பனை செய்தார். இந்த ஐடியாவின் அடிப்படையில் உருவானதுதான் ஏடிஎம் மெஷின். உலகில் முதல் ஏடிஎம் மெஷின், 1967-ஆம் ஆண்டு ஜுன் 27-ஆம் தேதி லண்டன் புறநகர் பகுதியில் உள்ள என்ஃபீல்ட் நகரத்தில் நிறுவப்பட்டது.

முதன்முதலாக பணம் பெற ஏடிஎம் மெஷின்களில் செலுத்தப்படும் வவுச்சர்களில் ரேடியோ ஆக்டிவ் மையினால் எழுதப்பட வேண்டுமென்பது கட்டாயமாக இருந்தது. அதன் பின்னரே அட்டைகளில் பாதுகாப்பான மேக்னடிக் ஸ்ட்ரிப்கள் இடம்பெற்றன.

ஓர் ஏடிஎம் மெஷின் விலை 2 கோடி ரூபாய் ஆகும். ஒரு மெஷினைப் பராமரிக்க ஒவ்வொரு வங்கியும் மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் செலவழிக்கின்றன.

இந்தியாவில் மும்பையில் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர், சிடி பேங்க் மற்றும் ஹாங்காங் - ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் (எச்.எஸ்.பி.சி) ஆகியவை முதன்முதலாக தங்கள் கிளை அலுவலகங்களில் ஏடிஎம் மெஷின்களை அறிமுகப்படுத்தின. 1999-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 800 ஏடிஎம் மெஷின்கள் அமைக்கப்பட்டிருந்தன. 2016-ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை இந்தியாவில் 2,15,039 ஏடிஎம் மெஷின்கள் அமைக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2015-ஆம் ஆண்டு உலக ஆய்வின்படி கிடைத்த தகவல்கள்:
 ஒரு லட்சம் பேருக்கு 278 ஏடிஎம் மெஷின்கள் என்ற விகிதத்தில் உலகிலேயே மிக அதிகமான ஏடிஎம் மெஷின்கள் தென்கொரியாவில் உள்ளன. இதைத் தொடர்ந்து மேக்காவ் நாட்டில் லட்சம் பேருக்கு 254 ஏடிஎம் மெஷின்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் லட்சம் பேருக்கு 19.7 என்ற விகிதத்தில் ஏடிஎம் மெஷின்கள் உள்ளன.

2016-ஆம் ஆண்டு ஜுன், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 5,855 பேருக்கு ஓர் ஏடிஎம் மெஷின் செயல்படுவது தெரிய வந்துள்ளது. கேரளாவில் 1,929 பேருக்கு ஒன்று, பிகார் மாநிலத்தில் 13,438 பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஏடிஎம் மெஷின்கள் உள்ளன.

உலகிலேயே மிக உயரமான கூஞ்சேராப் கணவாய் பகுதியில் 15,397 அடி உயரத்தில் "தி நேஷனல் பேங்க் ஆப் பாகிஸ்தான்' தனது வங்கியின் ஏடிஎம் மெஷினை அமைத்து சாதனை படைத்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் நாது லா என்ற பகுதியில் 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏடிஎம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளாவில் எர்ணாகுளம் - வைப்பீன் இடையே துறைமுகத்திலிருந்து சரக்குகள் இறக்குவதால் வாடிக்கையாளர் வசதிக்காக மிதக்கும் ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன.
- அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com