ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்கு முயற்சிப்போம்! 

இது ஆண்டவன் மீது தான்  வைக்கப் பட வேண்டும் என்பதில்லை. நமது வேலையில் வைக்கலாம். நமது குடும்பத்தின் மீது வைக்கலாம்.
ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்கு முயற்சிப்போம்! 

பிடித்த பத்து: நடிகை - இயக்குநர்  லட்சுமி ராமகிருஷ்ணன் தனக்குப் பிடித்த பத்து குறித்து விவரிக்கிறார்:

பக்தி: இது ஆண்டவன் மீது தான்  வைக்கப் பட வேண்டும் என்பதில்லை. நமது வேலையில் வைக்கலாம். நமது குடும்பத்தின் மீது வைக்கலாம். ஏன், நாம் பார்க்கும் எல்லா விஷயங்களிலும் பக்தியை நாம் பார்க்கலாம். பக்தியின் மிகப்பெரிய உயரம் நாம் வணங்கும் அனுமன். ஆங்கிலத்தில் கூறுவார்கள் passion + commitment = பக்தி (devotion). அனுமன் தான் எனக்கு எல்லாம். அவர்தான் என் friend  philosopher  and  guide.  
குழந்தைகள்: பல ஆண்டுகளுக்கு முன் என்னைப்  பார்ப்பவர்கள் எல்லோரும் இவள் இருக்கும் இடத்தில் குழந்தைகளை  பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். காரணம் நான் குழந்தைகளைப் பார்த்தால் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவேனாம். ஆனால், எனக்குப் பிறந்தது மூன்று பெண்கள். மூன்றும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. அதனால் மட்டும் இல்லாமல் இந்தியாவில் ஜனத்தொகை அதிகம், நாமும் சேர்க்கக் கூடாது என்பதனால் நிறுத்திக் கொண்டோம். இல்லாவிட்டால் நான் பெற்றுக் கொண்டே இருப்பேன். அந்த அளவிற்கு குழந்தைகள் மீது எனக்கு கொள்ளை விருப்பம்.
வயதானவர்கள்:  நான் காரில் போகும் பொது பல இடங்களில் வாழ்க்கையை வாழ்ந்து விட்டவர்கள் முகத்தைப் பார்த்து மகிழ்வேன். அவர்களின் தளர்ந்த நடை, சுருக்கம் விழுந்த முகம் என்னை மிகவும் கவரும். எனது தாத்தா 
நாராயணசாமி 100  வயதானவர், பெங்களூரில் வாழ்கிறார். மற்றொரு தாத்தா பாலக்காட்டில் வாழும் கிருஷ்ணசாமி. இவருக்கும் சுமார் 95  வயதிருக்கும். ஆணாதிக்கம் நிரம்பியவர். ஆனாலும் அவரை நான் மிகவும் விரும்புவேன்.  இவர்கள் மட்டும் அல்லாமல் பெயர் தெரியாத பல வயதானவர்களை நான் பாசத்தோடு விரும்புவதற்கு அவர்களது அனுபவம் ஒரு காரணமாகவும் இருக்கலாம். வாழ்க்கையை அதிகம்  படித்தவர்கள் என்பதால் கூட இருக்கலாம். 
படைப்பாற்றல்: இதன் மேல் உள்ள பற்று காரணமாகத்தானோ நான் இந்த திரை உலகில் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த உலகில் படைக்கும் எவருமே இறைவனுக்கு சமம்  என்பதைத்தான் கண்ணதாசன் கூட "நான் படைப்பதனால் என் பேர் இறைவன்' என்று கூறினார் போலும். ஓவியம், சமைப்பது, அதுமட்டுமல்லாமல் ராக்கெட் விடுவது எல்லாமே படைப்பின் ஒரு வழிதான். புதிதாக எதைப் படைத்தாலும் அவர் படைப்பாளிதான். அவர் யாராக இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.
ஆட்டுக் கட்டில்:   எங்கள் வீட்டில் அந்தக் காலத்தில் நடு நாயகமாக ஒருபெரிய கட்டில் இருக்கும். அதில் நாம் படுத்துக்கொண்டால் அது நம்மை தாலாட்டி தூங்க வைக்கும் . அதில் ஒருவர் படுக்கும் அளவிற்கு இடம் இருக்கும். அது ஊஞ்சலைப்போல்  ஆடும், ஆனால் அது ஊஞ்சல் அல்ல. அதில் பலநாள் நான் தூங்கி உள்ளேன். இன்றும் அதில் படுத்துக்கொள்ள எனக்கு விருப்பம்தான்.  ம்கூம்....       
கைக்கடிகாரமும், சூரிய ஒளியை மறைக்கும் கண்ணாடியும்:  இவை இரண்டையும் பார்த்தால் வாங்காமல் வராதே என்று மனம்  சொல்லும். என் பர்ஸில் பணமிருந்தால் எதைப் பற்றியும் பார்க்காமல் நான் இரண்டையும் வாங்கிவிடுவேன். ஒரு முறை நான் லண்டன் சென்றிருந்தேன். அங்கு கைக்கடிகாரம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறக் கேட்டு அந்த தெருவிற்கே செல்ல முடிவு பண்ணி அதற்கான அனுமதிச் சீட்டையும்  ( அனுமதி சீட்டு இல்லாமல் அங்கு போக முடியாதாம்)  வாங்கினேன்.  உள்ளே சென்று பார்த்தபோது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. சுமார் முப்பது லட்சத்திற்கு  ஒரு  கடிகாரம் இருந்தது.  என்னால்  பார்க்க மட்டுமே முடிந்தது. கையில் கட்டாவிட்டாலும்  பார்க்கவாவது முடிந்ததே என்ற சந்தோஷம் தான்.
தாயாரின் மூக்குத்தி: என் தாயாருக்கு நாங்கள் ஐந்து பெண்கள். இந்தியரின் மூக்குத்தி மீது எனக்கு என்றுமே ஆசை அதிகம். அவர் தனது தலையை ஆட்டி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சிரிக்கும் போது அந்த மூக்குத்தி டாலடிக்கும். ஏனோ அந்த மூக்குத்தி அவருக்கு பொருந்துகிறமாதிரி வேறு ஒருவருக்கும் பொருந்தவில்லை என்று நான் நினைப்பதுண்டு. தயாரிடமிருந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, நான் கேட்டது என்ன தெரியுமா? இன்றும் நான் விரும்பும் அந்த வைர மூக்குத்தியைத்தான். இன்று அந்த மூக்குத்தி என்னிடம் பத்திரமாக என் தாயாரை நினைவு படுத்திக் கொண்டு இருக்கிறது.
சூரியோதயம்: ஏனோ தெரியவில்லை, காலையில் சூரியன் உதிக்கும் முன் எனக்கு எழுந்திருக்கும் பழக்கம் உண்டு. சூரியோதயத்தை பார்த்ததுதான் நான் பல நாட்களை ஆரம்பித்திருக்கிறேன். சென்னை என்று மட்டும் இல்லாமல், வெளி ஊரிலும், வெளிநாட்டிலும், இந்த சூரியோதயத்தை முடிந்தவரை பார்த்து விடுவேன். அதே போல் சூரியன்  அஸ்தமிப்பதும் எனக்கு பிடிக்கும். இரண்டுமே காண "கண் கொள்ளாக்காட்சி' என்று கூறலாம்.
ஜீரா மிட்டாய்: சிறு வயதில் எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டல் "ஜீரா முட்டாய்' என்று கூறுவேனாம். அது போல் ஐஸ் கிரீமில் சாக்கோபார். சாதாரணமாக ஐஸ் கிரீம் இருந்தாலும் ஓகே தான் என்றாலும் சாக்கோபார் என்றால் சண்டை போட்டாவது வாங்கிவிடுவேன். பிள்ளையார் சதுர்த்தி வந்தால் கொழுக்கட்டை பிடிக்கும். அதிலும் இந்த தேங்காய் பூரம் வைத்த கொழுக்கட்டை. இந்தக் காலத்தில் எனக்கு பிடித்த ஒன்று இந்த "ஜெம்ஸ்'. எல்லாமே செலவில்லாதது என்று என் வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். எனக்கு பிடித்ததைத்தானே நான் விரும்பி சாப்பிடமுடியும்.   
குடும்பம்: எங்கே சென்றாலும் நம் வீடு நம் குடும்பம் என்று வரும் போது அது ஒரு தனியான மகிழ்ச்சி, மன நிறைவு என்று தான் சொல்லவேண்டும். என் வீட்டில் நாங்கள் ஐந்து பேர்  மட்டுமல்ல. அவரது பெற்றோர் பக்கம், என் பெற்றோர் பக்கம் என்று நிறைய பேர்கள் உண்டு. நானே என் தாத்தாவிற்கு 49-ஆவது பேத்தி என்று கூறுவார்கள். பெரிய குடும்பமாக இருந்தாலும்  அன்பு செலுத்துவதில்  ஒருவரை ஒருவர் மிஞ்ச என்றுமே முயற்சிப்போம்.  
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com