மதுரை கொண்டாட்டம்: நன்னாரி சர்பத்....

கொளுத்தும் கோடை வெயிலில் அலைந்து திரிந்து வருவோருக்கு ஜில்லுன்னு ஒரு குளிர்பானம் கொடுத்தால் அவரது உடலெங்கும் ஒருவித
மதுரை கொண்டாட்டம்: நன்னாரி சர்பத்....

கொளுத்தும் கோடை வெயிலில் அலைந்து திரிந்து வருவோருக்கு ஜில்லுன்னு ஒரு குளிர்பானம் கொடுத்தால் அவரது உடலெங்கும் ஒருவித பரவசம் பரவும். அப்படிப்பட்ட அனுபவத்தை அந்தந்தக் குளிர்பானத்தை குடிப்போர் மட்டுமே உணர்வுப் பூர்வமாக உணரமுடியும். அதை சொல்லால் விளக்க முடியாது.

அந்த ஜனதா நன்னாரி சர்பத்தை குடித்தவர்கள் வேறு பானத்தை அருந்தினாலும் தாகம் தீராத உணர்வே ஏற்படும்.

ஆம்...மதுரை மண்ணுக்கே உரிய தனிச்சிறப்புடன் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவராலும் கோடை கால குளிர்ச்சி மிக்க பானமாகத் திகழ்ந்து வருகிறது நன்னாரி ஜனதா சர்பத்.

மதுரை சிம்மக்கல் பகுதியில் மிகச்சிறிய இடத்தில் கடந்த 1960-ஆம் ஆண்டு பி.வி.வரதராஜன் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஆலவிருட்சம்போல பல்கிப் பெருகி நிற்கிறது நன்னாரி ஜனதா சர்பத்.

மிகச்சிறிய முதலீட்டில் ஆரம்பித்து தற்போது உலக அளவில் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ள நன்னாரி ஜனதா சர்பத்தின் நிறுவனர்களில் ஒருவர் பி.வி.வரதராஜன். அவர் மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த வரதராஜன் பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். சித்த மருத்துவத்தில் வெப்ப நோய்களுக்கு நன்னாரி வேர் மருந்து அளிப்பது வழக்கமானது. அதையே கோடைகால குளிர்பானமாக வழங்கினால் என்ன? என்ற சிந்தனையுடன் நன்னாரி ஜனதா சர்பத் விற்பனையை தொடங்கினார்.

தனது வளர்ச்சி குறித்து அவர் கூறியதாவது:
"நன்னாரி என்பது தாவரம். அது சிறிய கூர்மையான இலைகளைக் கொண்டது. அழகர்மலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் வளரும். அதன் வேர் இரண்டு அடிவரை பூமியில் செல்லும். ஒரு முறை அதை பிடிங்கினால் மீண்டும் முளைக்க இரண்டு ஆண்டுகளாகும்.

சித்த மருத்துவத்தில் அதைப் பயன்படுத்திய நான் கோடைகால குளிர்பானமாக தயாரிக்க முடிவு செய்தேன். சுமார் ஆயிரம் ரூபாய் செலவில் அண்டா வாங்கி அதில் நன்னாரி வேரை வேக வைத்து குளிர்ந்த நீர், எலுமிச்சை சாறு சேர்த்து பானத்தை தயாரித்தேன்.

கொல்கத்தாவிலிருந்து அப்போது மதுரை பகுதியில் இரும்பு அடுப்பு "ஜனதா அடுப்பு' எனும் பெயரில் பிரபலமாக விற்றுவந்தது. அதை மனதில் வைத்து நன்னாரி சர்பத்துக்கு "ஜனதா' எனும் பெயரைச் சேர்த்தோம்.

1975 -ஆம் ஆண்டு முறைப்படி பெயரைப் பதிவு செய்தோம். ஆரம்பத்தில் தினமும் 100 பாட்டில் என 75 லிட்டர் அளவுக்கே தயாரித்த குளிர்பானத்தை தற்போது தினமும் 25 ஆயிரம் லிட்டராக தயாரித்துவருகிறோம். சுவை, தரம், சுத்தம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்படுகிறோம்.

சர்பத்தின் மூலப் பொருளான நன்னாரி வேரை பெருமளவு கேரளத்திலிருந்தே வாங்கிவருகிறோம். மதுரை அளவில் இருந்த நாங்கள் தற்போது இந்தியா தாண்டி கத்தார், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஜனதா சர்பத்தை ஏற்றுமதி

செய்துவருகிறோம். 750 மில்லி லிட்டர் ரூ.1 என விற்பனையைத் தொடங்கிய நிலையில், அதே அளவு தற்போது ரூ.75 என விற்கப்படுகிறது.

சகோதரர் இருவருடன் சேர்ந்து 4 பேர் ஆரம்பித்த தொழில் தற்போது 20 நிரந்தரப் பணியாளர், 100 பெரிய வாகனங்கள், 5 சிறிய வாகனங்கள் என பல்கிப் பெருகியிருப்பது பெருமை. ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக எங்கள் சர்பத் நிறுவனத்தால் வேலைவாய்ப்பையும் பெற்றுவருகின்றனர்.

நன்னாரி "ஜனதா சர்பத்'துடன் சேர்த்து 7 வகை பழச்சாறுகளையும் தயாரித்து பாட்டில்களில் அடைத்து விற்றுவருகிறோம். ஆனால், நன்னாரி சர்பத் மட்டுமே எங்களது நிரந்தர அடையாளமாக உள்ளது. ஆரம்பத்தில் வானொலி, தொலைக்காட்சி என்பதெல்லாம் இல்லை. ஊர் ஊராக நடைபெறும் திருவிழாக்களும், பொருள்காட்சிகளுமே எங்களுக்கு சந்தைப்படுத்த உதவின.

பெரிய நிறுவனங்கள் வந்தபோதிலும் எங்களால் அவர்களை விட கூடுதலாக விற்பனையை அதிகரிக்கமுடிவதற்கு காரணம், தரத்தை குறையாது காப்பதுதான். தரமே நிரந்தரம் எனும் அடிப்படையில் தொழில்புரிவதால் நாங்கள் கால மாற்றத்தை கடந்தும் நிற்கிறோம். நன்னாரி சர்பத்தின் தரத்துக்காக பல விருதுகளும் கிடைத்துள்ளன. அவ்விருதுகளுக்கு காரணம் பொதுமக்கள்தான்'' என்கிறார் பி.வி.வரதராஜன். வரதராஜனின் இரு மகன்களும், அவரது சகோதரர்களின் 3 மகன்களும் தற்போது சர்பத் தொழிலையே மேற்கொண்டுள்ளனர்.

மதுரை சிம்மக்கல் என்றாலே "ஜனதா நன்னாரி சர்பத்'தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அந்தக் குளிர்பானம் மக்களின் மனங்களோடு இரண்டரக் கலந்துவிட்டதில் வியப்பில்லை.
- வ.ஜெயபாண்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com