பாரதிராஜா என் மானசீக குரு!

குறும்பட உலகத்தில் இருந்து மற்றுமொரு வரவு இயக்குநர் நித்திலன். இவர் இயக்கி முடித்திருக்கும் "குரங்கு பொம்மை' எதிர்பார்ப்புக்குரிய
பாரதிராஜா என் மானசீக குரு!

குறும்பட உலகத்தில் இருந்து மற்றுமொரு வரவு இயக்குநர் நித்திலன். இவர் இயக்கி முடித்திருக்கும் "குரங்கு பொம்மை' எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் என ஒவ்வொரு தருணத்திலும் கவனம் ஈர்க்கிறது கதைக் களம். பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ், பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், ரமா என இதுவரை இல்லாத நடிகர்களை ஒருங்கிணைத்து கதை சொல்ல வருகிறார் நித்திலன்.

என்ன, எல்லோருமே குறும்பட அனுபவங்களோடு மட்டுமே வருகிறீர்கள்...? 
எனக்கு பெரிய சினிமா அனுபவங்கள் கிடையாது. வேலூர் பக்கம் பரதராமி என்று ஒரு கிராமம். யாருக்கும் பெரிய பரிச்சயங்கள் இல்லாத ஊர். அங்கிருந்து கிளம்பி வந்து இந்த சென்னை மாநகரத்தில் நான் கற்றது அத்தனையும் பாடங்கள். செய்யாத வேலை கிடையாது. சுற்றாத இடம் கிடையாது.  கிடைக்கிற நேரங்களில் சினிமா பார்ப்பதுதான் பிரதான வேலை. அந்த சினிமாக்கள் எல்லாம் என்னுள் நடத்தியது பரமபத விளையாட்டு. 

பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன், வெற்றிமாறன், தியாகராஜன் குமராராஜா இன்னும் ஏக படைப்பாளிகளின் சினிமாக்கள் சினிமாவின் நீள அகலங்களை புரிய வைத்தது. ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்குமான தொடர்பு... நடிகர்களின் பங்களிப்பு...  இன்னும் நிறைய சங்கதிகள் சினிமாக்கள்தான் சொல்லி தந்தன. அந்த சமயத்தில்தான் குறும்படங்கள் குறித்த பேச்சு தொடங்கியிருந்தது. நண்பர்கள் உதவியுடன் நானும் அந்த உலகத்துக்குள் வந்தேன். 

"புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்', "புன்னகை விற்பனைக்கு' என சில குறும்படங்கள் எடுத்து, "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சிக்கு போனேன். நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அப்பா, அம்மா நம்பிக்கை வைத்தார்கள்.  ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரிக்க முன் வந்ததது. நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன் சார் வாய்ப்பை உருவாக்கி தந்தார். இப்படித்தான் இது வளர்ந்து வந்தது.  

படத்துக்கு உருவாகியிருக்கிற எதிர்பார்ப்பு அதிகம்... அதை எப்படி எதிர்கொள்வீர்கள்...?
ஆமாம், இதை ஒரு வழக்கமான படமாக அணுக முடியாது. ஒரு இயக்குநரா... நல்ல நடிகர்களோடு, கதைக் களத்தோடு இணைந்து வேறு வேறு உலகத்தையும் அனுபவங்களையும் தர வேண்டியது என் கடமை. அந்தப் பொறுப்பை உணர்ந்து பணி செய்திருக்கிறேன். இது நடப்பு வாழ்க்கையை பற்றிய அச்சு அசல் கதை. 

என்னதான் நாம் புத்திசாலியாக இருந்தாலும், சக மனிதனின் மனதை எடை போட்டு பார்த்து விட முடியாது. சிரித்துக் கொண்டே இருப்பவர்கள், புத்திக்குள் கத்தியை சொருகி வைத்திருப்பார்கள். அது தெரியாமலேயே அவர்களோடு நெருங்கிப் பழகுவோம்.  இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். துக்கம், சந்தோஷம், ஏக்கம், சிரிப்பு, வறுமை, வசதி என எல்லோருக்குமே ஒரே உணர்ச்சிகள்தான். ஆனால் ஒவ்வொருத்தரையும் நிறுத்தி, "இப்போ ஏன் சிரிச்கீங்க.. ஏன் அழுதீங்க...' என்று கேட்டால், அவர்கள் சொல்கிற காரணம் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. அப்படி பார்த்தால் எல்லோருமே தனித்தனி உலகம்தான். அப்படி தனித்தனி உலகமாக வாழ்கிற சில கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கிற சம்பவங்கள்தான் கதை. இதுவரை சொல்லப்படாத கதைக்களமாக இது இருக்கும். 

காதலும் இருக்கும் போலிருக்கே...?
எத்தனை முறை சொன்னாலும் காதல் அலுக்குமா என்ன? காதல் மாதிரி இந்த பூமியை உயிர்ப்பிக்கிற விஷயம் எதுவும் கிடையாது. இந்தக் கதைக்கும் அது முக்கியமானது. விதார்த் - டெல்னா டேவிஸ் இருவரும்தான் இதில் காதல் ஜோடி. இருவருக்கும் இடையே துளிர்க்கிற காதல் இந்தக் கதையின் ஓட்டத்துக்கும் முக்கியமானது. காதல் ஒரு பங்கு மட்டும்தான். அதில் துளியும் ஆபாசம் இருக்காது. உங்களுக்கு ஒரு காதல் இருந்திருக்குமே. அப்படித்தான் இருக்கும் இந்தக் காதல்.   

பாரதிராஜாவை நடிக்க வைத்து விட வேண்டும் என எல்லா இயக்குநர்களும் தீர்மானமாக இருக்காங்க...?
என் வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர் பாரதிராஜா. தன் திறமையாலும், தகுதியாலும், கேரக்டராலும் என்னை மாதிரி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஆதர்ஸமாக இருந்தவர். அவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட எத்தனையோ ஏகலைவர்கள் இருக்கிறார்கள். அதில் நானும் ஒரு ஏகலைவன். கதையில்  ஒரு வெகுளித்தனமான மனுஷன் கதாபாத்திரம் இருந்தது. அதற்காக நிறைய பேரை யோசித்து யோசித்து பார்த்தேன். ஏதோ ஒரு கணம்தான், பாரதிராஜாவை இந்தக் கேரக்டருக்குள் கொண்டு வந்தது. அந்த கணத்துக்கு நன்றி. 

பாரதிராஜா ஏற்கெனவே நான் இயக்கிய குறும்படங்களை பார்த்திருக்கிறார். அதற்காக என்னை பாராட்டவும் செய்திருக்கிறார். அந்த ஒரு நம்பிக்கையில் போய் அவர் முன் நின்றேன். நம்பிக்கை கரம் கொடுத்து வாழ்த்தினார். மனுஷன் அப்படி நடித்திருக்கிறார். நெருப்பு மாதிரி வாழ்ந்த ஒரு படைப்பாளி. இப்போது கனிவாகவும், தெளிவாகவும் மாறியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் கருத்து வைத்திருக்கிறார். மனசைத் தொடுகிற மாதிரியாகவும் அவர் கேரக்டர் வந்திருக்கிறது. 

அது போல் விதார்த், குமரவேல், பி.எல்.தேனப்பன் இவர்கள் எல்லாம் நீங்கள் நினைத்திராத இடத்தில் இருப்பார்கள். நகைச்சுவையும் ஒரு அம்சமாக இதில் இருக்கும்.  
-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com