தெரிந்த பெயர், தெரியாத விவரம்: மாமல்லபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய நகரமாகவும், உள்ளாட்சி அமைப்பின் சிறந்த பேரூராட்சியாகவும், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் திகழ்வது மாமல்லபுரம்.
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: மாமல்லபுரம் 

* காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய நகரமாகவும், உள்ளாட்சி அமைப்பின் சிறந்த பேரூராட்சியாகவும், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் திகழ்வது மாமல்லபுரம்.
* கடந்த 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சிக்  காலத்தில், முக்கிய துறைமுகமாக மாமல்லபுரமும்,  தலைநகராக  காஞ்சிபுரமும் விளங்கியது. 
* பாறைகளைக் குடைந்து குடைவரை கோயில்கள் கட்டப்பட்டது, கட்டடக்கலைக்கும், சிற்ப சித்திரங்களுக்கும் சவால் விடுவதாகும். 
* முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின்  அரியணை ஏறிய முதலாம் நரசிம்ம பல்லவனின் பட்டப் பெயரே  "மாமல்லன்'. அவரது பெயரை போற்றும்வகையில் பிற்காலத்தில் "மாமல்லபுரம்' என அழைக்கப்படலாயிற்று.  மாமல்லபுரம், மகாபலிபுரம் என்றும் இப்பகுதி மக்களால்  அழைக்கப்பட்டது.
* நரசிம்ம பல்லவர் ஆட்சிக்காலத்தில் யுவான் சுவாங் என்ற சீன  யாத்திரிகர் கி.பி 640-இல் கடற்கரை துறைமுகமான மாமல்லபுரத்துக்கு வந்து சென்றுள்ளார்.
* மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள மூன்று கோயில்கள் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. அவற்றில் இரண்டு கோயில்கள் ஆழிப் பேரலையின் கோரப் பசிக்கு ஆளாயின. எஞ்சிய ஒரு கோயிலே தற்சமயம் நமக்கு காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
* கடந்த  2004-இல் ஏற்பட்ட சுநாமியில் - இந்த   கடற்கரைக் கோயிலின் அமைப்பில் எந்தவித சேதாரமும் ஏற்படாமல் கம்பீரமாக இருந்ததை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். கடற்கரைக்  கோயிலை கடல்நீர் அரிப்பு ஏற்படாமல்  தடுக்கும் பொருட்டு பெரிய பாறாங்கற்களை பாதுகாப்பு வேலியாகக் கொட்டி இந்திய தொல்பொருள்துறை பராமரித்து வருகிறது.
* இங்குள்ள நிலமங்கை உடனுறை ஸ்தல சயன பெருமாள் கோயில் முக்கிய வழிபாட்டுத்தலம்.
* பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வர் இங்கு அவதரித்துள்ளார். 
* இங்கு கற்சிற்பங்களை உருவாக்கும் அரசு சிற்பக்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.  கல் சிற்பம், சுதை சிற்பம், உலோக சிற்பம்,  மரச்சிற்பம்,  வண்ணச் சிற்பம், கோயில் கட்டடக்கலை ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு ஆகியவை இக்கல்லூரியில்  நடத்தப்படுகின்றன. கல்லூரிஉருவாகக் காரணமாக இருந்தவர் தலை சிறந்த சிற்பியும், இக்கல்லூரியின் முன்னாள் முதல்வருமான கணபதி சிற்பியாவார். 
* இங்குள்ள கடற்கரைக் கோயில் உலக அளவில் ஒரு தலை சிறந்த பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதால் 1984-இல் "உலக பண்பாட்டுச் சின்னம்' என யுனெஸ்கோ அறிவித்தது.
* பல்லவர்காலத்தில் உருவாக்கப்பட்ட  சகாதேவன் ரதம், பீமன் ரதம், அர்ச்சுனன் ரதம், திரெளபதி ரதம், தருமர் ரதம் என 5 ரதங்களில் செதுக்கப்பட்ட பல்வேறு கற்சிற்ப அமைப்புகளும்,  ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட மகிஷாசூரணி மண்டபம், பட்டர் பால்ஸ் எனப்படும் வெண்ணெய் உருண்டைக் கல் போன்றவற்றைக் காண இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
* இங்குள்ள அனைத்து கற்சிற்பங்களையும், கடற்கரைக் கோயில் போன்ற வரலாற்று சின்னங்களையும் சென்னை வட்டத்தின் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் மூலம் நேரடி கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
* பெரிய கற்குன்றின் மேல்பகுதியில் கடந்த 1900-ஆம் ஆண்டு  முதல் கலங்கரை விளக்கம் செயல்பட்டு வந்தது. அதில் போதிய நவீன தொழிற்நுட்ப வசதிகள் இல்லாததாலும் போதிய பராமரிப்பு இல்லாததாலும் அதனை இந்திய அரசின் கப்பல்  போக்குவரத்துத் துறையினர் முழுமையாக சீரமைத்து கடந்த 1989-இல் மீண்டும் செயல்படத் துவங்கியது.
* பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, நந்திக் கலம்பகம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்களில் மகாபலிபுரம் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
* சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவை ஜனவரி மாதத்திலும், நாட்டிய விழாவை டிசம்பர் மாதத்திலும் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
* சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு சென்னை- புதுச்சேரி-கல்பாக்கம்- செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசுப் பேருந்துகள் வந்து செல்கின்றன. 
* மாமல்லபுரத்துக்கு மிக அருகில் சாளுவன் குப்பத்தில் "புலிக்குகை' உள்ளது.                              
- மதுராந்தகம் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com