தெரிந்த பெயர், தெரியாத விவரம்: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்

காந்தி அருங்காட்சியகம்  வைகை ஆற்றின் தென்பகுதியில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது .
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்

* காந்தி அருங்காட்சியகம்  வைகை ஆற்றின் தென்பகுதியில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது .

* இதன் கட்டடங்கள் கி.பி.1700 ஆம் ஆண்டில் ராணிமங்கம்மாள் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். கோடை கால அரண்மனையாக கட்டப்பட்டது.   ராணி மங்கம்மாள் தனது குதிரைகளையும் வளர்த்து வந்தார். 
அக்குதிரைகளில் இறந்த மூன்று குதிரைகளுக்கு இங்கு சமாதி அமைத்து வழிபட்டு வந்துள்ளார். 

* பிரதான கட்டடத்தின் முதல் தளத்திலிருந்து வெளியே செல்ல ரகசிய சுரங்கப்பாதை உள்ளது. அதன்வழியாக மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, தெப்பக்குளம் மையமண்டபம் ஆகியவற்றுக்குச் செல்லலாம்.  தற்போது சுரங்கப்பாதையின் முதல் மூன்று படிகள் மட்டுமே வெளியில் தெரிகிறது.

* ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கட்டட வளாகத்தின் இடது, வலது புறம் பாரம்பரியம் கருதாமல் விரிவாக்கக் கட்டடங்கள் கட்டப்பட்டன. அதன்பின் நீதிமன்றமாகவும், நீதிபதிகள் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டது. 

* காந்தியடிகள் மதுரைக்கு பத்துக்கும் மேற்பட்ட தடவை வந்து சென்றுள்ளார்.  மகாத்மாவை  அரை ஆடை அணியச் செய்த இடம் மதுரை.  எனவே,  அவர் மறைவுக்குப் பின் மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைந்தது. இதில் முக்கியமானவர்கள் மதுரை காந்தி என அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்பராமனும், காந்தி கிராம நிறுவனர் டாக்டர் செளந்தரம்மாளும் குறிப்பிடத்தக்கவர்கள்.

* காமராஜர் முதல்வராக இருந்தபோது காந்தி அருங்காட்சியகத்துக்கு 13 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி புதிய பகுதிகளையும் கட்ட உதவினார்.   இதை அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1959-ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.

• அருங்காட்சியகத்தின் முதல் மேல் தளத்தில் உள்ள காட்சிக்கூடத்தில் காந்தியடிகள் சுடப்பட்டபோது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகள், காலணி, இறுதிக்காலத்தில் பயன்படுத்திய கை ராட்டை, மூக்குக் கண்ணாடி என அவரது அனைத்துப் பொருள்களும்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

• காந்தியடிகள் எழுதிய கடிதங்கள், அவர் தமிழில் கையெழுத்திட்டு எழுதிய கடிதம் மற்றும் தேசிய, உலக தலைவர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும்  வைக்கப்பட்டுள்ளன.

• காந்தியடிகளின் அஸ்தியும் இங்குள்ள அமைதிப் பீடத்தில் வைத்து காக்கப்பட்டு வருகிறது. பொன்னிறத்தில் இருந்த காந்தி அருங்காட்சியக கட்டடத்தின் நிறம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் வெள்ளை நிறமாக மாற்றப்பட்டது. 

• வாரந்தோறும் வெள்ளிக்கிழமை  சர்வசமய பிரார்த்தனை இங்கு நடத்தப்பட்டுவருகிறது. 

• தற்போது இங்கு ஹிந்தி, சம்ஸ்கிருதப் பயிற்சி, யோகா பயிற்சி மற்றும் கைத்திறன் தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 

• காமராஜர் பல்கலைக்கழக அனுமதியுடன் காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. 

• காந்தியடிகள் தங்கிய குடிசை மாதிரி தற்போது நவீன காலத்துக்கேற்ப கட்டடமாக மாற்றப்பட்டுள்ளது.
 -வ.ஜெயபாண்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com