பிடித்த பத்து: ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)

சுவாமி சின்மயானந்தா : எனக்குள்ளே ஆன்மிக விழிப்புணர்வினை ஏற்படுத்திய ஞானகுரு. சுவாமிஜியின் சொற்பொழிவுகளுக்கு
பிடித்த பத்து: ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)

1. சுவாமி சின்மயானந்தா : எனக்குள்ளே ஆன்மிக விழிப்புணர்வினை ஏற்படுத்திய ஞானகுரு. சுவாமிஜியின் சொற்பொழிவுகளுக்கு குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. என்னை உடன் அழைத்துக் கொண்டு போவார்.
2. எடிட்டர் எஸ்.ஏ.பி. (அண்ணமலை) : என்னைப் பொருத்தவரை தெய்வம் என்றால் மிகையில்லை. எளிமைக்கும், அடக்கத்துக்கும் உதாரணம். அவரைப் போன்ற ஒரு பண்பாளரைக் காண்பது அரிது.
3. மதுரை சோமு: அவரது குரலின் கம்பீரமான வசீகரம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவரது கச்சேரிகளின் ஒலிப்பதிவை மெய்மறந்து கேட்டு ரசிப்பேன். "மருத மலை மாமணியே' பாடலுக்கு ஈடு இணை கிடையாது.
4. சமையல் : எனக்கு நன்றாக சமையல் செய்யத் தெரியும். புதுப்புதுசாக ஏதாவது முயற்சிப்பதும் உண்டு. ஒரு முறை பிரெட் துண்டுகளைப் பொறித்துப் போட்டு, செய்த மோர்க்குழம்பை எடிட்டர் ஆச்சரியத்துடன், ரசித்து, சாப்பிட்டுவிட்டு, குமுதத்தில் சமையல் குறிப்புகள் எழுதச் சொன்னார்.
5. வடை : நான் ஒரு வடைதாசன். தயிர் வடை, சாம்பார் வடை, ரச வடை என்று விதம் விதமாக வடைகளை கூட்டணி மாற்றி, விரும்பி சாப்பிடுவேன். மிகவும் பிடித்த இன்னொரு ஐட்டம் ஆனியன் ரவா தோசை. சேலத்துக்காரனுக்கு மாம்பழம் பிடிக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ ? சின்ன வயசில் தோல் நீக்கிய மாம்பழங்களைத் துண்டுகளாக நறுக்கி, ஒரு பாட்டலில் தேனில் ஊறப்போட்டு ஒரு பீரோவுக்குள் பூட்டி வைத்திருப்பார் அப்பா. அவ்வப்போது பீரோவைத் திறந்து ஒரு துண்டு கொடுப்பார். அந்த ருசி ஆயுசுக்கும் மறக்காத தனி ருசி.
6. வால்டிஸ்னி : உலக சினிமா ரசிகர்களைக் கவர ஹாலிவுட்டில் எல்லோரும் என்னவோ செய்து கொண்டிருந்த வேளையில் கார்ட்டூன்கள் மூலமாக எல்லோரையும் குழந்தைகளாக்கி ரசிக்கச் செய்த சினிமா பிரம்மா.
7. பனங்கிழங்கு: சேலம் ஜலகண்டபுரம் கிராமத்தில் வசித்தபோது, நான் மட்டுமின்றி மொத்த ஊரும் விரும்பிச் சாப்பிட்டது பனங்கிழங்கு. இப்போது கூட அபூர்வமாக சாப்பிடுவேன்.
8. அம்மாவின் குரல் : எனது புனை பெயருக்கு 50% சொந்தக்காரர். சுந்தேரேசன் என்கிற என்னை சுந்தரப்பா என்று அவர் கூப்பிடும்போது அதில் தோய்ந்த பாசம் இன்றைக்கு நினைத்தாலும் என்னை நெகிழவைக்கும்.
9. பாரதியார் : அவர் எழுதிய கவிதைகள், கதைகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும், மனச்சோர்வு என்றால் பாரதியின் படைப்புகளை வாசிப்பது என் பழக்கம்.
தெனாலிராமன் : இவர் வெறும் விதூஷகரில்லை அதி புத்திசாலி. அவரது சில கதைகளின் ஸ்பார்க் ஆச்சரியமூட்டும்.
10. கால்பந்து: எனக்கு கிரிக்கெட்டை விட கால்பந்துதான் ரொம்பப் பிடிக்கும். அந்தக் காலத்தில் எழும்பூர் ஸ்டேடியத்தில் நடந்த உள்ளூர் கால்பந்து மேட்ச்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.
- எஸ். சந்திர மெüலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com