அனுபவமே பாடம்!

கடற்கரைக்கு குழந்தைகளை கூட்டிச்சென்றாலே பெற்றோர்கள் கூறும் முதல் வாக்கியம், "கையை கெட்டியாக பிடித்துக் கொள்.
அனுபவமே பாடம்!

கடற்கரைக்கு குழந்தைகளை கூட்டிச்சென்றாலே பெற்றோர்கள் கூறும் முதல் வாக்கியம், "கையை கெட்டியாக பிடித்துக் கொள். காலை மட்டும் தண்ணீரில் வை' என்பதுதான். பார்ப்பதற்கு கடல் நம்மை வரவேற்கும். ஆனால் அருகில் செல்லச் செல்ல ஆர்ப்பரிக்கும் அசுர அலைகள் நம்மை பயமுறுத்தும். ஆனால் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இந்தக் கடலிலேயே பயணம் செய்து தங்கப் பதக்கம் வாங்கி உள்ளார் நீல் ஆனந்த்  என்ற 13 வயது சிறுவன். 

டான் போஸ்கோ பள்ளியில் படிக்கும் இவர் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். இந்த கடல் பயணம் மீது எப்படி இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது? அவர் கூறுகிறார்:  
"எனக்கு  ஏழரை  வயது ஆகும்போது ஒருமுறை என் அண்ணா தேவானந்துடன்   பாய்மரக் படகில் பயணம் செய்தேன். அன்று ஆரம்பித்த  இந்த படகு சவாரி ஆசை, இன்று என்னை போட்டிகளில் பங்கு கொள்ள வைத்து உள்ளது. 2013 - ஆம் ஆண்டு  ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் சிறிய வயதில் பாய்மரப் படகில் பயணம் செய்த சிறுவன் என்ற விருதைப் பெற்றேன். புணேவில் நடந்த ஒரு போட்டியில் தங்கம் வென்றேன். சென்ற வருடம் நடைப்பெற்ற இந்தியா இன்டர்நேஷனல் ரேகேடாவில் தங்கப் பதக்கம் வென்ற பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இன்று தேசிய அளவில் என்னுடைய பிரிவில் நான் தங்கப் பதக்கத்தை வாங்கியதால் பல்வேறு உலக நாடுகளில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. 

ஹாங்காங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம், கத்தார் நாட்டில் நடைபெற்ற போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி தந்தது. 13  வயதுக்குள் 13  நாடுகளுக்கு மேல் நான் பயணம் செய்து விட்டேன்.  ஒரு முறை எனது தந்தை ராமகிருஷ்ணன் பாய்மரப் படகில் என்னுடன் ஜாலி பயணம் மேற்கொள்ள வந்தார். கடற்கரையில் இருந்து 10 மைல்  தூரம் நாங்கள் உள்ளே சென்று விட்டோம். திடீரென்று என் தந்தையை  பார்த்து,  "அப்பா தயவு செய்து இந்த படகில் உள்ள கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள்'' என்றேன். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாமே சில நிமிடங்கள் தான். வேகமாக காற்று வீச ஆரம்பித்தது. படகு நடுக்கடலில் அங்கும் இங்கும் அலைகளினால் தள்ள, என் அப்பா பயந்து விட்டார். அப்புறம் நாங்கள் நல்ல படியாக அந்த காற்றில் இருந்து வெளிப்பட்டு கரையை அடைந்தோம். 

அதுவரை மௌனமாக வந்த என் தந்தையார் என்னைப் பார்த்து, "கடலில் இப்படி பலமாக காற்று வீசும் என்று எப்படி நீ தெரிந்து கொண்டாய்?'' என்று கேட்டார். இப்படி காற்றடித்தால், இப்படி அலைகள் ஆடினால், இப்படி பாய்மரம் பறந்தால் இதுவெல்லாம் நடக்கும் என்று ஒரு கணிப்பு இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் பல்வேறு கணக்குகளும் இதில் உள்ளன. ஒரு ஏரோநாட்டிகல்  படிப்பு படிக்கும் ஓர் இளைஞன் தனக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைத்தான் சொல்வார்.

ஆனால் எந்த பாடத்தையும் விட அனுபவப் பாடம் அதிகம். நானும் மீனவர்களும் இந்த அனுபவப் பாடத்தை தினமும் கற்பதால் எங்களால் ஓரளவிற்கு முடிவு செய்ய முடிகிறது. 

நடுக்கடல் அமைதியானது. அங்கு இதமான காற்று வீசும். நம்மைச்சுற்றி பல்வேறு உயிரினங்கள் நீந்தி செல்லும். ஒரு முறை அரை டஜன் டால்பின்கள் என் படகை ஒட்டி அணிவகுத்து நீந்தியதை பார்த்து நான் சந்தோஷப்பட்டேன். ஒரு நாள் ஜெல்லி பிஷ் என்று கூறுவார்களே  அந்த வகையான மீன் வளர்ந்து பெரிதாக இருந்தது. ஏனோ தெரியவில்லை என் படகை ஒட்டியே வந்தது. திடீரென்று தண்ணீரிலிருந்து தாவி என்னை கடிக்கவும் செய்தது. உடனே நான் பாட்டிலில் இருந்த வினிகரை கடிபட்ட இடத்தில் தேய்த்தேன், சரி ஆகி விட்டது. 

என்னைப் பற்றிய விவரங்களை எனது அபிமான நடிகர் சூர்யாவிடம் எனது தந்தையார் கூற, அவர் என்னை உடனே பார்க்க வேண்டும் என்று கூறினாராம்.

என்னை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் என்னோடு படம் எடுத்துக் கொண்டு, பாங்காக்கில் நடக்க இருக்கும் உலக பாய்மரப் படகுப் போட்டியில் நான் தங்கம் வாங்க வேண்டும் என்று வாழ்த்தினார். என்னிடம் உள்ளது 3 பாய் மர படகுகள் தான். போட்டியின் போது நாங்களே படகுகளை கடலில் தள்ளி பயணம் செய்ய வேண்டும். இந்த பாட்டையா போட்டியில் 63  நாடுகள் பங்கு கொள்கின்றன. 285 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில் நான் தங்கம் வெல்ல வேண்டும். அதுவே என் ஆசை!'' என்றார் 
நீல்ஆனந்த்.
-சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com