பேராசிரியர் பணியைத் தவிர்த்த தமிழாசிரியர்

நல்லாசிரியர் விருது பெற்ற தமிழாசிரியர் தமிழ்ப்பூங்கனிமொழி ஜெகதீசன், கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் பணிக்காக SET தேர்வில் தேர்ச்சி பெற்றும்,
பேராசிரியர் பணியைத் தவிர்த்த தமிழாசிரியர்

நல்லாசிரியர் விருது பெற்ற தமிழாசிரியர் தமிழ்ப்பூங்கனிமொழி ஜெகதீசன், கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் பணிக்காக SET தேர்வில் தேர்ச்சி பெற்றும், 30 ஆண்டுகளுக்குமுன் M. PHIL பட்டம் முழு நேர வகுப்பில் படித்தும் தேர்ச்சி பெற்றவர்.  தற்போது பொள்ளாச்சி அருகே உள்ள காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வீட்டில் சாப்பிடாமல் வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவளித்துவிட்டு பின்னர் கல்வி கற்பித்தல், தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தல், மேடை  நிகழ்ச்சிகள், வானொலி, மற்றும் தொலைக்காட்சி உரைகளை தூய  தமிழில் எழுதித் தொகுத்து வழங்குதல் போன்ற பணிகளில் மாணவமணிகளின் கவனம் ஈர்த்தவர். அவருடன் உரையாடியதிலிருந்து... 

திருச்சியில் கல்விக்குடி கிராமத்தில் அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என எல்லா உறவுகளும் வாய்க்கப்பெற்றேன்.  

எங்கள் வீட்டில் 6 ஆண்கள். 3 பெண்கள். வறுமை என்னும் கோரப்பிடியில் சிக்குண்டு தத்தளித்தோம். என் சிறுவயதில்(15) தந்தை மாரடைப்பால் காலமானார். திக்குத்தெரியாது, செய்வதறியாது, கலங்கி நின்றோம். நான் பத்தாம் வகுப்பு முடிக்கும்வரை எங்கள் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்குதான். உயர்நிலைக்கல்வி (9,10,11) பெற சுமார் 4 மைல் தூரம் நடந்தே செல்ல வேண்டும். வெயில், மழை, குளிர், பனி என பாராமல் நடந்தே அன்பில் என்ற ஊருக்குச் சென்று தான் படிக்கவேண்டும். பலமுறை சாப்பிடாமல் சென்றிருக்கிறேன். பசியின் கொடுமை எனக்குத் தெரியும்.  அதனால்தான், பிள்ளைகளின் முகவாட்டம் அறிந்து, பசி களைவது என் பணிகளில் ஒன்றாயிற்று.  

அதுதவிர, எங்கள் ஊரில் அன்றைய காலகட்டத்தில் கல்லூரிக்கல்வி என்பது பெண்களுக்கு எட்டாக்கனியாகத்தான் இருந்தது. நான் கல்லூரியில் சேர்ந்த பின்தான் பெண்கள் கல்லூரிப்படிப்பை மேற்கொள்ளத் தொடங்கினர்.                    

1986 ஆம் ஆண்டு திருச்சி பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது.         

M. PHIL படிப்பு முடிக்குமுன் பள்ளியில் சேர எனக்கு விருப்பமில்லை. ஆனால், என் ஆய்வு வழிகாட்டி HOD திரு.(இராமலிங்கம்) எழில்முதல்வன்தான், அங்கு வேலை கிடைப்பது அரிது. விடுமுறைநாட்களில் தன் வீட்டிற்கு வந்து ஆய்வேட்டைமுடித்துக்கொள்ள உதவிசெய்வதாகக்கூறி பணியில் சேர அறிவுறுத்தினார். விருப்பமில்லாமல்தான் சென்றேன். சூழ்நிலைக் கைதியாகி பணியில் சேர்ந்தேன்.ஆனால், பள்ளி சூழல் பிடித்துப்போனதால் வெளியேற எண்ணமின்றி பணிபுரிந்தேன். அதன் பின்னர், தனியார் கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்தும் நான் போகவில்லை. தற்போது, அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக இருக்கிறேன். இது மன நிறைவாகவே இருக்கிறது.        

கல்லூரியில் படித்தபோது' தனிமனித அமைதி'என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வானொலி வாய்ப்புகள் நாடி வந்தன.  

ஆசிரியையான பின்பு, 1996 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள ஸ்ரீரெட்டியாப்பட்டி சுவாமிகள் நிறுவனம் திருச்சி, தஞ்சை, சென்னையிலுள்ள பள்ளி ஆசிரியர்களுக்குக் கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட10 கட்டுரைகளுள் நான் எழுதிய கட்டுரை இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டது.

திருச்சியில் நடந்த அறிவியல்கண்காட்சி மலரில் "தமிழில் அறிவியல்' என்ற தலைப்பில் என் முதல் கவிதை வெளியானது.  பின்பு, 1997 -இல் சென்னை வந்து, 2007 வரை 10 ஆண்டுகள் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அசோக் நகரில் பணிபுரிந்தேன். பட்டிமன்றம், கவியரங்கம், நிகழ்ச்சித் தொகுப்பா ளர்,  சென்னை வானொலியில் உரை என பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வளர்ந்தன.   நான் எழுதிய வாழ்த்துப் பாடல் வேளாங்கண்ணி பள்ளியில் இன்றும் பாடப்பட்டு வருகிறது. 

1993 ஆம் ஆண்டு  என்வகுப்பில் படித்த விஜயகாந்தி என்ற மாணவி மேல்நிலைப்பொதுத்தேர்வில் தமிழில் 189/200 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றார்.  அந்தக் காலத்தில் 190 மதிப்பெண்கள் தமிழில் வாங்குவது என்பது அத்திபூத்தாற்போல யாரோ ஒருவர் மட்டுமே பெறுவர். நான் கற்பிக்கும் வகுப்பில் தமிழில் 190 மதிப்பெண்களுக்கும் மேல் பெறும் மாணவர்களுக்குத் தங்க மோதிரம் வழங்குவது இன்றுவரை தொடர்கிறது.
- ரவி வர்மன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com