பிடித்த பத்து: என். விட்டல்

குஜராத் மற்றும் மத்திய அரசு உள்துறை செயலராகவும், ஊழல் கண்காணிப்புத் துறை ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என். விட்டல்
பிடித்த பத்து: என். விட்டல்

குஜராத் மற்றும் மத்திய அரசு உள்துறை செயலராகவும், ஊழல் கண்காணிப்புத் துறை ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என். விட்டல்:
1. பாரம்பரியம் எனப்படும் ஹெரிடேஜ் பாதுகாப்பு எனக்குப் பிடித்த விஷயம்.  இதில் எஸ்.முத்தையா, வி. ஸ்ரீராம் மற்றும் ராண்டார் கை ஆகிய மூவரும் ஆற்றி வரும் பணியை வெகுவாக ரசித்துப் பாராட்டுவேன்.
2. தென்னிந்தியக் கலை, கலாசாரம் பற்றி மாதந்தோறும் ஆர்.டி. சாரி என்பவர் நடத்தும் ஞாயிற்றுக் கிழமை காலைச் சொற்பொழிவுகள் எனக்குப் பிடித்தவை. நான் கலந்துகொள்ளாத நிகழ்வுகள் வெகு குறைவு. 
3. சென்னையின் மார்கழி மாத இசைக் கச்சேரிகள். இது போன்று உலகில் வேறு எங்கும் நடப்பதில்லை.  இளைய தலைமுறையும், புகழ் பெற்ற கலைஞர்களும் பங்கு கொள்ளும் இந்த இசை-நடன விழா எனக்குப் பிடித்த ஒன்று.
4. புத்தகம் படிப்பது என்னுடைய பொழுது போக்கு மட்டுமல்ல; உயிர் மூச்சு. அதிலும் சிந்தனையைச் சீண்டும், சிந்தனைக்கு சவால் விடும் நூல் என்றால் ஒரு வரி விடாமல் படிப்பேன்.  அறிவியல், பொருளாதாரம், வரலாறு சார்ந்த புத்தகம் என்னை எப்போதும் ஈர்க்கும். (தற்போது படிக்கும்  டி.சி.ஏ. ராகவன் எழுதிய "அட்டென்டென்ஸ் லார்ட்' என்ற  நூல் பைராம் கான், அவர் மகன் ரஹிம் பற்றியது. ரஹிம் துள்சிதாஸ் காலத்தவர். மிகப் பெரிய கிருஷ்ண பக்தர்.)   
5. ஆன்மிகத்தில் வேளுக்குடி கிருஷ்ணன், துஷ்யந்த் ஸ்ரீதர் மற்றும் எம்.ஏ. அனந்தபத்மநாபாசாரியார் சொற்பொழிவுகளை மிகவும் ரசிப்பேன். குறிப்பாக, இப்போது நான் துஷ்யந்த் ஸ்ரீதர் விசிறி. வாழ்க்கையை ரசிப்பதும், பிறருக்கு உதவுவதும் இந்த ஆன்மிக வாழ்க்கையில் அடங்கும்.
6. சிவாஜி கணேசன் தமிழ் உச்சரிப்பு என்னை மிகவும் ஈர்த்த விஷயம். சமீபத்தில் அவருடைய "ராஜாராணி', "மனோகரா' உட்பட 50 திரைப்படங்களை டிவிடியில் பார்த்தேன். இவர் போன்று தமிழை வாய்மொழியாக வெளிப்படுத்தி வெற்றி கண்டவரை நான் பார்த்ததில்லை. நான் சிவாஜி கணேசன் பக்தன்.
7. இசையைப் பொருத்தவரை நான் இந்தி சினிமா பாடல்களை ரசித்துக் கேட்பேன்.  அதிலும் முகேஷ் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. எனக்கு ஆறு மொழிகள் தெரியும். அதனால் ஹிந்தி, உருது கஸல்களையும், மராத்தி அபங் பாடல்களையும் ரசிப்பேன். இப்போது சென்னை வந்த பிறகு கர்நாடக இசையை ரசிக்கிறேன். சங்கராபரணமும், கரகரப்ரியாவும் எனக்கு மிகப் பிடித்த ராகங்கள்.
8. தமிழில் எனக்குப் பிடித்த ஆசிரியர் சந்தேகமில்லாமல் கல்கிதான். தமிழ்ப் பத்திரிகைகளில் அந்திமழையும், விக்கிரமனின் இலக்கியப்பீடமும்.
9. நகைச்சுவை எனக்கு மிகப் பிடித்த விஷயம். ஆங்கிலத்தில் பி.ஜி.வோட்ஹவுஸையும், தமிழில் பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ரா.சுந்தரேசனையும் வெகுவாக ரசிப்பேன். 
10. பிடித்த உணவு நிச்சயமாக ஆனியன் ரவா தோசையும், பாதாம் ஹல்வாவும்தான்!
-சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com