360 டிகிரி

நாட்டுப்புற தெய்வங்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும் முறை, அந்தக் காலத்திலேயே வந்துவிட்டது.

* நாட்டுப்புற தெய்வங்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும் முறை, அந்தக் காலத்திலேயே வந்துவிட்டது. தனக்கும் மாதவிக்கும் பிறந்த மகளுக்கு தன் குல தெய்வமான மணிமேகலையின் பெயரையே சூட்டினான் கோவலன்.
- சு.இலக்குமணசுவாமி

• பினாங்கு என்று அழைக்கப்படும் மலேசியப் பகுதியில் வெற்றிலை - பாக்கு வியாபாரத்தைதான் அங்கு குடியேறிய தமிழர்கள் பிரதான வியாபாரமாகச் செய்து வந்தார்கள்.  அதனாலேயே அங்கே வெற்றிலைப் பயிர் கொடி கட்டிப் பறந்தது. மலேசிய மொழியில் வெற்றிலையை "பினாங்' என்றழைத்தார்கள். அதுவே அந்தப் பகுதியின் பெயராக நிலைத்துவிட்டது.

• சவுதி அரேபிய பெண்கள் விமானத்தைச் செலுத்த முடியும். ஆனால் கார் ஓட்டுவதற்கு நேரடி அனுமதி கிடையாது.  சவுதியின் முதல் பெண் விமானி ஹனாடி ஜக்காரியா 2005-இல் பைலட் லைசென்ஸ் பெற்றவர். 

* அப்போலோ ஐஐ மூலமாக விண்கலம் நிலவில் சென்று ஏற்றிய கொடி, அமெரிக்காவில் ஒரு சிறிய கடையில் வாங்கப்பட்டது. விலை 5.50 டாலர்.
- பி.பாலாஜி கணேஷ்

* மனிதனின் தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் மூலம் உற்பத்தியாகிற வியர்வை  வெளியேற முடியுமே தவிர, அதே துவாரத்தின் வழியாகத் தண்ணீர் உள்ளே போக முடியாது.
- மு.பெரியசாமி.

* பிறந்த குழந்தையின் கண்ணிலுள்ள லென்ஸ் கோலிபோல் உருண்டையாக இருக்கும். பிறகுதான் இது இருபுறக் குவி லென்சாக மாறுகிறது.
- ஆர்.மகாதேவன்

* கடிகாரத்தில் "பாலன்ஸ் வீல்' எனப்படுவது ஒரு முக்கியமான உறுப்பாகும். ஒருநாளில் இது 4,32,000 தடவை முன்னும் பின்னுமாக நகர்கிறது. இந்த தூரம் பன்னிரண்டரை மைல்களாகும். இது அசைவதற்கு ஆற்றலைத் தருவது ஒரு ஸ்ப்ரிங். ஒரு கடிகாரம் செயல்படும் விதத்தைப் பார்த்தால் அதன் ஆயுள் ஒரு மோட்டார் காருடையதைப்போல இருபது மடங்காகும்.
- ஆர்.மீனாட்சி

* ஒருவருடைய தோல் நிறத்தை மெலானின், கரோடின், ஹீமோகுளோபின் ஆகிய மூன்று நிறப் பொருட்கள்தான் தீர்மானிக்கின்றன. இந்த மூன்றுமே அனைவரது உடலிலும் இருக்கும். எது கூடுதலாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தோலின் நிறம் அமைகிறது. இம் மூன்றில் மெலானின் மிகவும் முக்கியமானது. இது அதிகமாக இருந்தால் தோல் கருப்பாக இருக்கும். தோலின் ஒவ்வொரு சதுர அங்குலப் பரப்பிலும் அறுபதாயிரம் செல்கள் இருக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி

* பூஜ்யத்தைக் கண்டுபிடித்த இந்திய கணித மேதையும், சிறந்த வானியல் வல்லுநருமான ஆரியபட்டாவின் சிலை, புனேயில் உள்ள "இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் ஃபார் அஸ்ட்ரானமி மற்றும் அஸ்ட்ரோ பிசிக்ஸ்' கட்டட வளாகத்தில் உள்ளது.
- அ.யாழினி பர்வதம்

* குப்பைகள் இன்று உலர்ந்தது (Dry) மற்றும் ஈரமானது (Wet) என இரு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.
 இதனை முதன்முதலில், ஒரு நகரம் முழுவதும் 100 சதவிகிதம் பிரித்து, சாதனை செய்த நகரம் எது தெரியுமா?
 தமிழ்நாட்டின் "திருநெல்வேலி' நகரம்தான்!
 இப்படி பிரிக்கப்படாத வீடுகளுக்கு, 10 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது!
- ராஜிராதா
வினா-விடை கேட்கும் முறையை ஆங்கிலேயர்தான் முதலில் அறிமுகப்படுத்தினார்கள். இச்சொல்லை "நேர்காணல்' என்று தூய தமிழாக்கம் செய்து மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் வள்ளலார் இராமலிங்க அடிகள். முதல் நேர்காணல் என்பது காசிப் பண்டாரத்திற்கும் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவருக்கும் 1851-இல் நடைபெற்ற உரையாடல்.
("அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம்' நூலிலிருந்து)
- முக்கிமலை நஞ்சன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com