அடுத்தவர் சிரிப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும்!

"ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம்' எனப்படும் ஒரு வித குறைபாட்டை மையமாக கொண்டு வந்த படங்கள் ஹாலிவுட்டில் கூட குறைவுதான்.
அடுத்தவர் சிரிப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும்!

"ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம்' எனப்படும் ஒரு வித குறைபாட்டை மையமாக கொண்டு வந்த படங்கள் ஹாலிவுட்டில் கூட குறைவுதான். "அமெரிக்கன் பை', "ஸ்கேரி மூவி', "ஹேங் ஓவர்', "ஈவிட் டெட்' உள்ளிட்ட சில படங்களிலும், அதன் கதாபாத்திரத் தன்மைகளிலும் சாயல் கொஞ்சம் இருக்கும். தமிழில் அப்படியான படங்கள் இதுவரை இல்லை. இப்போது அந்த குறையை தீர்க்க வருகிறது "பீச்சாங்கை.' ட்ரெய்லர், டீஸர் இரண்டுமே 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்திருக்கும் நிலையில், வரும் 16-ஆம் தேதி திரைக்கு வருகிறது இப்படம். படத்தை இயக்குபவர் அசோக்....

குறும்பட உலகத்தில் இருந்து புரொமோஷன் கிடைத்திருக்கிறது.. வாழ்த்துகள் அசோக்...!
அதை சுலபமாக்கிய சீனியர்களுக்கு நன்றிகள். நான் சேலத்துக்காரான். சினிமா ஆர்வம் ப்ளஸ் வெறி. ஆனால், வீட்டில் என்ஜினியரிங் படிக்க வைத்தார்கள். அது தொடர்பான வேலை, தேடல்கள் என பல வருஷங்கள் ஓடி விட்டன. "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி அறிவிப்பு வந்ததும், ஒரு குறும்படம் எடுத்தேன். அதே ஆர்வத்தில் "அசல் நகல்', "குறுஞ்சி', "பேய் செத்து போச்சு', "ஒளியின் நிறம் கருப்பு', "மண்', "ஏழையின் சிரிப்பில்' என நிறைய படங்கள் எடுத்தேன். எல்லாவற்றுக்கும் ஏக வரவேற்பு. அதிலும் குறிப்பாக "மண்.'  ஒரு விவசாயின் மகன் பைலட் ஆக நினைப்பான். அதற்கு அந்த ஏழை விவசாயி என்ன செய்வார் என்பது மாதிரி கதை போகும். படத்தின் ஸ்கிரிப்ட் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள். குறிப்பாக அதில் வரும் "ஆகாசத்துல பறந்தாலும் சோறு மண்ணுலதான்...'' என்று ஒரு வசனம் வரும். அந்த வசனம் அப்போதைய குறும்பட உலகில் பயங்கர டிரென்டிங். ஸ்கிரிப்ட் எழுத வருகிற போது, டைரக்ஷன் வராதா? என்று எனக்குள்ளேயே  கேள்விகள். அந்த கேள்விக்கான விடைதான் இந்த படம். நண்பர்கள் பாராட்டினார்கள். அம்மா, அப்பா நம்பிக்கை வைத்தார்கள். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா கரம் கொடுத்து தயாரிக்க வந்தார். இப்படித்தான் இந்தப் படம் உருவாகி வளர்ந்தது.  

கதை எப்படி இருக்கும்...?
கதையின் முதன்மை கதாபாத்திரம் இடது கை பழக்கம் உள்ள பிக்பாக்கெட் திருடன். தான் செய்யும் தொழிலை மிக கௌரவமாக கருதும் அவனுக்கு, திடீரென்று "ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம்' என்ற குறைபாடு ஏற்படுகிறது. தன் உத்தரவு இல்லாமலேயே அந்த கை செயல்பட ஆரம்பித்து விடுகிறது. அதன் பின் நடக்கும் சுவாரஸ்யங்கள்தான் கதை. "சூது கவ்வும்', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' மாதிரியான படங்களின் கதை சொல்லும் பாணி இருக்கும். இப்போது காமெடி படங்கள் என்றால், தியேட்டரில் பக்கத்தில் இருக்கிறவர்கள் சிரிக்கும் போதே, நமக்கும் அந்தச் சிரிப்பு தொற்றிக் கொள்ளும். அதை சரியாக செய்து விட்டாலே போதும், ஒரு படம் மினிமம் உத்திரவாதத்துக்குள் வந்து விடும். அதை சவாலாக எடுத்து செய்து முடித்திருக்கிறேன். எல்லா அரசியல் நிகழ்வுகளுக்கு பின்னும், நிறைய அர்த்தம் இருக்கும். காரணம் இருக்கும். அதைப் பற்றி யோசித்திருக்க மாட்டோம். இந்தப் படத்தில் அப்படியான சில விஷயங்களை துணிச்சலாக 
பேசியிருக்கிறோம். 

புதுமுகங்கள் எப்படி நம்பிக்கை அளித்தார்கள்...?
பெரிய ஹீரோக்களை அணுகி இருக்கலாம். ஆனால், இதில் முகத்துக்கோ, உடல் வாகுக்கோ இடம் இல்லை. ஒரு சாதாரணமான ஆள் இருந்தாலே போதும். அப்படி வந்தவர்தான் ஆர்.எஸ்.கார்த்திக். நிரம்ப சினிமா அனுபவம் கொண்டவர். இந்தப் படத்தின் இன்னொரு தயாரிப்பாளராகவும் வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி. சிரிப்பது, அழுவது என ஒவ்வொரு இடத்திலும் ரசிகர்களின் பல்ஸ் பார்த்துதான் காட்சிகளை உருவாக்கி இருக்கிறேன். இப்போது சினிமாவில் ஒவ்வொரு 20 நிமிஷத்துக்கும் நிமிர்ந்து உட்காருகிற மாதிரி ட்விஸ்ட் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டாலே போதும். வேறு எதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். 

சில குறும்படங்கள் இயக்கியது மட்டும்தான் சினிமாவுக்கான உங்கள் அனுபவமா...?
குறும்படங்கள் இயக்கிய பின்பும், நான் யாரிடமாவது உதவியாளராக சேரத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், என் குறும்படங்களை பார்த்தவர்கள் "உங்களிடம் தனி மேக்கிங் தெரிகிறது. இது போதும். நீங்கள் சினிமாவுக்கு கதை தயார் செய்ய ஆரம்பித்து விடுங்கள்...' என்று தைரியம் கொடுத்தனர். இருந்தாலும் ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். லைட்டிங், எடிட்டிங் துறைகளின் அடிப்படையையும் கற்றுக் கொண்டேன். ஒரு சினிமா இயக்குநராக என்னைத் தகுதிப்படுத்திக் கொண்டுதான் படப்பிடிப்புக்கு புறப்பட்டேன். முதல் நாள் படப்பிடிப்பு பயமாகத்தான் இருந்தது. ஆனால், எல்லோரும் நண்பர்கள் என்பதால் சமாளித்துக் கொண்டேன். குறும்படங்கள் இயக்கும் போது நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்புத் தளம், நடிகர்களுக்கு சாப்பாடு என்று எல்லாவற்றையும் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். சினிமா அப்படி இல்லை. எல்லாவற்றுக்கும் தனித்தனி ஆள் இருப்பதால், மேக்கிங்கில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும். அதனால் குறும்படத்தை விட, சினிமா சுலபம்.
-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com