ஓவியருக்கு ரசிகர் நற்பணி சங்கம்!

ஓர் ஓவியருக்கு ரசிகர் நற்பணி சங்கமா? ஓவியருக்கு ரசிகர் மன்றமா என்று பலர் நினைக்கலாம். அப்படி என்றால் அது யாருக்கு என்று
ஓவியருக்கு ரசிகர் நற்பணி சங்கம்!

ஓர் ஓவியருக்கு ரசிகர் நற்பணி சங்கமா? ஓவியருக்கு ரசிகர் மன்றமா என்று பலர் நினைக்கலாம். அப்படி என்றால் அது யாருக்கு என்று நீங்கள் கேட்பதற்கு முன்பு இதோ எங்கள் அன்பார்ந்த ஓவியருக்கு நாங்கள் நற்பணி சங்கம் ஆரம்பித்துள்ளோம் என்று கூறுகிறார் ஓவிய மன்னர் கே. மாதவன் ரசிகர் நற்பணி சங்க செயலாளராக இருக்கும் ஓவியர் ரமேஷ்.

"ஓவிய மன்னர் மாதவன் ஒரு அற்புதக் கலைஞர். 1906 -இல் திருவனந்தபுரத்தில் ஒரு பாரம்பரியமிக்க கலைக் குடும்பத்தில் இரண்டாவது மகனாக பிறந்தவர். மாதவனின் கொள்ளுத்தாத்தா அனந்த பத்மநாபன் கேரளமக்களால்இன்றும் கொண்டாடப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலை வடிவமைத்தவர்.

மாதவனின் திறமையை கண்டுணர்ந்து திருவனந்தபுரம் "ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில்' (School of Arts) சேர்த்துவிட்டார். அங்கு தான் நமது ஓவிய மன்னர் தனது ஓவியக் கலையை பட்டை தீட்டிக் கொண்டார். ஒருநாள் மாதவனின் தனித்திறமையை கண்ட அவரது மூத்த சகோதரர் நாராயணன், "நீ இருக்கவேண்டிய இடம் வேறு. அதனால் சென்னைக்குச் செல். அங்கு உன் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும்", என்று கூறினார். மூத்தவர் அல்லவா? அவர் வாக்கு பலித்தது. மாதவன் சென்னைக்கு வந்தவுடன், அவரை கன்னையா நாடகக் குழு அணைத்துக் கொண்டது. அன்று ஆரம்பித்த அவரது ஓவியப் பயணம் டி.கே.சண்முகம், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரது நாடகங்களுக்கு மாதவனின் ஓவியங்கள் (ஒவ்வொரு காட்சியின் பின்னால் இருக்கும் ஓவியங்கள் - பர்தா பெயின்டிங்ஸ்-(Partha Paintings) ஜீவநாடியாக விளங்கின. இதன் நடுவே சினிமாவும் இவரது ஓவியச்சிறப்பை அனுபவிக்க விரும்பி தன் வசம் ஈர்த்தது. தியேட்டர்களின் வாசலில் வைக்கப்படும் பெரிய பெரிய பேனர்களை (Banners) பார்க்கவே மக்கள் கூட்டம் அலை மோதியது என்று கூறவேண்டும். ஜெமினி அதிபர் வாசன் பேனர் உலகின் தந்தை' என்று மாதவனை புகழ்ந்தார். "மங்கம்மா சபதம்' , "நல்ல தம்பி', போன்ற படங்களுக்கு மாதவன் ஆர்ட் டைரக்டராகவும் பணி புரிந்துள்ளார். "ராஜ ராஜ சோழன்' படத்தின் தயாரிப்பாளர் ஜி. உமாபதி, மாதவனின் ரசிகர். இவர் ஆரம்பித்த "உமா' பத்திரிகை முகப்பில் மாதவன் வரைந்த ஓவியங்களை அச்சிடுவதோடு மட்டுமல்லாமல், அதை அவரது "ஆனந்த்' திரையரங்கில் மக்கள் பார்க்கும் ஒரு இடத்தில் வைக்கவும் செய்வார்.

ஆங்கிலத்தில் போர்ட்ரைட் (Potrait) என்று கூறுவார்கள். அதில் மாதவன் மிகவும் திறமைசாலி. மகாத்மா காந்தி, நேரு, இந்திரா, காமராஜர், அண்ணா, கலைஞர் என்று பலரையும் தனது தூரிகைகளால் வரைந்துள்ளார்.

இந்த ஓவியங்களைப் பார்த்த ஜெமினி அதிபர் வாசன் தனது தாயாரின் உருவப்படத்தை தனக்கு வரைந்து கொடுக்க கேட்டுக்கொண்டார். முடிந்து விட்டது என்ற செய்தி கேட்டவுடன், நேராக ஓவிய மன்னரின் வீட்டிற்கே சென்றார். தனது தாயாரின் ஓவியத்தைப் பார்த்தவுடன் அப்படியே அதைக் கட்டிக் கொண்டு "அம்மா' என்று அழுதவாறு, தனது தாயாரின் படத்தின் கீழே உட்கார்ந்து விட்டார். பின்னர் ஒரு நிரப்பப்படாத காசோலையை மாதவனின் கையில் கொடுத்து, தாங்களே இந்த ஓவியத்திற்கு என்ன விலையோ அதைப் போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று கூறியவர், தனது தாயாரின் ஓவியத்திற்கு விலை இல்லை என்று கூறாமல் கூறிவிட்டுச் சென்றார்.

இப்படிப்பட்ட மிகச் சிறந்த ஓவியருக்கு "ஓவிய மன்னர்' என்ற பட்டம் கொடுத்தது அறிஞர் அண்ணா. அவரது வழித்தோன்றலிடம் நான் சுமார் 19 ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். அது அந்த மாபெரும் ஓவிய மன்னர் எனக்களித்த பிச்சை என்றே கூறவேண்டும். ஓவிய மன்னர் கே. மாதவன் ரசிகர் நற்பணி சங்கத்தின் மூலம் ஓவிய மன்னரின் புகழை கணினி வழியாக உலகெங்கிலும் பரப்பவும், சாதனை ஓவியர்களுக்கு அவரது பெயரால் பாராட்டிதழ் வழங்கவும், ஏழை மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி கொடுக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியம் பற்றி பல்வேறு வகைகளில் சொல்லிக் தரவும் முடிவு செய்துள்ளோம்.

இவை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் என்று நானும் எனது குழுவும் நம்புகிறோம்'' என்று கூறுகிறார் ஓவியர் ரமேஷ். ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றிய பெருமை உலக நாயகன் கமல் ஹாசனை சாரும். அவரது வழியில் இந்த சங்கமும் ஓவிய மன்னரின் புகழைப் பரப்புவதோடு நிற்காமல் சமுதாயத்திற்கு நல்ல பல செயல்களைச் செய்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே!
-சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com