சமூகத்தை சிக்கலாக்குவது அறிவாளிகளே..!

இந்தப் படத்துக்கு "இப்படை வெல்லும்' என்று வைத்த பெயர் அவ்வளவு பொருத்தம். இதை விட ஒரு பெயர் இந்தக் கதைக்கு பொருந்தி வராது. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்காதவர்களே இல்லை.
சமூகத்தை சிக்கலாக்குவது அறிவாளிகளே..!

இந்தப் படத்துக்கு "இப்படை வெல்லும்' என்று வைத்த பெயர் அவ்வளவு பொருத்தம். இதை விட ஒரு பெயர் இந்தக் கதைக்கு பொருந்தி வராது. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்காதவர்களே இல்லை. அரசியல் படமா... என்று யூகித்துக் கொள்கிறவர்களும் உண்டு. அவர்களுக்கு என் பதில் "இதில் அரசியலும் இருக்கிறது. அது ஒரு எளிய மனிதனின் அரசியல். எளிய மனிதனின் அரசியலை எப்போதுமே அதிகாரத்தில் உள்ளவர்களால் தாங்க முடியாது. இதுதான் படத்தின் லைன்'. இந்தப் படத்துக்காக இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றுக்கும் போய் வந்திருக்கிறோம். படத்தை தயாரித்த லைகா, என்னை நம்பி வந்த உதயநிதி என எல்லாருக்கும் இது நம்பிக்கை கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி''- கௌரவ் நாராயணனின் பேச்சில் அவ்வளவு உற்சாகம். "தூங்கா நகரம்', "சிகரம் தொடு' படங்களின் மூலம் கவர்ந்தவர். அடுத்து இயக்கியுள்ள "இப்படை வெல்லும்' வரும் 10}ஆம் தேதி திரைக்கு 
வருகிறது. 

இப்படை வெல்லும்... நம்பிக்கை தரும் தலைப்பு....!

கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் "இப்படை வெல்லும்' என்று இப்படியொரு தலைப்பு. இலக்குகள், லட்சியங்கள், அரசியல், பண வேட்கை... எதுவுமே இல்லாத எளியவர்களின் வாழ்க்கை அவ்வளவு அழகு. சந்தோஷமும், நிம்மதியும் கலந்த தருணங்கள் அங்கேதான் உண்டு. வாழ்க்கையை அதன் அன்போடும், உண்மையோடும் கொண்டாடுபவர்கள் இதுபோன்ற எளியவர்கள்தான். அப்படியான எளிய வாழ்க்கைக்கு ஆட்சியும், அதிகாரமும் அழுத்தம் தரும் போது, கொடுக்கிற விலை அதிகம். எளியவர்களின் போராட்டத்துக்கு எத்தனை பெரிய அதிகாரமாக இருந்தாலும், பதில் தந்துதான் ஆக வேண்டும். அப்படியான சூழல்தான் இங்கே களம். அதனால் இப்படை வெல்லும் என்று தலைப்பு. எளிய மனிதனுக்கு எந்த திரை மறைவு வாழ்க்கையும் கிடையாது. செய்தி, அறிக்கை, மீடியா என எந்த பில்டப்பும் கிடையாது. 
உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் அவர்களின் வாழ்க்கை. அது வலிக்கும். உசுரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்கு கைக் கூடி வருகிறது. அதை உங்களுக்கு கதையாக கடத்தி வந்திருக்கிறேன். 

என்ன எதிர்பார்க்கலாம்...?

என்டர்டெயின்மெண்ட். இங்கே சென்னையில் ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கிறவர் உதயநிதி. இன்னொரு ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கிற பொண்ணு மஞ்சிமா மோகன். இவர்களுக்கு நடுவில் ஒரு காதல். காதல், அன்பு என ஒரு போக்கில் போகிற வாழ்க்கையில், திடீரென்று ஒரு பிரச்னை. அதுதான் களம். செவி வழிச் செய்தியாக வந்த ஒரு தகவல்தான் படம். போலீஸ் மட்டத்தில் உயர் பிரிவான உளவுப்பிரிவு போலீஸ் கதையும் உண்டு. தாங்க முடியாத பாரத்தை அதற்கான சக்தி கொண்டவர்களே சுமக்க முடியும். தகுதி இல்லாதவனை அதிகாரம் நசுக்கும் போது, என்ன செய்வது...? இந்த வாழ்வை, சமூகத்தை, அரசியலைச் சிக்கலாக்குவதும் குழப்பியடிப்பதும் சிதைப்பதும் அறிவாளிகளே. 
எளிய மனிதன் எப்போதும் தனக்கு வேண்டியதைத் தேடி மட்டுமே ஓடுகிறான். படிப்பு, வேலை, காதல், அன்பு, குடும்பம், குழந்தைகள் என்பதுதான் எளியவர்களின் எப்போதைக்குமான தேவை. ஆனால், லட்சியவாதிகள் எனப் பெயரிட்டுக் கொண்டவர்களின் மூளைகள்தான் இங்கே கொடூரம். அன்பை, கருணையை, ஈரத்தை, கோபத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தாமல் முகமூடிகள் அணிந்து வெளிப்படுத்துவதான் இங்கே குரூரமானவை. 

உதயநிதி எப்படி பொருந்தி வந்திருக்கிறார்...? 

"சிகரம் தொடு' படத்தைப் பார்த்து விட்டு, பாராட்டி பேசினார் உதயநிதி. அப்போது இதே உணர்வு கொண்ட ஒரு கதை வேண்டும் என்று சொல்லியிருந்தார். அப்போதைக்கு ஒரு லைன் சொன்னேன். நல்லாயிருக்கு... என்று சொன்னவருக்கு, சில மாதங்கள் கழித்து நான் சொன்ன முழுக் கதையும் பிடித்திருந்தது. இப்படித்தான் உதயநிதி இந்தக் கதைக்குள் வந்தார். ஒரு கதைக்காக பெரிய மெனக்கெடல்கள் எடுத்துக் கொள்வேன். இந்தக் கதையை "3 டி' அனிமேஷன் காட்சிகளுடன், வீடியோவாகவே அவருக்கு போட்டிக் காட்டி சொன்னேன். அந்த ஸ்க்ரிப்ட்டை மூன்று முறைக்கு மேல் பார்த்து விட்டேன் என்று சொன்னார். எப்போதும் அவர் கையில் ஸ்க்ரிப்ட் சி.டி. இருக்கும். அடுத்த நாள் எந்த காட்சி, என்ன ஷாட் என்று கேட்டுக் கொண்டு முறையாக ஹோம் வொர்க் செய்து விட்டுத்தான் தளத்துக்கு வருவார். ஒவ்வொரு சினிமாவிலும் தனக்கென தனித்துவத்தை கொண்டு வருவது உதயநிதியின் பாணி. காமெடி, கலாட்டா என்று இருந்தவர், "கெத்து' படத்தின் மூலம் வேறு மாதிரி தெரிந்தார். இந்தப் படம் இதுவரைக்கும் இல்லாத உதயநிதியை கொண்டு வரும். இப்போது வரை நிறைவாக உணர்கிறார் உதயநிதி. 

இசைக்கு இமான், ஒளிப்பதிவுக்கு ரிச்சர்ட் என படத்துக்கு இன்னொரு பலம் வந்து சேர்ந்திருக்கிறது...?

ஆமாம், இந்த இரண்டுமே படத்துக்கு அதி முக்கியம். இமான் சார் எப்போதுமே பிஸி. அவருக்கு கதையும், சூழலும் பிடித்து விட்டால் போதும். வேறு எதுவுமே வேண்டாம். அப்படித்தான் இந்தப் படம் அவருக்கு. பாடல்கள் வெறும் பாடல்களாக இல்லாமல், சூழலுக்குப் பொருந்தி வருகிற இடங்களாக இருக்கும். கார்க்கி, அருண்ராஜா காமராஜ் இருவரும் பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்கள். டூயட், சோகம், அன்பு, கலாட்டா என ஒவ்வொரு இடமும் அப்படி கை சேர்ந்திருக்கிறது. ரிச்சர்ட் எம்.நாதன் எப்போதும் வித்தியாசம் உணர்ந்து தரும் கலைஞன். "அங்காடித் தெரு' படத்தில் அவரின் உழைப்பு, அசரவைக்கும் ஈர்ப்பு கொண்டது. "கோ' வேறு மாதிரியான ஒரு இடம் தந்தது. இரண்டுமே அவருக்கு விசிட்டிங் கார்டுகள். இந்தப் படமும் அந்த இடத்தில் இருக்கும். சென்னை, புதுச்சேரி தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களில் பல வித சூழல்களில் படம் பிடித்து வந்தது பெரும் சவால். அதன் பின் மஞ்சிமா மோகன். அவ்வளவு அழகு. இந்தப் படம், அவருக்கு வேறு மாதிரி இருக்கும். பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com