சங்கீதத்தை வளர்ப்பது: கலைஞர்களா? ரசிகர்களா?

பட்டிமன்ற மேடையில் ராஜாவைப் பார்த்திருப்பீர்கள். பாரதி பாஸ்கரைப் பார்த்திருப்பீர்கள். பேராசிரியர் சாலமன் பாப்பையாவைப் பார்த்திருப்பீர்கள்.
சங்கீதத்தை வளர்ப்பது: கலைஞர்களா? ரசிகர்களா?

பட்டிமன்ற மேடையில் ராஜாவைப் பார்த்திருப்பீர்கள். பாரதி பாஸ்கரைப் பார்த்திருப்பீர்கள். பேராசிரியர் சாலமன் பாப்பையாவைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவர்களது வரிசையில் பாடகர் நெய்வேலி சந்தானகோபாலனையும், பாடகி சுதா ரகுநாதனையும், இசை விமர்சகர் வீயெஸ்வியையும் செய்தி வாசிக்கும், இசையை நேசிக்கும் டி.எஸ். ரங்கநாதனையும் சேர்த்து பார்த்திருக்கிறீர்களா?
"பாரத் சங்கீத் உத்சவ்' அமைப்பைச் சேர்ந்த பாடகர் சசிகிரண் இவர்கள் அத்தனை பேரையும் ஒரே மேடையில் ஒன்று சேர்த்திருக்கிற சாதனைக்கே அவரைப் பாராட்டலாம். கடந்த வாரம் சென்னை நாரதகான சபா அரங்கில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு, "கர்நாடக சங்கீதத்தின் உயர்வுக்குக் காரணம் கலைஞர்களா, ரசிகர்களா?' என்ற சுவாரசியமான தலைப்பு.
"கலைஞர்களே' என்ற அணியில் பாரதி பாஸ்கர், டி.எஸ்.ரங்கநாதன், பாடகி சுதா ரகுநாதன் என மூவர் அமர்ந்திருக்க, நடுவராக பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவருக்கு இடது புறம் பாடகர் நெய்வேலி சந்தானகோபாலன், விமர்சகர் வீயெஸ்வி, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா.
"மழைக்குக்கூட கச்சேரி மண்டபத்தில் ஒதுங்காதவன் நான்'' என்று சாலமன் பாப்பையா சொன்னாலும், மனிதர் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறார். சாம வேதத்திலிருந்து வந்ததாக, பரிபாடலிலிருந்து வந்ததாக அவர் முதலில் கூறியபோதே ஆசாமி கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார் என்று புரிந்தது. "என்னைய விட விவரமான ஆளு இருக்கலாம்; ஆனா என்னைத்தான் நடுவரா இருக்கணும் என்றார்கள்'' என்றவர், இருபுறமும் இருக்கும் அணிகளைச் சேர்ந்தவர்களை நோக்கிக் கைகூப்பி, "உங்க ஆதரவுலதான் பயமில்லாம உட்கார்ந்திருக்கேன். காப்பாத்துங்க சாமி!'' என்று ஒரு பாதுகாப்புக் கவசத்தை அணிந்து கொண்டார். பாரதி பாஸ்கரை முதலில் பேச அழைத்தார்.
""சிந்து பைரவி' படத்தில் கே.பி. ஒரு ஷாட் வச்சிருப்பார். பாடகர் ஜே.கே.பி.யின் மனைவி பைரவிக்கு - என்று சொல்லி, கட் பண்ணிவிட்டு, ஒரு கறிகாய் வியாபாரியிடம் அவர், "கத்திரிக்காய் என்ன விலை?' என்று கேட்பது போல் ஒரு காட்சி வைத்திருப்பார். அப்படி அமைவதுண்டு. நடுவர் தனக்கு இசை தெரியாதுன்னு சொன்னார். அதை நம்பாதீங்க. கம்பன் கழக நிகழ்ச்சியில ஒரு பாட்டை எடுத்துவிட்டுத்தான் பேச்சை ஆரம்பிப்பார். ( "அது யாரும் போயிடக்கூடாதேங்கறதுக்காகத்தான்'-பாப்பையா) ராஜா சார் கூடப் பாடுவார். பி.பி. சீனிவாஸ் காதல் தோல்வி பாட்டு பாடினார்னா, ஜெமினி பைஜாமா ஜிப்பா போட்டு நடந்துபோற மாதிரியே ஒரு பிக்சர் வரும். எனக்கு என்ன வருத்தம்னா, ராஜா சார் அங்க போய் உட்காரலாமா? சுதா மேடம் ஒரு தடவை கம்பன் கழகக் கூட்டத்துலே சுப்பராமன் சார் இசையமைத்த "சின்னஞ்சிறு கிளியே' பாட்டைப் பாடி கௌரவப்படுத்தினாங்க.
சுதா பாடினபோது அதுல புதுப்புது அர்த்தங்கள் தெரிஞ்சுது. ராஜா சார் அப்போ, "எனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே'ன்னு வருத்தப்பட்டார். அவர் போய் அங்க உட்காரலாமா? ராஜா சார், தமிழ் நாட்டுல அணி மாறுறதுல தப்பே கிடையாது. ஸ்லீப்பர் ùஸல்லா அங்க இருக்கறதைவிட, இங்க வந்துரலாம்! நம்ம வீட்டுப் பக்கத்திலயே ஒரு கோயில் இருக்கும். நாமும் நிறைய தடவை போயிருப்போம். ஆனா புதுசா யாராவது வந்து அழைத்துப் போனா, நாம் பார்க்காத சிற்பங்களை எல்லாம் பார்த்து ரசிப்போம். ஒரு கலைஞனால் மட்டுமே அப்படி ரசிக்க முடியும். ஒரு தடவை என்னை கேம்பஸ் இன்டர்வியூல வேலைக்கு செலக்ட் பண்ணலை. வேலை உறுதின்னு சொன்னவங்க, வேற யாருக்கோ அந்த வேலையைக் கொடுத்து என்னை ரிஜக்ட் பண்ணிட்டாங்க. தனியே இருந்த நான் பயங்கர தோல்வியால சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன். அப்போ பொதிகை சேனலில் எம்.எஸ். அம்மா "குறையொன்றுமில்லை' பாட்டைப் பாடினாங்க. என் நம்பிக்கைகள் புதுப்பிக்கப்பட்டன. பிரம்மாண்டமானது வாழ்க்கை. அந்தப் பாட்டு, கரை சேர்க்கற படகு மாதிரி கூடவே வந்தது. இந்த வேலை கிடைக்கலேன்னா இன்னொரு வேலை கிடைச்சுட்டுப் போறது'ன்னு ஒரு தைரியம் வந்தது. அதுதான் ஒரு கலைஞரோட சக்தி.''
வந்தார் ராஜா. "ஒரு நல்ல கலைஞனை ரசிகனே எதிர்பார்க்கிறான். ஒரு பாட்டை ஆயிரம் முறை கேட்டிருப்பான். ஆனால் ஆயிரத்தோராவது முறையாப் பாடினாலும் அதைக் கேட்க ரசிகன் அங்கே ஓடுவான். ஏன் போகிறான்? அங்கேதான் ரசிகன் இருக்கிறான்! ரசிகன் கீழே இருப்பானே தவிர, நீங்க (கலைஞன்) மேலே உயர உயர, அவன் கீழே உங்களைத் தாங்கிப் பிடிப்பான். காஞ்சி மகா பெரியவர் ஒரு தடவை சொன்னார், சங்கீதக் கலை என்பது, உடலையும் தாண்டி ஆன்மாவைத் தொடக்கூடியது என்று. அந்த சங்கீதம் ரசிகனுக்கு ஆத்மானந்தம் தருகிறது. ரசிகன் இல்லேன்னா கலைஞன் இல்லே!''
சுதா ரகுநாதன் மேடையில் இருந்தால், பாட்டு வராமல் இருக்குமா? "இயற்கையைப் படம் பிடித்துக் காட்ட ஒரு கலைஞன் தேவைப்படுகிறான். ("பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்' என்று "காற்றினிலே வரும் கீதம்' பாடலைப் பாடி ஒரு ரவுண்டு அப்ளாஸ் வாங்கிக் கொண்டார்.) இந்த அனுபவத்தைத் தர ஒரு கலைஞன் தேவை. இது அல்லவோ மேன்மை, இது அல்லவோ வளர்ச்சி! ரசிக்காதவனைக்கூட மறந்துவிட்டு, கைதட்டல் வாங்கி, பிறகு சம நிலைக்கு வருகிறான் கலைஞன். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுச் சிறப்பை எடுத்துக்காட்ட ஒரு கலைஞன் தேவை. கற்பனைத் திறன் வளர, கலைஞன் அவசியம். கலை வாழ, கலைஞன் தேவை. கலை இல்லாது போனால், எதை ரசிப்பான் ரசிகன்? ரசிகர்களை மட்டுமே வைத்து, சங்கீதத்தை வளருங்கள் என்றால், கலை வளருமா? கச்சேரிக்கு வருபவர்கள் எல்லோருமே ஒரே மன நிலையிலா வருகிறார்கள்? அவரவர் தேவையைப் பூர்த்தி செய்வது கலைஞன்தானே? செம்மங்குடி மாமா ஒரு தடவை ஓர் ஊரில் ஒரு கச்சேரி செய்தார். "ஸ்ரீகிருஷ்ணம் பஜ மானஸ' என்ற தோடி கீர்த்தனையைப் பாடினார். அதே மேடையில் அடுத்த வருஷம் அதே ராகம், அதே பாட்டு பாடினார். ஒரு ரசிகர் அவரிடம் வந்து, "போன வருஷம் நீங்க பாடின தோடியைவிட, இந்த வருஷம் பாடினதுல மெய்சிலிர்த்துப் போய்ட்டேன்' என்று புகழ்ந்தார். செம்மங்குடி சொன்னார்: "ரொம்ப சந்தோஷம். போன வருஷத்தைவிட இந்த வருஷம் உங்களுக்கு ஞானம் ஏறியிருக்கு!' என்றார். இப்படியும் இருப்பார்கள் ரசிகர்கள். விளக்கின் ஒளி கலைஞன் என்றால், விளக்கின் ஒளியில் வாழ்பவன் ரசிகன்.''
நெய்வேலி சந்தானகோபாலன் தம் கட்சிக்கு வலுவாக வாதாடியே தீருவது என்ற தீர்மானத்துடன் வந்திருப்பார் போல. எடுத்த எடுப்பிலேயே நடுவரை வளைத்துப் போடுகிற மாதிரி, "ரசனையை ஒட்டுமொத்தமாக வாங்கி வந்திருக்கும் நடுவர் அவர்களே!'' என்று ஒரு போடு போட்டார். "பயந்தது போல தோற்றம் தரும் ரசிகமணி அவர்களே'' என்று நடுவரைத் தன் ஜிப்பா பாக்கெட்டுக்குள் போடுகிற மாதிரி ஐஸ் கட்டி வைத்தார். சுதா பாடிய ஒரு "ஹைக்கூ'வை ஒரு பிடிபிடித்தார். "கலைஞன் இன்றி ரசிகன் இல்லையாமே? ரசிகன் இல்லேன்னா கலைஞன் என்ன செய்வான்? ஒரு கலைஞன் ரசிகனாக இல்லை என்றால், அவன் கலைஞனே இல்லை! கலைஞன் விளக்காம். ரசிகர்களான நாமெல்லாம் வெளிச்சமாம்! ஞான விளக்காகக் கலைஞனை உயர்த்துபவன் யார்? ரசிகர்கள்தானே? ஒரு ரசிகனுக்குப் பாட்டு புரிந்தால்தான் கலைஞனே உருவாவான். இசை கற்கும்போது, பெயர், புகழ் எல்லாம் எதிர்பார்த்தா கற்றுக்கொள்கிறோம்? ஒரு குழந்தைக்கு எதுக்காகக் கைதட்டினாங்க என்று தெரியாது. ஆனா ரசிகனுக்குத் தெரியும். ரசிகன் "ஆகா!' என்று சொன்னால் எல்லாம் முடிஞ்சு போச்சு. சரஸ்வதி வீணை வாசிக்கும்போது அம்பாள் "ஆகா' என்று சொல்லிவிட்டாள். சரஸ்வதி வீணையைக் கீழே வைத்துவிட்டாள். கலைஞரோட திறமை ஒரு ரசனையில் முடிந்து போச்சு. ஒரு தடவை டி.என். ராஜரத்னம் பிள்ளை ஒரு கோயில் உற்சவத்தில் வாசித்தார். ஓர் அபூர்வ பிடி அப்போது அவரிடமிருந்து விழுந்தது. "சபாசு' என்று ஒரு குரல் வந்தது. சொன்னவர் பெட்ரோமாக்ஸ் விளக்குத் தூக்குபவர். இதைவிடப் பெரிய விருது எனக்கு வேண்டாம்னார் டி.என்.ஆர். ரசிகர் என்னும் பழத்தை நாடித்தான் கலைஞன் என்ற பறவை வருகிறது. பாலமுரளி ரசிகர்களை நாடித்தான் இங்கே வந்தார். ஜேசுதாஸ் ரசிகர்களை நாடித்தான் இங்கே வந்தார். ரசிகர்களே கலைஞர்களுக்கு ஆதாரமானவர்கள்.''
சாலமன் பாப்பையா, "இவரு துண்டா போட்டிருக்கார்? குண்டா இல்லே போட்டுட்டார்!'' என்று நெய்வேலிக்கு ஒரு ஷொட்டு வைத்தார்.
டி.எஸ். ரங்கநாதன் செய்தியும் வாசிப்பார், பாட்டும் பாடுவார். ""நெய்வேலி சொன்னார், தானும் ஒரு ரசிகன் தான் என்று. ஆனால் ஒரு ரசிகன் "நான் தான் இசையை வளர்க்கிறேன்' என்று சொல்ல முடியுமா? முடியாது. அதுக்கு தன்னடக்கம் காரணமா இருக்கலாம். ஆனா கலைஞன் அப்படி இல்லே. கலைஞனே குருவாகியும் போகிறான். ரசிகனுக்கு "ஆப்ஷன்ஸ்' அதிகம். அவன் பாடகரை நம்பிப் போய்விடுவான். வாழ்க்கை முழுக்க முழுக்க கலைஞன் அர்ப்பணித்தால், அப்புறம்தான் ரசிகன் வருவான்! இறைவனை சேவித்துத்தான் கலைஞர்கள் பாடினார்கள். கலைஞன் தான் ரசிகனை மாற்றுகிறான். இசைக் கலைஞன் தான் ரசிகர்கள் சாம்ராஜ்யத்தையே உருவாக்குகிறான். கலைஞனுக்குள்ளேதான் ரசிகன் இருக்கிறான்!''
விமர்சகர் வீயெஸ்வி குறிப்புகளை எழுதி வந்து படித்தார். ""பாடறவங்களேகூட பேப்பரைப் பார்த்துத்தான் இப்பப் பாடறாங்க' என்று ஒரு சின்னக் குட்டும் வைத்தார். அது ரஹ்மான் சங்கீதமானாலும், இளையராஜா சங்கீதமானாலும், ஜிமிக்கி கம்மல் சங்கீதமானாலும் கலைஞன் வளர்வது என்னவோ ரசிகனால்தான். இதுக்கு மைக்கும் ஒரு காரணம். மைக்கை ஏத்து ஏத்துன்னு பாடகர் ஏத்த ஏத்த, வயலின்காரரும் ஏத்தறார். மிருதங்கக்காரர் சிஷ்யனை விட்டு ஏத்தச் சொல்றார். சபா செக்ரடரி சான்ஸ் கொடுக்கலேன்னா கலைஞன் எங்கே? ஸ்பான்ஸர் இல்லேன்னா கலைஞன் எங்கே? இப்ப கலைஞனுக்கு கட் அவுட் வைக்க ரசிகன் தான் காரணம். சதாப்தி வேகம், புல்லட் வேகத்துல கலைஞன் பாடி, ரசிகன் கரகோஷம் செய்யறதுதான் கலைஞனை மேலும் சிறப்பா பாட வைக்கிறது. இப்படி கைதட்டி கைதட்டி கலைஞனைத் தூக்கி விடுகிறான் ரசிகன். தரமான சங்கீதம்னாக்கூட, எம்ப்டி ஹால்ல ஒரு கலைஞன் பாட முடியாது!''
பாரதி பாஸ்கருக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தந்தார் நடுவர். "கலைஞனுக்குப் பெரிய தாக்கம் உண்டாக்கும் சக்தி இருக்கிறது. இதை ரசிகன் கொடுத்துட முடியுமா? துக்கடா கேக்கத்தான் ரசிகன் வரான் என்றால், அது ஒரு தெய்வீக உத்தி இல்லையா? கலைஞன் ரசிகனை சரியான இடத்தில் கொண்டு சேர்த்துவிடுகிறானே! "நிதி சால சுகமா' பாடின தியாகராஜர் கையில ஒரு சொம்பு வச்சிருந்தார். அதுல அரிசியா இருந்துது? இல்லே. நாத வெள்ளத்தைச் சுமந்தார் அவர். கர்நாடக சங்கீதத்துக்கு வயலின் கிடைச்சதுக்கு யார் காரணம்? அம்பி தீட்சிதர் என்ற கலைஞர் அல்லவா அதைக் கொண்டு வந்தார்? மேண்ட்லின் சீனிவாஸ் அந்த வாத்தியத்தை வாசிக்கிறவரை யாராவது மேண்டலினில் கர்நாடக சங்கீதம் கேட்க முடிந்ததா? அதில் "கமகம்' வாசிக்க முடியும் என்று காண்பித்தவரல்லவா அந்தக் கலைஞர்?''
ராஜாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்காமல் இருக்க முடியுமா? ரசிகமணி வீட்டில் ஒரு தடவை பாலாம்மா நடனம் நடந்துது. அதைப் பார்த்துட்டு அந்த வீட்டு வேலைக்காரம்மா சபாஷ் சொன்னாராம். "இதைவிடப் பெரிய விருது எனக்கு என்ன வேணும்?'னு நெகிழ்ந்துபோய்ட்டாராம் பாலசரசுவதி.
வாசிச்சி முடிஞ்சதும் பிரதமர் நேரு "பிரமாதமா வாசிச்சீங்க. உங்களுக்கு என்ன வேணும்?' அப்படின்னு கேட்டார். டி.என்.ஆர். சொன்னார்: "எங்க ஊருக்கு எலக்ட்ரிசிடி வேணும்'னார். ஒரு ரசிகன் மகானாகவும் இருக்கலாம். சாதாரணமானவராகவும் இருக்கலாம். ஒரு தடவை காரைக்குடிக்குப் பக்கத்துல காஞ்சி மகா பெரியவர் போயிருந்தாராம். அப்போ அங்கே அரியக்குடி ஐயா வந்திருக்கிறதா கேள்விப்பட்டு, அவரைக் கூட்டிக்கொண்டு வர முடியுமான்னு கேட்டாராம். அவர் உடனே ஓடோடி வந்தார். ஸ்ரீ "சுப்பிரமண்யாய நமஸ்தே நீங்க பாடணும்' என்று பெரியவர் கேட்டுக்கொண்டாராம். கேட்டுவிட்டு, அதுக்கு வரிக்கு வரி அர்த்தம் சொன்னாராம். நல்ல ரசிகன் மகானாக இருக்கலாம். ரசிகர்கள் கலைஞனை வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள். வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்!''
முடிவு சொல்லப் பேச்சைத் துவங்கினார் நடுவர் பாப்பையா. "அ.ச.ஞானசம்பந்தன் ஐயா, கி.வா.ஜ., சா. கணேசன் போன்றோர் எங்களை ரசிகனாக வளர்த்துவிட்டார்கள். அன்றைக்கு கலைஞர்கள் மன்னர்களின் தயவில் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அன்றைக்கும் ரசிகர்கள்தான் இவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்தார்கள். ரசிகன் தன்னை மறந்து ரசிக்கிறான். எம்.எஸ்.ஸýக்குத் தேர்ந்த ரசிகர்களாக, கணவர் சதாசிவம், கல்கி, ராஜாஜி என்று மூன்று ரசிகர்கள் இருந்தார்கள். அவர்கள் உயரம் எங்கே போனது? நேரு பெருமானே சொன்னாரே, "நான் சாதாரண பிரதம மந்திரி. நீங்கள் இசை அரசி!' என்று! ரசிகனுக்குத் தான் கலைஞனை உயர்த்திப் பெருமைப்படுகிற குணம் உண்டு. அதனால் ரசிகன் தான் கலைஞனின் மேன்மைக்குக் காரணம் என்று சொல்லி, நன்றி கூறி விடை பெறுகிறேன்!'' என்றார் சாலமன் பாப்பையா.
நெய்வேலி-வீயெஸ்வி-ராஜா அணிக்கு அன்றைக்கு ரசிகர்கள் நன்றி சொல்லியிருப்பார்கள்!
- சாருகேசி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com