அந்த இடத்துக்கு நானும் வருவேன்: பிரசாந்த் பேட்டி

சினிமாவில் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது நான்தான். ஆனால், கிளைமாக்ஸில் சட்டையைக் கிழித்து எறிந்து அதை வெளியே காட்டவில்லை...
அந்த இடத்துக்கு நானும் வருவேன்: பிரசாந்த் பேட்டி

"வெற்றிக்குக் குறுக்கு வழி என எதுவும் இல்லை. கடின உழைப்புதான் வெற்றிக்கான ஒரே நியாயமான வழி'' - இரண்டே வரிகளில் சொல்லிச் சிரிக்கிறார் பிரஷாந்த். "நான் இப்போது எங்கேயும் வெளி விழாக்களுக்கே போவதில்லை. ஏன்... என்று உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்போதும் இப்போதும் நான் ஹீரோவாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வெற்றியின் மதிப்பு என்னவென்று அழுத்தமாக உணர்ந்து விட்டேன். அதற்காவே ஓடி வருகிறேன். ஆதரவு கொடுங்கள்.''- அதே அழகுடன் அன்பு கரம் நீட்டிச் சிரிக்கிறார் பிரஷாந்த்.

ஒரு காலத்தில் பெரும் வெற்றியில் திளைத்த ஹீரோ, இப்போது அதே வெற்றிக்காக கவனமாக காய் நகர்த்த தொடங்கியிருக்கும் பக்குவம் தொனிக்கிறது வார்த்தைகளில். "ஜானி' படத்தை பெரிதும் நம்பி காத்திருக்கிறார் பிரஷாந்த். 

ரொம்பவே நிதானமாக பேசுறீங்க...

ஆமாம்... போதும் போதும் என்கிற அளவுக்குப் பாடம் படித்து விட்டேன். அடுத்த படம் "ஜானி'. இதற்கு முன் வந்த என் படங்களின் சாயல் இருக்கக் கூடாது. ஆனால், அந்த வெற்றியின் பிரதிபலிப்பு தொடர வேண்டும் என்று ஆசை. இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிற மாதிரி இருக்கும் "ஜானி'. துறு துறுவென சாதிக்க வேண்டும் என்கிற வெறியோடு இருக்கிறார் படத்தின் இயக்குநர் வெற்றிச்செல்வன். பத்திரிகை, சினிமா என பெரிய அனுபவங்களை கொண்டவர். ஒரு வாய்ப்பு கேட்டு வந்தார். கதை கேட்டேன். பிடித்து செய்திருக்கிறேன். பரபரப்பு, த்ரில், சுவாரஸ்யம் என கதையின் எல்லா பக்கங்களிலும் கவனம் வைத்து இயக்கியிருக்கிறார். முழு நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். 

பல ஹீரோக்கள் இப்போது செய்து கொண்டிருக்கிற டான்ஸ், ஃபைட் எல்லாம் நீங்க எப்பவோ செய்து விட்டீர்கள்... ஆனால், ஒரு பிரகாசமான ஓப்பனிங்குக்கு இத்தனை வருஷம் காத்திருக்க வேண்டுமா?

என்னிடம் என்ன தவறு இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு படம் செய்யும் போதும் பெஸ்ட் தர வேண்டும் என்று உழைத்தேன். ஆனால், எனக்கு சினிமா மீது ஆரம்பக் காலத்தில் விருப்பம் இருந்ததே இல்லை. அப்பாவும் வேறு மாதிரிதான் யோசித்து வைத்திருந்தார். ஆனால், நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று என்பது போல், சினிமாவுக்குள் இறங்கி வந்து விட்டேன். ஒரு வேளை அது தவறாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. சினிமாவுக்கு சீக்கிரமே வந்து விட்டதால், எனக்கு அந்த மெச்சூரிட்டி லெவல் இல்லாமல் போய் விட்டதா என்று கூட யோசிப்பேன். என்ன ரூட் பிடித்து போவது என்பதே தெரியாமல், பல படங்களில் நடித்திருக்கிறேன். பெரும் வெற்றிக் கண்ட நிறைய படங்களை நான் தவற விட்டும் இருக்கிறேன். இத்தனைக்கும் அப்போதைய சினிமா ஹீரோக்கள் செய்துக் கொண்டு இருந்த பல விஷயங்களைத் தாண்டியும் நான் மெனக்கெட்டேன். இப்போது இருக்கிற சிக்ஸ் பேக் எல்லாம், நான் அப்போதே வைத்து விட்டேன். "கல்லூரி வாசல்' படத்தில் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். சினிமாவில் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது நான்தான். ஆனால், கிளைமாக்ஸில் சட்டையைக் கிழித்து எறிந்து அதை வெளியே காட்டவில்லை. யோசித்தால் என் கேரியரில் சில தவறான படங்களும் இருந்திருக்கலாம். அதைத் தாண்டி பேர் சொல்லக்கூடிய படங்களுக்கு இருக்கிறது. 

பாலுமகேந்திரா, ஷங்கர், மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்த அனுபவம் கூடவா கைக் கொடுக்கவில்லை?

வருத்தம் இல்லாமல் எப்படி? இவ்வளவு உழைத்தும் யாருமே என்னைக் கண்டுக்கொள்ளவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. அப்போது என்னைச் சுற்றி இருந்த தனிமைதான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. அந்த விதத்தில் சினிமாவுக்கும், எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும், கொடுக்காதவர்களுக்கும் நான் நிறையவே நன்றிக்கடன்பட்டிருக்கேன். ஆனால், இதுதான் எனக்கான ஸ்டார்ட் பட்டன். நான் நிறையப் பேருக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. நீங்கள் நினைக்கிற அந்த இடத்திற்கு விரைவில் நானும் வருவேன். 

மாதவன், சித்தார்த் என சாக்லேட் பாய் ஹீரோக்கள் கூட சினிமாவின் சூழலை புரிந்து செயல்படுகிறார்கள்... இதையெல்லாம் கவனிக்கிறீங்களா?

எல்லாமும் கவனிக்கிறேன். ஆனால், எதுவும் எனக்கு புதிது இல்லை. "கண்ணெதிரே தோன்றினாள்', "ஜீன்ஸ்', "திருடா திருடா', "பொன்னர் சங்கர்' என என் கேரியரிலும் மாற்றுச் சூழல்கள் இருந்ததை நீங்கள் உணர வேண்டும். நான் எதற்கும் தயார். சக்கரத்தை சுழற்றி விடுவது சிலரின் கடமை. எந்த எண்ணில் நிற்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். 

வார்த்தைகள் எங்கும் அனுபவங்கள்... எல்லோருக்கும் படிப்பினை தேவையாக இருக்கிறது...

நிறைய கற்றுக் கொண்டேன். நல்ல விஷயங்களுக்காக இன்னும் இன்னும் காத்திருக்கலாம் என்ற பொறுமையைக் கற்றுக் கொண்டேன். அந்த பொறுமைதான் என்னை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறது. பட ஆர்வத்தில் ஓடிக் கொண்டிருந்ததால், நம் மீது யார் அக்கறையாக இருந்தார்கள் என்பதை கவனிக்கத் தவறி விட்டேன். என் தவறுகள் இப்போது புரிகிறது. அந்த கணம் மீண்டும் திரும்ப கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். நல்வழி நடத்துகிறவர்கள் கூடவே இருக்கிறார்கள். எல்லா தருணங்களிலும் தாங்கி பிடிக்கும் அப்பா முதல் நிறைய பேர். அவர்களுக்காக உண்மையாக இருக்க வேண்டும் என உணர்கிறேன். சில நேரங்களில் பக்கத்தில் இருப்பவர்களை ரோல் மாடலாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இருப்பதில்லை. அது பெரிய தவறு என உணர்கிறேன். இப்போதைக்கு அந்த உணர்வுதான் என்னை வழி நடத்துகிறது.

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com