ஓர் அபூர்வ குளம்!

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள பேலூர் - ஹளபேடு கோயில்கள் ஹொய்சால மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
ஓர் அபூர்வ குளம்!

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள பேலூர் - ஹளபேடு கோயில்கள் ஹொய்சால மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். கை தேர்ந்த சிற்பிகளின் கலைத்திறமையால் உருவான பேலூர்-ஹளபேடு இன்று சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை கவரும் வகையில், ஹளபேடுவிலிருந்து ஹாகரே செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் ஹூலிகரேயில் அமைந்துள்ள "கல்யாணி குளம்' அபூர்வமான சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது பலருக்குத் தெரியாது. ஹொய்சால மன்னர்களின் காலத்தில், ஹூலிகரே எனப்படும் "துவார சமுத்திரா' ஹளபேடுவின் தலைநகரமாக விளங்கியது. 
மகாராணி சாந்தலா தேவிக்காக இந்தக் குளம் கட்டப்பட்டதாகவும், ஹளபேடுவில் உள்ள கோயில் குளங்கள் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியத் தொல்பொருள் இணையதள தகவலின்படி, இக்குளக்கரையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் மூலம், ஹொய்சால நரசிம்மா (கி.பி.1152-73) ஆட்சிக்காலத்தில் 1160-ஆம் ஆண்டில் அவரது அதிகாரியான லத்தய்யா என்பவர், "புவன பூஷண லத்தேஸ்வரா' என்ற கோயிலை கட்டியதோடு, இந்தக் குளத்தையும் அமைத்ததாக தெரியவந்துள்ளது.
மூன்று அடுக்குகளாக 30 படிக்கட்டுகளைக் கொண்ட இந்தக் குளம் சிற்பக்கலைக்கு சிறந்த உதாரணம். குளத்தின் நான்கு புறமும் 27 சிறிய கோயில்கள் அமைக்கப்பட்டு சிவன், விஷ்ணு, சூரியன், விநாயகர் என பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், தற்போது பெரும்பாலான சிற்பங்கள் சிதிலமடைந்தும், சில காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. ஹொய்சால மன்னர்களின் கலையார்வத்தை வெளிப்படுத்தும் வகையில் தற்போது இக்குளம் காணப்படுகிறதே தவிர, அருகில் கட்டப்பட்டதாகக் கூறப்
படும் சிவன் கோயில் இருந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com