அமைச்சர் வாங்கிய இரு ஓவியங்கள்!

கலைக்கும் கலைஞர்களுக்கும் என்றுமே தேவை பாராட்டும் ஊக்குவித்தலும்தான்.இதைத் தெரிந்துதான் கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலை கல்லூரி தனது  மாணாக்கர்களுக்கு
அமைச்சர் வாங்கிய இரு ஓவியங்கள்!

கலைக்கும் கலைஞர்களுக்கும் என்றுமே தேவை பாராட்டும் ஊக்குவித்தலும்தான்.இதைத் தெரிந்துதான் கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலை கல்லூரி தனது  மாணாக்கர்களுக்கு  ஊக்கம் கொடுக்க, சென்னை லலித் கலா அகாடமி கேலரியில் தங்களது கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் ஓவியங்களை கண்காட்சியாக வைத்தது. மாணவர்களுடன் வந்திருந்த ஆசிரியர் வில்வநாதன் தனது கல்லூரி, அதில் படிக்கும் மாணவர்களின் திறமை பற்றியும் கூறுகிறார்:

"தமிழ் நாட்டில் இரண்டு கவின் கலை கல்லூரிகள் உள்ளன.  ஒன்று சென்னையிலும்  மற்றது கும்பகோணத்திலும் இருக்கிறது. எங்கள் கல்லூரி முதல்வர் பி.எஸ். தேவநாத் மாணவர்களின் திறமை உலகெங்கிலும் பரவ பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். எங்கள் கல்லுரியில் சுமார் 65  மாணவ மாணவியர்கள் கடைசி வருட படிப்பில் உள்ளனர். அதில்  15  பேர்கள் சிற்பக் கலையை கற்கின்றனர். சுமார் 25  பேர்கள்  விசுவல் கம்யூனிகேஷன் பயில்கின்றனர். மீதமுள்ள 24  பேர்  ஓவியம் வரைவதில் சிறப்பாக உள்ளனர். அவர்களின் ஓவியங்களை மக்கள் பார்த்து பாராட்டினால் அவர்கள் ஊக்கம் அடைவார்கள். அது மட்டுமல்லாமல் சென்னை போன்ற தலை நகரங்களில் வசிக்கும் மக்களின் பாராட்டும் வாழ்த்தும் அவர்களை வெகு தூரம் அழைத்து செல்லும் என்பது திண்ணம்.

இந்த எண்ணத்தில் 2000  -ஆம் ஆண்டு சென்னையில் ஓர் ஓவிய கண்காட்சியை நாங்கள் நடத்தினோம். பின் சென்றவாரம்  24  மாணவ மாணவியரின் 76 ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சியை நடத்தினோம்  இந்த தொடக்க விழாவை சிறந்த ஓவியரும், எங்கள் மாணவர்களின் மரியாதைக்குரியவருமான ட்ராஸ்கி மருது தொடங்கி வைத்தார். தொடக்க நாள் அன்றே சுமார் 250  பேர் வந்திருந்து வாழ்த்தினார்கள். சுமார் ஒரு வாரம் நடந்த இந்த விழாவில் பல்வேறு ஓவியர்கள், ஓவியங்களை ரசிக்கும் மனிதர்களும் வந்திருந்தனர்.  திரையுலகை சேர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, ஒளிப்பதிவாளர் செழியன் போன்றோரும் வந்திருந்து எங்களை மகிழ்வித்தனர். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் அமைச்சர் பாண்டியராஜன் வந்திருந்ததோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஓவியமாக  பார்த்துக் கொண்டே சென்றார். மாணவர்களும் அவர் செல்லச் செல்ல பின் தொடர்ந்தனர். தனக்கு ஏற்படும் சிறு சிறு சந்தேகங்களையும், ஓவியம் வரைந்த மாணவர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டார். நிதானமாக அவர் இந்த  மாணவ மாணவியரின் ஓவியங்களை பார்த்தது, அவருக்கு ஓவியக் கலையின் மீது உள்ள பற்றை வெளிப்படுத்தியது. 

திடீர் என்று ஓர் ஓவியத்தைப் பார்த்து "மிக நன்றாக இருக்கிறது'' என்று கூறினார். பின்னர் மேலும் ஓர் ஓவியத்தை சிறப்பாக இருக்கிறது என்றார். கடைசியில் அவர் விரும்பிய இரண்டு ஓவியங்களையும் தானே வாங்கி கொள்வதாக அவர் சொன்ன போது நாங்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ந்தோம். அவருக்குப் பிடித்திருந்த இரண்டு ஓவியங்களில் ஒன்று, நவநீத கிருஷ்ணன் என்ற மாணவர் வரைந்த ஒரு மூதாட்டியின் ஓவியம். 

மற்றது செல்வி  யோக ப்ரீத்தா என்ற மாணவியின் செமி அப்ஸ்ட்ராக்ட் (Semi Abstract) என்ற முறையில் வரையப்பட்ட ஓவியம். இரண்டையும் வாங்கிய பின் பணம் எவ்வளவு என்று கேட்டபோது இரண்டிற்கும் சேர்த்து ரூபாய் 70  ஆயிரம் ஆயிற்று என்றோம். உடனடியாக கையில் இருந்த ரூபாய் பத்தாயிரத்தை கொடுத்துவிட்டு, தனது இல்லத்திற்குச் சென்ற பின் மீதமுள்ள  ரூபாய் 60 ஆயிரத்தையும் உடனடியாக  கொடுத்து அனுப்பினார். இதை அந்த மாணவ   மாணவியரிடமே அவர்கள் கொடுத்தனர். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

இந்த கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் எல்லாமே ரியலிசம் (Realism), அப்ஸ்ட்ராக்ட் (Abstract)  மற்றும் மாடர்ன் (Modern) ஓவியங்கள் என்று கூறலாம். மாணவர்கள் தங்களின் சுய சிந்தனையோடு  தங்களின் திறமையை பயன்படுத்தி வரைந்திருக்கிறார்கள். அதை இந்த மாதிரி பெரு நகரங்களில் உள்ள கலை ரசிகர்கள் பார்த்து பாராட்டும் போது அவர்களுக்கு மனறைவு ஏற்படுவதோடு மட்டும் அல்லாமல் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. 

இந்த லலித்  கலா  அகாடெமி  ஊழியர்கள், இந்த ஓவியங்களை பார்த்து சந்தோஷப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுமார் 1200 மக்கள் வந்திருக்கிறார்கள் என்பது சிறப்பான ஒரு விஷயம் என்று பாராட்டினார்கள். அமைச்சரும் கூட இது போன்ற ஓவியக் கண்காட்சியை பொங்கல் சமயத்திலும் நடத்த வேண்டும்''  என கூறினார் 
ஆசிரியர் வில்வநாதன். 
 -சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com