வலிமை பலாத்காரப்படுத்த அல்ல!

ஆண்மையும்  பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல்,
வலிமை பலாத்காரப்படுத்த அல்ல!

ஆண்மையும்  பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்துவிட வேண்டும் என நினைப்பதுதான் காரணம். ஒருவரின் வலியை  இன்னொருவர் புரிந்து கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனுஷங்களாக ஆகிறோம் என்பது நம்பிக்கை. பேச்சில் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் அய்யனார். "நெடுஞ்சாலை' கிருஷ்ணாவின் உதவியாளர். இப்போது "உறுதி கொள்' படத்தின் மூலம் கால் பதிக்கிறார்.   

"உறுதி கொள்' தற்போதைய சமூகத்துக்கு தேவையான ஒன்று... கதையும் அந்த ஓட்டத்தில்தான் போகுமா...
அப்படித்தான் இருக்கும். இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. முதல் படம் என்பதால், இமேஜூக்குள் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. 
இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வையை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது.  

பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்ன எதிர்பார்க்கலாம்...
தில்லியில் தன் நண்பனோடு கைகோர்த்துப் போன  மருத்துவ பெண் அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.  ரத்தமும் துடிப்புமாக அல்லாடிய அந்தப்  பெண் மனதில் எத்தனை கேள்விகள் ஓடியிருக்கும்? அந்த கணத்தை எப்படி கடந்து வந்திருப்பாள் அந்த பெண். நினைத்துப் பார்க்கவே மனம் அஞ்சுகிறது.   ஆணாகப் பிறந்த  அத்தனை பேருமே கூனிக்குறுக வேண்டிய சம்பவம் இல்லையா அது? ஆனால், அதற்குக் கூட பெண்களின் உடைதான் காரணம், நடைதான் காரணம் என்று உள்ளர்த்தம் கற்பிக்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? தலைநகரில் நடந்த கொடூரம் தடம் தெரியாத குக்கிராமங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  அதைக் கண்டும் காணாமலும் நாம கடந்து கொண்டுதான் இருக்கிறோம்.  பெண்களைக் காட்டிலும் ஆண்களை மனதாலும், உடலாலும் வலிமையாய் படைத்தது   யாரையும் பலாத்காரப்படுத்த இல்லை... பத்திரமாய் பாதுகாப்பதற்கு. சாகப்போகிற கடைசி நிமிஷத்துல கூட, மனசுக்கு பிடித்தவனின் மடியில தலை சாய்க்க நினைக்கிறவர்கள் பெண்கள். அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தராத இந்த சமூகத்தின் மீதான அதிரடி பாய்ச்சலாக இப்படம் இருக்கும். 

இன்னும் பரிச்சயமான நடிகர்கள் இருந்தால், கதை எல்லோரையும் போய் சேர வசதியாக இருக்குமே...
இதில் இருப்பவர்களுக்கு என்ன குறைச்சல். "பசங்க', "கோலி சோடா' என ஹிட்டான இரண்டு படங்களிலும் பிரதான இடத்தில் இருந்த கிஷோர் கதாநாயகன் இடத்துக்கு முன்னேறி வருகிற படம் இது.  கிஷோர் யார் என்று விளம்பரப்படுத்தி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. பார்த்தாலே தெரிந்து விடும். கிஷோருக்கு சினிமா பற்றி நல்ல கனவுகள் உண்டு.  சிறு வயதில் இருந்தே சினிமாவில் பயணிக்கிறவர், அது குறித்தே யோசித்துக் கொண்டிருப்பவர்.  அந்த அர்ப்பணிப்புக்கு ஒரு முதல் தகுதியை உண்டாக்கித் தரும் விதமாக இந்தப் படம் இருக்கும். கதாநாயகி மேகனா பார்த்த முகம்தான். இந்தப் படம் அவரை பரிச்சயமான முகமாக மாற்றி விடும்.  எல்லோருக்கும் தெரிந்த காளி வெங்கட்டுக்கு முக்கிய வேடம்.  பாண்டி அருணாசலம் ஒளிப்பதிவு.   ஜூட் வினிகர் இசை.  படத்தொகுப்புக்கு   எம்.ஜேபி.  மணி அமுதன் பாடல்கள் என புது டீம்.  சிறு வயதில் இருந்தே சினிமாவில் சாதிக்க ஆசைப்படும்  நண்பர்கள்  அய்யப்பன், பழனி இருவருடனும் சேர்ந்து நானே தயாரித்து விட்டேன். நெடுநாள் கனவு இது. ரசிகர்களின் ஆதரவு இருந்தாலே போதும்.  
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com