ஐ.பி.எல்: புதுமுகங்களின் அதிரடி!

கிரிக்கெட்டில் மாபெரும் புரட்சியை ஐபிஎல் ஏற்படுத்தியிருக்கிறது. குக்கிராமங்களைச் சேர்ந்த திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை கிரிக்கெட் உலகுக்கு
ஐ.பி.எல்: புதுமுகங்களின் அதிரடி!

கிரிக்கெட்டில் மாபெரும் புரட்சியை ஐபிஎல் ஏற்படுத்தியிருக்கிறது. குக்கிராமங்களைச் சேர்ந்த திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை கிரிக்கெட் உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு உதாரணம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த டி.நடராஜன், குஜராத்தைச் சேர்ந்த ஹார்திக் பாண்டியா ஆகியோர் எந்தப் பின்னணியும் இல்லாதவர்கள். இருப்பினும் இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். 2000-க்கு முன்பு வரை ஒரு சில வீரர்களை மட்டுமே நம்பியிருந்த இந்திய அணியின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. 

ஒரு போட்டியில் சதமடித்தால் அதை வைத்துக் கொண்டே 4, 5 தொடர்களில் விளையாடிவிடலாம் என்ற நிலை மாறி, ஒரு தொடரில் சரியாக ஆடாவிட்டாலே அணியில் இடம் பறிபோய்விடும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. 

இந்திய அணியின் நீண்ட நாள் பிரச்னை போதிய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததுதான். இளம் வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பிசிசிஐ எடுத்த முயற்சிகூட தோல்வியில் முடிந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியின் வரவால் ஏராளமான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இந்திய அணிக்கு தலைசிறந்த அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  புதுமுகங்களில் சிலர் இங்கே:

ரிஷப் பந்த் : 19 வயதான ரிஷப் பந்த், உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்துவாரில் பிறந்தவர். உள்ளூர் போட்டி மற்றும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரை சந்திக்கவிருந்த நிலையில் ரிஷப் பந்தின் தந்தை திடீரென மரணமடைந்தார். 

அதன்பிறகு போட்டி தொடங்க, தந்தையை இழந்த சோகம் ஒருபுறம் மனதில் இருந்தாலும், மறுமுனையில் தனக்கே உரிய பாணியில் பெங்களூர் அணிக்கு எதிராக 36 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் குவித்து அசத்தினார் ரிஷப் பந்த். அப்போதே அவர் எந்தவொரு கடினமான சூழலையும், நெருக்கடியையும் எதிர்கொள்ளும் மனத்திடம் கொண்டவர் என்பதை நிரூபித்தார்.  

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 209 ரன்கள் என்ற வெற்றி இலக்கை டெல்லி அணி துரத்தியபோது, ரிஷப் பந்த் 43 பந்துகளில் 9 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து பாராட்டை அள்ள, வெற்றியும் எளிதானது. 

கடந்த ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 308 ரன்கள் குவித்ததன் மூலம் இளம் வயதில் முச்சதம் அடித்தவர்களில் 4-ஆவது இடத்தைப் பிடித்தார் ரிஷப் பந்த். ரஞ்சி கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்தவர் (48 பந்துகளில்) என்ற சாதனையும் ரிஷப் பந்த் வசமேயிருக்கிறது.

ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரிஷப் பந்த், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துவிட்டார். இவர்,  இந்திய அணியில் தோனியின் இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கிறார். 

கிருனால் பாண்டியா: மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் கிருனால் பாண்டியா. குஜராத் மாநிலம் ஆமதாபாதில் பிறந்தவர். ஆல்ரவுண்டரான இவர் இந்த சீசனில் 243 ரன்களையும், 10 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். பல ஆட்டங்களில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கி தனது அதிரடியால் மும்பை அணிக்கு வெற்றி தேடித்தந்த கிருனால் பாண்டியாதான், இறுதி ஆட்டத்தின் ஆட்டநாயகன். அதில் மும்பை அணி மளமளவென விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் நங்கூரமாக நின்று 47 ரன்கள் குவித்தார் கிருனால் பாண்டியா. அதுதான் மும்பை அணி மூன்றாவது முறையாக மகுடம் சூடும் வாய்ப்பை ஏற்படுத்தியது. 

அடுத்ததாக இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக காத்திருக்கிறார் கிருனால் பாண்டியா. இவருடைய சகோதரர் ஹார்திக் பாண்டியாவும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். ஹார்திக் பாண்டியா 2015 ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அணியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்ததுடன் அதை தக்கவைத்துக் கொண்டும் இருக்கிறார். 

ராகுல் திரிபாதி : இந்த சீசனில் புணே அணி இறுதிச் சுற்று வரை முன்னேற ராகுல் திரிபாதியும் ஒரு காரணம். 26 வயதான ராகுல் திரிபாதியின் தந்தை ஒரு ராணுவ வீரர். அவர், உத்தரப் பிரதேச அணிக்காக ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். அதன் காரணமாகவே ராகுல் திரிபாதியும் கிரிக்கெட்டுக்கு வந்திருக்கிறார். 

ராஞ்சியில் பிறந்தாலும், ராகுலின் ஆரம்ப நாள்கள் காஷ்மீரில்தான். பின்னர் தனது குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவதற்காக புணேவுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார் திரிபாதியின் தந்தை. திரிபாதி, புணேவில் உள்ள பழமை வாய்ந்த டெக்கான் ஜிம்கானா கிளப்புக்காகத்தான் முதலில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். 

2016-இல் ஐபிஎல் போட்டியில் புணே அணி சேர்க்கப்பட்டபோது, அதன் சி.இ.ஓ. ராகுல் ஐயர், புணேவைச் சேர்ந்த பிரபல விளையாட்டு பத்திரிகையாளர் சுனந்தன் லீலேவை சந்தித்தபோது, புணே அணியில் புணேவைச் சேர்ந்த யாரும் இல்லையே என ஆதங்கப்பட்டு அவரிடம் சிறந்த வீரர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என ரகு ஐயர் கேட்டுள்ளார். 

அப்போது ராகுல் திரிபாதி உள்ளிட்ட மூவர் பெயரை லீலே பரிந்துரைக்க, பயிற்சி முகாமுக்குப் பிறகு திரிபாதி இறுதி செய்யப்பட்டார். அவருடைய பெயர் ஏலத்துக்கு வந்தபோது, அவரை கேட்க யாரும் முன்வரவில்லை. அப்போது போட்டியின்றி அவரைத் தேர்வு செய்தது புணே. இந்த சீசனில் 391 ரன்கள் குவித்துள்ள திரிபாதிக்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தின்போது மிகப்பெரிய கிராக்கி இருக்கும் என்று நம்பலாம்.

வாஷிங்டன் சுந்தர்: தமிழக ரஞ்சி அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர். புணே அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து சூறாவளி அஸ்வின், கடைசி நேரத்தில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றார். 

இந்த சீசனில் 10 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகின் அதிரடி பேட்ஸ்மேன்கள் அனைவரும் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறினர்.  சுந்தரின் ஓவரில் சராசரியாக எடுக்கப்பட்ட ரன்கள் 6.61 மட்டுமே. 

ஐபிஎல் தகுதிச் சுற்றில் மும்பைக்கு எதிராக 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி "ஆட்டநாயகன் விருதை' வென்றபோது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார் சுந்தர். 

வாஷிங்டன் சுந்தரின் இயற்பெயர் சீனிவாசன். ஆனால் கிரிக்கெட் வீரரான அவருடைய தந்தை, சுந்தருக்கு இளம் வயதில் உடை, கிரிக்கெட் உபகரணங்களை வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தியவர் ராணுவ வீரர் பி.டி.வாஷிங்டன். எனவே,அவருடைய பெயரைக் கூறி அழைக்க, அதுவே நிலையாகிவிட்டது.  

பாசில் தம்பி: ஐபிஎல் போட்டியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் பாசில் தம்பி. 23 வயதான இவர், கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் ஆற்றல் கொண்டவர். தனது துல்லியமான யார்க்கர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்திருக்கிறார். 

இந்த சீசனில் குஜராத் அணிக்காக 12 ஆட்டங்களில் விளையாடிய இவர் 11 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார். கிறிஸ் கெயில், விராட் கோலி, எம்.எஸ்.தோனி போன்ற ஜாம்பவான்கள் இவருடைய துல்லியமான பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார்கள். இவர் இந்திய அணியில் இடம்பிடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

முகமது சிராஜ்: ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜின் வாழ்க்கையில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி மறக்க முடியாத நாளாகும். ஆட்டோ டிரைவரின் மகனான முகமது சிராஜ், பிப்ரவரி 20-இல் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போதுதான் ரூ.2.6 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவரான முகமது சிராஜ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், பயிற்சிக்காக ஒருபோதும் கிரிக்கெட் அகாதெமிக்கு சென்றதில்லை. ஆனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம், விடாப்பிடியான முயற்சி போன்றவற்றின் காரணமாக 2015 நவம்பரில், ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்த சீசனில் 9 ஆட்டங்களில் விளையாடி 41 விக்கெட்டுகளை வீழ்த்த, அதன்பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். 

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முகமது சிராஜ், கடைசிக் கட்ட ஓவர்களை சிறப்பாக வீசக்கூடியவர். தொடர்ச்சியாக சராசரியாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் துல்லியமாக பந்துவீசக்கூடிய சிராஜுக்கு அடுத்த ஐபிஎல் போட்டியின்போது மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பது சந்தேகமில்லை.
- ஏ.வி.பெருமாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com