சுயம்புவாகத் தோன்றிய சீனிவாசப் பெருமாள்!

சென்னை தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் வழியில் மேடவாக்கம் பிரதான சாலை அருகே, ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது, பலநூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான சீனிவாசப் பெருமாள் கோயில்.
சுயம்புவாகத் தோன்றிய சீனிவாசப் பெருமாள்!

சென்னை தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் வழியில் மேடவாக்கம் பிரதான சாலை அருகே, ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது, பலநூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான சீனிவாசப் பெருமாள் கோயில். கோயிலின் முக்கிய கர்ப்பக்கிரகத்தின் முன்னால் உள்ள மண்டபத்தின் தூண்கள் மற்றும் வடக்கு-மேற்கில் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுகள் ஆகியவை இக்கோயில் மிகப் பழைமை வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. 
இந்தக் கல்வெட்டுகள் பெரும்பாலும் 16 -17 ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவை ஆட்சிசெய்த விஜயநகர பேரரசர்களின் காலத்தைக் குறிக்கின்றன. ஆனால், குறிப்பாக எந்த மன்னரின் ஆட்சிக்காலம் என்பதை இக்கல்வெட்டுகளின் மூலம் உறுதியாகத் தெரிந்துகொள்ளமுடியவில்லை. சில கல்வெட்டுகளில் கால நிலைகளும், வழிபாட்டு குறியீடுகளும் காணப்படுகின்றன.
முக்கிய தெய்வமான சீனிவாசப் பெருமாள், சிறிய தோற்றத்துடன் கிழக்கு நோக்கியவாறு காணப்படுகிறார். மேலிரு கரங்களில் சங்கு - சக்கரம் ஏந்தியும், கீழ் வலது கரத்தில், வரம் அருளும் வரத ஹஸ்த முத்திரையோடும், கீழ் இடது கரத்தை இடையில் வைத்தபடி கடி ஹஸ்த முத்திரையோடும் காட்சியளிக்கிறார். இப்பெருமாள் சுயம்புவாகத் தோன்றினார் என்பது ஐதீகம். பெரிய உருவில் காட்சி தரும் உற்சவ மூர்த்திக்கு "அருள் வண்ணப் பெருமாள்' என்று பெயர். ஸ்ரீதேவி - பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட அழகிய வடிவில் இவருக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 
கோயிலின் வலதுபுறத்தில், பத்மாஸினி தாயார் எனும் பெயரில் லட்சுமி தேவி சந்நிதியும், இடது புறத்தில் ஆண்டாள் சந்நிதியும் உள்ளது. ஆதி வராஹருக்கும் (விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம்) ஒரு தனி சந்நிதி உள்ளது. திருப்பதியில் எப்படி பக்தர்கள் முதலில் வராஹரை வழிபாடு செய்துவிட்டு வெங்கடேசப் பெருமாளை வணங்குவார்களோ, அதே போன்று, இங்கும் முதலில் ஆதி வாராஹரை வணங்கிவிட்டு, பின்னர் மத்திய சந்நிதிக்குச் செல்கின்றனர். சீனிவாசப் பெருமாளைப் போன்றே ஆதி வராஹரும் சுயம்பு வடிவானவர் என்று நம்பப்படுகிறது. மேலும், ராமர், வேணுகோபாலர்(கிருஷ்ணர்) மற்றும் சுதர்சனர் சந்நிதிகளும் உள்ளன. பஞ்சாட்சர ஆகம விதிகள் இக்கோயிலில் பின்பற்றப்படுகின்றன. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் ஏராளமான திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுவருகின்றன. மேடவாக்கம் பிரதான சாலையில் பயணிப்பவர்கள் கோயிலுக்குச் செல்லும் பாதையில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் , கோயில் - சிற்பங்கள் ஆராய்ச்சியாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com