ஒரு இனத்தின் வரலாறு

ஒரு இனத்தின் வரலாறு

துணிச்சலான கற்பனைகள் சில நேரங்களில் நல்ல படைப்பாக மாறி விடுவதுண்டு. ஆனால் அது அரிதாகத்தான் கிடைக்கும். கொஞ்சம் தடம் மாறி எதைச் சொன்னாலும்,

துணிச்சலான கற்பனைகள் சில நேரங்களில் நல்ல படைப்பாக மாறி விடுவதுண்டு. ஆனால் அது அரிதாகத்தான் கிடைக்கும். கொஞ்சம் தடம் மாறி எதைச் சொன்னாலும், பெரிய எதிர்ப்புகள் அவ்வகை படைப்புகளுக்கு காத்திருக்கின்றன. எல்லா திக்குகளிலிருந்தும் ஒரு இனத்தின் அழுகுரல், அதே இனத்தின் தூக்கத்தை கலைத்த போது இங்கு என்ன செய்தோம் என்ற குரல்கள் எழுந்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்த சாயல் எதுவுமில்லாமல் ஒரு படைப்பு வந்து, நெற்பயிரின் சல்லி வேர்களாக மனதின் தசைகளில் சில விஷயங்களை ஊடுருவச் செய்து பாய்ந்தால் எப்படியிருக்கும்...ஒவ்வொரு வார்த்தையிலும் நிதானம் கலந்து பேசுகிறார் புதுமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த். ஈழத் தமிழர்களின் புராதன வாழ்வையும், அதன் போராட்டங்களையும் "யாழ்' படத்தின் மூலம் சொல்ல வருகிறார். 
"யாழ்' அருமையான தலைப்பு...
சென்னைதான் பூர்வீகம். அனுபவங்கள் கொடுத்த பயணம் ஆஸ்திரேலியா பக்கம் கொண்டு போய் விட்டது. கணினி உலகின் ஃபேன்டஸி வாழ்க்கையில் திளைத்த எனக்கு திடீரென்று சினிமா ஆசை. வேலைகளை உதறி விட்டு சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடினால், ஆயிரத்தெட்டு சம்பிரதாயச் சடங்குகள். எந்த கதவும் திறக்கப்படவில்லை. சரி... நாமே முயற்சி செய்வோம்... என்று துணிச்சலாக இறங்கி வந்து விட்டேன். நான் ஹாலிவுட் சினிமா பார்த்து வளர்ந்தவன். ஒரு கதையின் இயல்பில், அதன் பயண ஓட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரை ஹாலிவுட் ரசிகனை ஒரு திரைக்கதையில் அமர வைக்க முடியும். ஆனால் தமிழ் சினிமா அப்படியில்லை. எவ்வளவு பெரிய அபத்தங்களை சொல்ல வந்தாலும், அதே மூடில் ரசிகனை அமர்த்த முடியாது. கொஞ்சம் காமெடி, கவர்ச்சி என விதவிதமான ரசனையை கொடுக்க வேண்டியுள்ளது. சினிமா முயற்சிகளில் இறங்கிய போது, ஈழத் தமிழர்கள் பற்றிய விசாலமான பார்வை கிடைத்தது. அவர்கள் யார் என்று தேடிப் போனால், அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் நிரம்பி கிடந்தன. யாரையும் சுரண்டாமல், போர் தொடுக்காமல் ஆயிரமாயிரம் காலம் வீரத்தோடும், மானத்தோடும் வாழ்ந்த நம்மவர்களுக்கு நேர்ந்த ஈழத்துக் கொடுமைகளை சொல்லுவதற்கு பதிலாக, அவர்கள் யார் என்று சொன்னாலே நம் பாவம், பழியெல்லாம் போய் விடும் எனத் தோன்றியது. 
எதிர்பார்ப்பு கூட்டி பேசுறீங்களே... எப்படியிருக்கும் படம்....
ஆமாம், நான் பேசுகிற இந்த வார்த்தைகளை விட படமும், அது எடுத்து வைக்கிற விஷயங்களும் இன்னும் நெருக்கமாக இருக்கும். யாழ் இசையும், கலையையும் போற்றி பாதுகாத்த ஒரு பிரிவினருக்கு ஈழப் போரின் போது என்ன நடந்தது என்பதே கதை. ஈழப் போர் என்பது கதையின் பின்னணியாகத்தான் இருக்கும். அதற்குள் பெரிதாக பயணிக்கவில்லை. கதையும், கருவும்தான் வேறு வேறு தோற்றங்களை தரும் தவிர, நடப்பது எல்லாமே நம்முடைய சம கால சம்பவங்கள். 
சினிமா சுதந்திரமான ஊடகம்தான் என்றாலும், ஈழப் போர் கதை பின்னணி எனும் போது சமரசங்களுள் இருந்து வேலை பார்க்க வேண்டி வந்திருக்குமே... 
சமரசங்கள் இல்லாமல் இந்த சினிமா வரவில்லை. எதை சினிமாவாக மாற்றலாம் என்ற தேடலின் சின்ன பொறிதான் இந்த யாழ், பாணர்கள் என பயணிக்க வைத்தது. ஒரு புள்ளியை நூல் பிடித்தது மாதிரி, தொடர்ந்து போனால் ஒவ்வொரு திருப்பத்திலும் ஆச்சரியங்கள் நிரம்பி கிடந்தன. ஆனால், அதை சில விஷயங்களுக்கு உட்பட்டு செய்ய வேண்டிய நிலை வந்தது. அந்த எல்லைக்குள் நின்றே இந்தப் படத்தை முடித்து வந்திருக்கிறேன். இருக்கும் மிச்சங்களை கோர்த்து பார்த்தால், ஒரு சினிமாவுக்கான நம்பகமான கதை இருந்தது. அதை சினிமாவின் வியாபார அம்சங்களுக்குள் நின்று செய்து முடித்திருக்கிறேன். ஈழத் தமிழர்கள் நிம்மதியாக இல்லை. அவர்களுக்கு இப்போதும் நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட யுத்தம் ஒரு நாளில் முடிந்து விட்டது. தமிழர்களின் துயரம் கொஞ்சம் கூட தீரவில்லை. இருப்பதையெல்லாம் விட்டு வந்த துயரம் எல்லோருக்கும் புரியும்தானே... 
அப்படியெனில்... அரசியல் அதிகம் இருக்கும் போல...
பல நூற்றாண்டுகளாக நம்மிடம் இருந்த யாழ் என்ற இசைக் கருவி, இப்போது நம்மிடம் இல்லை. அதைத் தேடி போன போதுதான், சுவாரஸ்யமான பின்னணி கிடைத்தது. அதில் ஒரு இனத்துக்கான வரலாறு இருந்ததை நானே எதிர்பார்க்கவில்லை. சிங்கள ராணுவத்தின் தவறுகள், புலிகளின் பக்கம் உள்ள நியாயம் என எதையும் எடுத்து வைத்து கருத்துச் சொல்லவில்லை. பாணர்கள் என்பவர்கள் ஈழப் போர் காலக் கட்டத்தில் என்ன ஆனார்கள் என்ற கற்பனைதான் கதை. சொல்லப் போனால், இது தமிழர்கள் வரலாற்றின் ஒரு பகுதி. சோழர்கள் எங்கேயாவது அகதிகளாக இருப்பார்கள் என்ற கற்பனையில் ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தது. அதே நேரத்தில் இதை சலங்கை ஒலி, சங்கராபரணம் என்று இசை தொடர்பான கதையாகவும் எடுத்து வைக்க முடியவில்லை. யாரையும் புண்படுத்தவும், வருத்தப்பட வைக்கவும் சினிமா எடுக்கவில்லை. இது ஈழத் தமிழர்களின் வாழ்வை ஓட்டிய கதைதானே தவிர, வேறு எதுவும் இல்லை. "நான் மகான் அல்ல' வினோத், டேனியல் பாலாஜி, நீலிமா ராணி, "சிறுத்தை'யில் வந்த குட்டிப் பொண்ணு ரக்ஷனா என சில கதாபாத்திரங்களில் கதை பயணிக்கும்.
-ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com