உதிராமல் கிடக்கும் கனவுகள்! 

இந்த சூழல் இப்படி மாறி வந்திருக்கலாம். ஆனால் இன்னும் ஏக கதைகளை சுமந்து திரியும் நண்பர்களை நான் அறிவேன்.
உதிராமல் கிடக்கும் கனவுகள்! 

தனிமை, தோல்வி இந்த இரண்டும் வாழ்வின் சாபங்கள்.   தோல்வியைக் கூட புத்தி கூர்மை இருந்தால் சமாளித்து விடலாம். அது ஓர் அனுபவம்.  தனிமையை என்ன செய்வது...?   அன்பு காட்டவும், அரவணைக்கவும் ஆள் இல்லாத கணங்கள் மனசுக்குள்  ஏதோ செய்து விடுகிறது. எதுவுமே புரியாதது போல் மாறி விடுகிறோம்.  இலக்குகளுடன் இந்த பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று சொந்த ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கணத்து ஞாபகங்கள் முளை விடுகிறது. இதெல்லாம் எதன் பொருட்டு என யோசித்துப் பார்த்தால், தனிமைதான் முன்னுக்கு நிற்கிறது. 20 ஆண்டுகள் சினிமா போராட்டத்தில் சந்தித்து வந்த எல்லா நொடிகளுமே தனிமைதான். தனிமை பெரும் கொடிது.   கதையின் சாராம்சம் கேட்டால், சுமந்து வந்த போராட்ட வலியைச் சொல்லி அமர்கிறார் இயக்குநர் எஸ்.எஸ். சூர்யா. "சிவகாசி'- பேரரசு, "முகவரி' - துரை, "மாயாண்டி குடும்பத்தார்'- ராசுமதுரவன் என ஏகப்பட்ட இயக்குநரிடம் பாடம் படித்துவிட்டு, இப்போது "பக்கா' என்று அறிமுகத் தடம் பதிக்கவிருக்கிறார். 

ஒரு குறும்படம்.... அடுத்தது சினிமா.. என்று மாறியிருக்கிற சூழலில், இன்னுமா போராட்டம்....?
இந்த சூழல் இப்படி மாறி வந்திருக்கலாம். ஆனால் இன்னும் ஏக கதைகளை சுமந்து திரியும் நண்பர்களை நான் அறிவேன். எங்கெங்கோ கிராமங்களில் இருந்து சினிமா லட்சியங்களோடு சென்னைக்கு கிளம்பி வந்த முதல் தலைமுறை இளைஞர்கள் முட்டி முளைத்து எழுவதற்குள் ஒவ்வொரு தினமும் யுகம். அப்பாவின் கனவு, அம்மாவின்  பரிவு, தம்பியின் அடுத்த கட்டம், சகோதரிகளின் திருமணம் என ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் ஆயிரம் பிரச்னைகள். அதெல்லாம் கடந்து ஒரு கதை முடித்து, தயாரிப்பாளர் தேடி, படப்பிடிப்பை நடத்துவதற்குள் போதும்... போதும்... என்றாகி விடும். என்னை மாதிரி கனவுக்கும், எதார்த்தத்துக்கும் நடுவில் அனுதினமும் அலைந்து திரியும் நண்பர்கள் எத்தனையோ பேர். உழைப்பையும், மனசையும் மட்டுமே சுமந்து பெரு நகரம் வரும் ஆயிரமாயிரம் இளைஞர்களின் கனவுகளில் உதிராமல் கிடப்பவை எத்தனை.. நினைத்தாலே மனம் எங்கெங்கோ அலைகிறது. எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் டி.சிவக்குமார், இணைத் தயாரிப்பாளர் பி.பி.சரவணன் ஆகியோருக்கு நன்றி.   

எப்படி வந்திருக்கிறது "பக்கா'?
முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தயாரிப்பாளர் தொடங்கி எல்லாம் முடிவானதும், நாம பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. என் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி அருகே செம்படாக்குறிச்சி கிராமம். அங்கேதான் படித்தேன். ஐந்து மைல் சுற்றளவு வரையிலான பயண வாழ்க்கை மட்டும்தான்.  அப்படி அந்தப் பகுதி கிராமங்களில் பார்த்த வாழ்க்கையில் இருந்துதான் இந்த கதைக்கரு கிடைத்தது. இது கள்ளக்குறிச்சி என்றில்லாமல், தமிழக கிராமங்களின் அசல் முகமாக இருக்கும். அதுதான் பக்கா. . என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளை சுட்டிக் காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. நல்ல கமர்ஷியல் படம். எல்லோரும் பார்த்து கழிக்கும் ஒரு சாதாரண கதை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளம். அவ்வளவுதான்.  

போஸ்டர்ஸ் தொடங்கி விக்ரம் பிரபு கெட்அப் வரைக்கும் எல்லாமே அமளி துமளியா இருக்கு...?
இவ்வளவு கமர்ஷியல் படம் வந்தாகிவிட்டது. இதில் என்னடா ஸ்பெஷல்? என்று உங்களுக்கு மனசு ஓரத்தில் தோணியிருக்கும். ஆனால் ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். திருவிழாக்களில் பொம்மை கடை போட்டு வியாபாரம் பார்க்கிறவர் விக்ரம் பிரபு. கிரிக்கெட் வீரர் டோனியின் பெரும் ரசிகர்.  டோனி பெயரில் ரசிகர் மன்றம்  நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். அதே பகுதியில் ரஜினிக்கு  மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் நிக்கி கல்ராணி. அதே கிராமத்தில் பெரிய மனிதர் ஒருவரின் மகள் பிந்து மாதவி. இந்த மூவருக்குமான காதல், அன்பு, கலாட்டா எல்லாமும் கதை.   காமெடி,  ஃபேமிலி பேக்கேஜ். இரண்டும் இந்தப் படத்தில் சரி பாதி இருக்கும். எல்லாமே புது காட்சிகளாக எடுத்து முடித்திருக்கிறேன்.  நிச்சயம் இது எல்லாருக்குமான சினிமாவாக இருக்கும். 

சூரி ஓ.கே. ஆனா, கட்டாய ஹிட் தேவைப்படும் ஹீரோ - விக்ரம்பிரபுவை வைத்து முதல் படம் இயக்குறீங்களே...? 
விக்ரம் பிரபு சாருக்கு "பக்கா' இனி  பக்கா அடையாளமாக இருக்கும். என் ஹீரோ என்பதற்காக சொல்லவில்லை.   மனுஷன் அப்படி ஓர் உழைப்பாளி. அவர் அடி வாங்குகிற மாதிரி ஒரு ஷாட்.  காட்சிகள் சரியா வர வேண்டுமே என்று இரண்டு மூன்று டேக் போனோம். பிரேக்கில் பார்த்தால், அவர் கன்னம், காது எல்லாம் சிவப்பாக கன்னிப்போய் இருந்தது. நான் பதறி விட்டேன். நமக்குத் திருப்திதான் முக்கியம்' என்று இயல்பாக சிரிக்கிறார். நிக்கி கல்ராணி, இதில் வேறு பொண்ணு. பாட்டு, கிளாமர்னு சும்மா வந்துட்டுப் போகாமல், அவ்வளவு தூரம் நடிக்க ஸ்கோப் இருக்கிறது அந்த பொண்ணுக்கு. பிந்து மாதவியும் அப்படித்தான். 

நிறைய இயக்குநர்களிடம் வேலை பார்த்திருக்கீங்க... ஒவ்வொருத்தரிடமும் என்ன கத்துக்கிட்டீங்க?
பேரரசு சாரிடம் பாடலுக்கான விஷுவல் ட்ரீட்மென்ட் கத்துக்கிட்டேன். அவர் எப்பவுமே தன் உதவியாளர்களிடம் நெருக்கமான நண்பன் போலத்தான் பழகுவார். வி.இசட்.துரை சார் தூங்காமக்கொள்ளாமல் வேலையே பழியாக் கிடப்பார். அவர் பக்கத்துல நின்றாலே நமக்கும் அவரோட சின்சியாரிட்டி தொத்திக்கும். ராசுமதுரவனிடம்  வேலை பார்த்த போதுதான் திரைக்கதையை எப்படி வடிவமைக்கிறது என்பதை கற்றுக்கொண்டேன். இவர்கள் எல்லாரிமுடம் கற்றுக் கொண்ட பாடங்கள்தான் இந்தப் படம்!
-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com