எங்களுக்குப் பங்கில்லை! -மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை. அதிமுகவின் அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும் கூட
எங்களுக்குப் பங்கில்லை! -மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு

மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எம். வெங்கய்யா நாயுடு தமிழகத்திற்கு வந்த நேரத்தில், கோவையில் அவரைச் சந்தித்தபோது:

பாஜகவின் 3 ஆண்டு சாதனை குறித்து பேசப்படும் இந்த காலகட்டத்தில், பொருளாதாரத்தில் தோல்வி அடைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனவே?
சுதந்திர இந்தியாவில் திறமையான தலைமையுடன் செயல்படும் முதலாவது சிறப்பான ஆட்சி மோடியுடையது. பிரதமர் முன்னிலையில் கட்சித் தலைவி முடிவுகளை எடுப்பது என்ற அளவில்தான் கடந்த ஆட்சி இருந்தது. தற்போதைய ஆட்சியாளர்கள் மீது எந்த ஒரு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளும் எழவில்லை என்பதே மற்றொரு சிறப்பு.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. அதிக விளைச்சலால் உற்பத்திப் பொருள்களின் விலை குறைந்துவிட்டது என்று விவசாயிகள் குறைபட்டுக்கொள்ளும் அளவுக்குத்தான் விலைவாசி உள்ளது. எனவே, பொருளாதாரத்தில் தோல்வி என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

நாட்டின் வளர்ச்சிக்கு வழிதேடாமல் தேவையற்ற வேலைகளில் பாஜக ஈடுபடுவதாக எழும் புகார்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
தடம் புரண்டிருந்த பொருளாதாரம் வளர்ந்து வருவதைப் பொறுக்காமல் சுமத்தப்படும் குற்றச்சாட்டு இது. அண்மைக் காலமாக நிதி, வருவாய், வர்த்தகப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை என அனைத்துமே கட்டுக்குள் உள்ளன. இது மிகப் பெரிய விஷயம். சர்வதேசப் பொருளாதாரம் தற்போது சரிந்துள்ளது.

அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 3 சதவீதமாகவும், சக்தி வாய்ந்த சீனாவின் வளர்ச்சி கூட 6.9 சதவீதமாகவும் குறைந்துள்ள நிலையிலும், இந்தியாவின் பொருளாதாரம் 7.1 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. சாலைகள், மின்னணு மயமாக்கல், வங்கி, காப்பீடு, வீட்டு வசதி என அனைத்துத் துறைகளிலும் சீராக நாடு வளர்ச்சி அடைகிறது என்பதே உண்மை.

மாநில சுயாட்சி கருத்து வலுப்பெற்று வருகிறதே?
மாநில சுயாட்சிக்கு எதிராக என்றும் நாங்கள் இருந்ததில்லையே. வரி வருவாய் பங்கீட்டில் தவறு இருப்பதாகக் கூறி இதுபோன்ற குரல்கள் எழுகின்றன. ஆனால், மத்திய அரசு விதித்துத் திரட்டும் மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கு கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 32 சதவீதமாக இருந்தது. ஆனால், அதை நாங்கள் 42 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்.

இயற்கைப் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட இதர விஷயங்களையும் கணக்கில் கொண்டு பார்த்தால், வரி வருவாயில் சராசரியாக 50 சதவீதம் மாநில அரசுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்குமே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய அதிகாரப் பகிர்வு நடவடிக்கை.

வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நாட்டில், விவசாயிகள் பிரச்னை அடிக்கடி எழுவது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தாதா?
50 ஆண்டுகளாக இந்த நாட்டையும், பல மாநிலங்களையும் ஆட்சி செய்தது காங்கிரஸ்தானே. குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ள மோடி அரசைக்  குறை கூறுவதில் நியாயம் இல்லை.

நீர்ப் பாசனத் திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, குறைந்த பிரீமியத்தில் அதிக இழப்பீடு பெறக் கூடிய வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், ரூ.8.50 லட்சம் கோடியாக இருந்த வேளாண் கடனை ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தியது, இயற்கைப்  பேரிடரால் பாதிக்கப்படும் குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தியது, தட்டுப்பாடு இல்லாமல் யூரியா கிடைக்கச் செய்தது போன்ற சாதனைகளை மறைப்பதற்காகப் போராட்டங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன.

ஜி.எஸ்.டி. எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்குமா?
இது காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தத் திட்டம். ஜி.எஸ்.டி. நீண்டகால பயனை அளிக்கக் கூடிய புரட்சிகரத் திட்டம் என்பதால்தான் அதில் தேவையான திருத்தங்களைச் செய்து அமல்படுத்தியுள்ளோம். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டால் பண வீக்கம் குறையும், பொருள்களின் விலை குறையும். இருப்பினும் தொடக்கத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சில்லறை வர்த்தகர்கள் முதல் சினிமா துறையினர் வரை திருத்தங்கள் கோருகின்றனரே? இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனின் கருத்து கூட பரபரப்பாக பேசப்படுகிறதே?
நாடு முழுவதிலும் இருந்து வரி குறைப்பு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி. மத்திய அரசின் கைகளில் இல்லை. நிதியமைச்சருக்கு இதில் எந்த அதிகாரமும் இல்லை. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநில நிதியமைச்சர்களை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளன.

எனவே, தங்களுக்கு ஜி.எஸ்.டி.யால் பிரச்னை வரும் என்று கருதுகிறவர்கள் முதலில் அந்தந்த மாநில அரசுகளைத்தான் அணுக வேண்டும். மாநில அரசு கவுன்சிலை அணுகினால், அனைவரின் ஒப்புதலுடன் திருத்தம் கொண்டு வர முடியும்.

திரைத் துறைக்கு 28 சதவீத வரி விதிப்பு என்பதைக் குறைக்க வேண்டும் என்று கமல்ஹாசன் என்னிடமும் பேசினார். வட்டார மொழித் திரைப்படங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நான் ஏற்கெனவே கூறியபடி இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை.

அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜகவின் தலையீடு இருப்பதாக எழும் குற்றச்சாட்டு குறித்து...

அது முற்றிலும் தவறான பிரசாரம். அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை. அதிமுகவின் அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும் கூட. தமிழகத்தைப் பொருத்தவரை ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ யார் முதல்வராக இருந்தாலும் அவர்களுடன் இணைந்தே பாஜக செயல்படும். ஏனெனில் எங்களின் இறுதி இலக்கு நாட்டை முன்னேற்றுவதே.

இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுவதை அரசியலுக்காக என்று கருதிக் கொள்ளக் கூடாது. தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அதிமுகவினர் அதை நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். அடிக்கடி தேர்தல் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை. அது நாட்டுக்கும் நல்லது அல்ல.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்பதைப் போன்று பேசுகிறீர்களே? வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் இல்லையா?
கண்டிப்பாக இல்லை. இங்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் ஆட்சியில் அமருவது பற்றி எப்படி சிந்திக்க முடியும்? தமிழகத்தில் தற்போது ஓர் அரசு உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு இதன் ஆட்சிக் காலம் உள்ளது. அதற்குள் இங்கு பாஜகவை வளர்த்துக் கொள்ள எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. 

தமிழக பாஜகவினருக்கு நான் சொல்லிக் கொள்ளும்  அறிவுரை என்னவென்றால், மோடி தற்போது எல்லா வீடுகளையும், எல்லாத் தரப்பு மக்களின் இதயங்களையும் சென்றடைந்துவிட்டார். எனவே, மக்களின் வீடு தேடிச் சென்று கட்சியின் கொள்கை, ஆட்சியின் சாதனைகளை விளக்கிக் கூறுங்கள். கட்சிக்கு முதலில் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொண்டு, வார்டுதோறும் அமைப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு கருத்தொத்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்டு வெற்றி பெறலாம். 

ஹிந்தித் திணிப்பு குறித்து...
இது தமிழகத்தில் திமுக நடத்தும் நகைச்சுவை நாடகம். தமிழக மக்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை அண்மையில் வெளியான ஒரு புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மக்களும் ஹிந்தியை திணிப்பதைத்தான் எதிர்க்கின்றனரே, தவிர படிப்பதை அல்ல. நாங்கள் எந்த இடத்திலும் ஹிந்தியைத் திணிக்கவில்லை.

இந்திய மக்கள் தங்களது தாய்மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். அது தமிழாகவோ வேறு மொழியாகவோ இருக்கலாம். முதலில் கூறியதைப் போன்று ஹிந்தித் திணிப்பு, மாநில சுயாட்சி, வடக்கு - தெற்கு ஒப்பீடு போன்றவையெல்லாம் திமுக ஒவ்வொரு காலகட்டத்திலும் முயற்சித்துப் பார்த்து தோற்றுப்போன விஷயங்கள். அந்தக் கட்சி பின்னடைவைச் சந்திக்கும் நேரங்களில் எல்லாம் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கமானதுதான்.

உணவு விஷயத்தில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக பாஜக செயல்படுகிறதே?
நிச்சயம் இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் பாஜகவின் உண்மையான அடையாளத்தை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு மாற்றுகின்றன. உணவு என்பது தனி நபரின் உரிமை சம்பந்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அதில் எப்போதும் தலையிடக் கூடாது என்பதே எனது கருத்து.

மேலும், நான் அசைவ விரும்பி. இப்போது கூட அசைவம் சாப்பிட்டுவிட்டுத்தான் உங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன். பாஜக சைவ உணவை வலியுறுத்தி ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகக் கூறுவது தவறானது.

எங்களுடன் கடந்த காலங்களில் கூட்டணி அமைத்திருந்த தமிழக கட்சிகளுக்கு இது தெரியும். திருநாவுக்கரசர் எங்களது கட்சியில் இருந்தபோது, நான் சென்னை வந்தபோதெல்லாம் அவரது வீட்டில் இருந்து அசைவ உணவை வரவழைத்து சாப்பிட்டிருக்கிறேன்.

இந்த முறை திராவிட நாடு கோரிக்கை கேரளத்தில் இருந்து எழுந்துள்ளதே?
திராவிட நாடு என்று ஒன்று இல்லை. அடிப்படையில்லாமல் சிலர் அப்படிப் பேசுகின்றனர். கேரள மக்கள் தங்களின் அடையாளத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். நாம் மாநில அளவில் தமிழர்களாக, மலையாளிகளாக, தெலுங்கர்களாக இருந்தாலும் தேசிய அளவில் இந்தியர்களாகவே இருக்கிறோம். நாம் தமிழர்களாக இருப்பதற்கு பெருமைப்படுவதைப் போன்று இந்தியர்களாக இருக்கவும் பெருமைப்பட வேண்டும். வெளிநாடு செல்லும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் அடையாளம் தமிழன் என்பதாக இல்லாமல் இந்தியன் என்பதாகவே இருக்கும்.நான் தென்னாட்டில் இருந்து சென்று பாஜகவின் தலைவராகி இருக்கிறேன். அமைச்சராகி இருக்கிறேன். மாட்டிறைச்சி போன்று இதுவும் பாஜகவின் அடையாளத்தை மாற்றும் முயற்சிகளில் ஒன்றுதான்.

மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவராக, தற்போதைய உயர் கல்வி நிலையப் போராட்டங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மாணவர்களின் முதல் கடமை படிப்பதுதான். அவர்களுக்காகப் பெற்றோரும், அரசும் நிறைய பணம் செலவிடுகின்றன. ஆனால், மாணவர்கள் மாட்டிறைச்சி விருந்து, முத்தத் திருவிழா, அப்சல் குரு நினைவு தினம் போன்ற தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

மாட்டிறைச்சியோ, முத்தமிட்டுக் கொள்வதோ விருப்பமானதாக இருந்தால் அதைப் பொது இடங்களில் செய்ய வேண்டாம். மாணவர்கள் தேசியப் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக செய்தித் தாள்களைப் படிக்க வேண்டும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்க வேண்டும்.

பாடத் திட்டம், கல்விக் கட்டணம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் சார்பில் போராடலாம். தேவையில்லாமல் வளாகத்துக்குள் வன்முறையைத் தூண்டும் வெளிநபர்களின் பிரச்னைகளை எழுப்பவோ, ஆதரிக்கவோ கூடாது. 

தமிழகத்தின் காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியவில்லையே?
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் அதன் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியில் இருந்தது. காவிரி பிரச்னைக்கு அவர்கள் தீர்வு காணாதபோது, மோடியிடம் மட்டும் எதிர்பார்ப்பது ஏன்? இரு மாநிலங்களுக்கு இடையிலான இதுபோன்ற பிரச்னைகள், தீர்வாயத்தால் தீர்க்கப்படக் கூடிய பிரச்னைகளே தவிர மத்திய அரசால் அல்ல.

அதேபோலத்தான், முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்னை போன்றவை நீண்டகால பிரச்னைகள். ஒரே நாளில் மந்திரம் போட்டு அவற்றை தீர்த்துவிட முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஓர் எல்லை உள்ளது. அந்த எல்லைக்குள் மட்டுமே நடந்து கொள்ள முடியும்.

தலைமைச் செயலகத்துக்கு சென்று முதல்வருடன் ஆலோசனை நடத்தியதை, மாநில அரசு மீது ஆதிக்கம் செலுத்துவதாக கருதிக் கொள்ளலாமா?
மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அவர் தலைமைச் செயலகம் வந்தார். மத்திய, மாநில விவகாரங்கள் குறித்து நாங்கள் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளோம். அதிமுகவினருக்கு இது நன்கு தெரியும் என்பதால்தான் அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.

ஒரு மாநில ஆட்சிக்கு உதவுவதற்கு, முன்னேற்றதுக்காக நடத்தப்பட்ட ஆலோசனையை தவறாகக் கூறக் கூடாது. மத்திய அமைச்சர்கள் தலைமைச் செயலகங்களுக்கு சென்று ஆலோசனை நடத்துவதை பிற மாநிலங்கள் வரவேற்கின்றன.

மத்திய அரசு ஏதேனும் கோப்புகளை நிலுவையில் வைத்திருந்தால், தில்லியில் எங்களது தலைமைச் செயலகங்களுக்கு மாநில அமைச்சர்கள் வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் மட்டும் மாநில தலைமைச் செயலகங்களுக்கு செல்லக் கூடாதா?

தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அக்கறையுடன் செயல்படும் பாஜக, பாதுகாப்புத் துறைக்கு நிரந்தர அமைச்சரை நியமிக்கவில்லையே?
ஏ.கே.அந்தோணி முழுநேர பாதுகாப்புத் துறை அமைச்சராகத்தான் இருந்தார். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ஏதாவது உருப்படியாக நடந்ததா? எந்தக்  கோப்பும் கையெழுத்தாகவில்லை, எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

நிலையான அமைச்சர் இல்லை என்பது அரசியலுக்காக எழுப்பப்படும் குற்றச்சாட்டுதான். விரைவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நியமிக்கப்படலாம். ஆனால், அமைச்சரவை விரிவாக்கமா என்றால் அதைப் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்.

சமூக ஊடகங்களை பாஜகவால் எப்படி சமாளிக்க முடிகிறது?
எங்களுக்கு என்று வேறு ஊடகங்கள் இல்லாததால்தான் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறோம். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி டி.வி., செய்தித்தாள்கள் உள்ளன. ஆனால், நாங்களோ எல்லா நடுநிலை ஊடகங்களும் எங்களுடையது என்ற பாணியில் செயல்படுகிறோம்.

ஒரு கட்சி சார்ந்த ஊடகம் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டால் அதை சம்பந்தப்பட்ட கட்சியினர் மட்டுமே பார்ப்பார்கள். அரசியல் தலைவர்கள் தங்களுக்கென்று தனியாக செய்தித் தாள்களையோ, தொலைக்காட்சிகளையோ நடத்தக் கூடாது என்பதே எனது அறிவுரை.

அவர்களுக்கு அதற்கான உரிமை இருந்தாலும் நம்பகத்தன்மை இருக்காது என்பதும் ஊடகங்கள் எப்போதும் நடுநிலைமையுடன் இருக்க வேண்டும் என்பதுமே எனது கருத்து.

என்.டி.டி.வி.யின் நிர்வாக இயக்குநர் வீட்டில் சோதனை நடத்தியது ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா?
ஓர் ஊடக உரிமையாளர் ஒரு வங்கியிடம் பணம் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பது குற்றச்சாட்டு. இதற்காக விசாரணை நடத்துவது தவறானதா? ஊடகங்கள் மீதான புகார்கள் குறித்து விசாரிக்கவே கூடாதா? அப்படிச் செய்வது ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் செயலா? ஊடக சுதந்திரம் என்ற பெயரில் யாரும் தவறு செய்யக் கூடாது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது சிபிஐ அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தியதை மறந்துவிட்டுப் பேசக் கூடாது.
சந்திப்பு: க.தங்கராஜா
படங்கள்: வீ.பேச்சிக்குமார்.

"அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை. அதிமுகவின் அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும் கூட..."

" தமிழக மக்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை அண்மையில் வெளியான ஒரு புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. ஹிந்தியை திணிப்பதைத்தான் எதிர்க்கின்றனரே, தவிர படிப்பதை அல்ல."

" கர்நாடகத்தில் காங்கிரஸ்  ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் அதன் கூட்டணி  கட்சியான திமுக ஆட்சியில்  இருந்தது. காவிரி பிரச்னைக்கு  அவர்கள் தீர்வு காணாதபோது,  மோடியிடம் மட்டும் எதிர்பார்ப்பது ஏன்?"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com