கட்சிகளைவிட தேசமே பெரிது!

திருச்சியில் 1897-இல் பிறந்து, 1976-இல் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரான "ரா.நா' , வழக்குரைஞர், பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பல பரிமாணங்கள் கொண்டவர்.
கட்சிகளைவிட தேசமே பெரிது!

திருச்சியில் 1897-இல் பிறந்து, 1976-இல் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரான "ரா.நா' , வழக்குரைஞர், பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பல பரிமாணங்கள் கொண்டவர்.  இவர், பாபு ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற தலைவர்களுடன் பரிச்சயமானவர். தியாகி ரா.நா. வின் மகன் வழிப்பேத்தி ரோகிணி ஜெகந்நாதன் தன் தாத்தாவுடன் பழகிய மறக்க முடியாத நாட்களை இங்கு நினைவு கூர்கிறார்: 
"என் தாத்தாவின்  முழுப்பெயர்: ரா.நாராயண ஐயங்கார். ஆனால், அவர் தம் படைப்புகளை ரா.நா. என்ற பெயரிலேயே  எழுதினார். சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து கொள்வதற்காக அவரிடம் பேசிக்கொண்டிருப்பேன்.  ஒருமுறை என் தாத்தாவிடம் கேட்டேன் "ஏன் தாத்தா, பி.ஏ.பி.எல் படிச்சிட்டு வக்கீல் வேலை செய்யலாமே, ஏன் சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டீங்க?''
அதற்கு தாத்தா, "காந்தியடிகள் இளைஞர்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தார். காந்தியவாதி என்பவன், காந்தி என்ன செய்யச் சொன்னாலும் செய்வான்'' என்று தன் கதர் சட்டைப் பொத்தான்களைப் பொருத்திக்கொண்டு பெருமையோடு சொன்னார். அரசியல் வாதத்தை விட தேச பக்தியே முக்கியம்; கட்சிகளை விட தேசமே பெரிதென்று கூறுவார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அவர் பலமுறை சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்.  ஒருசமயம், சேலம் சிறைச்சாலையில் 16 மாதங்கள்  "சி' வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொடுக்கப்பட்ட உணவோ படுமோசம். உட்கொள்ள முடியவில்லை; "சிறை வாழ்க்கையின் இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்' என்று காந்தி சொன்னதைக் கடைப்பிடித்தார்.  
பாதியளவுகூட உணவு எடுத்துக்கொள்ளாததால் உடல் எடை வெகுவாகக் குறைந்து இளைத்துவிட்டார். இது, சிறை டாக்டர் மூலமாக ராஜாஜிக்குத் தெரியவந்தது. ராஜாஜியின் வேண்டுகோளின் படி, வேறு அறைக்கு என் தாத்தா மாற்றப்பட்டார்.  தன் சிறை வாழ்க்கை அனுபவங்களை "சிறையிலே சிவ பக்தர்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அக்காலத்தில் தாத்தா முழுநேர எழுத்தாளராக இருந்தார். ஆனந்த விகடன், தினமணி, கல்கி, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் என் தாத்தாவின் கதை, கட்டுரை, விமர்சனங்கள் வெளிவந்திருக்கின்றன. "ஜெயபாரதி' என்ற தமிழ் நாளிதழின் ஆசிரியராக இருந்தார்.  சங்கு கணேசன் நடத்திய "சுதந்திரச் சங்கு' மாத இதழுக்கும்,  "ஹிந்துஸ்தான்',  "காங்கிரஸ் மேன்'  என்ற  ஆங்கில பத்திரிகைகளுக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார்.  பொது வாழ்க்கையில் பழகியவர்களைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வ.வே.சு. ஐயர், டாக்டர் ராஜன், கொடியாலம் ரெங்கசாமி, டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி, பிரதாப நாராயண வாஜ்பாய், டி.வி.சாமிநாத சாஸ்திரி  இவர்களைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். 
சுதந்திரப் போராட்ட அனுபவங்களை அவர் சொல்லக் கேட்பதே தனி அனுபவம்தான்.   அவரின் குரலின் தொனி, உடலசைவுகள் காரணமாக சொல்லப்படும் நிகழ்ச்சியில் நாமே பங்கு கொள்வதுபோன்ற ஓர் உணர்வு ஏற்படும்.  
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளராக தாத்தா இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். அப்போது, கரூரில் கதர் உடுத்திய காங்கிரஸ் காரர்களைப் பார்க்கவே முடியாதாம். ஆங்கிலேயர்களின் கெடுபிடிக்கு அஞ்சி, கதர் அணிந்து வெளியே வரமுடியாத சூழ்நிலை இருந்திருக்கிறது. அப்போது என் தாத்தா, மதுரை சீனிவாச வரதன், அவரின் மனைவி பத்மாசனி அம்மாள், தியாகராஜ சிவம் போன்ற முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களிடம் கூறி, அனைவரையும் அமராவதி ஆற்றின் கரைக்கு வரவழைத்தார். அனைவருக்கும் பத்மாசனி அம்மையார்தான் சமைத்து உணவளித்தார். உச்சி வெயிலில், அனைவரும் கரூரின் தெருக்களில் பாரதியாரின் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை... அச்சமென்பதில்லையே!'  என்ற பாட்டை பூமி அதிரும்படி  பாடிக்கொண்டு நடந்தனர். வீட்டில் பதுங்கிருந்த மக்கள் ஒவ்வொருவராக வெளியே வரத் தொடங்கினார்கள். ஊர்வலம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி வழியாகச் சென்றது. அங்கே அல்லா புகழ் பாடும் பாட்டைப் பாடினார்கள். மாலையில் கதர் அணிந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அமராவதி ஆற்றங்கரையில் கூடிவிட்டார்கள்.
அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த (பெரியார்) ஈ.வெ.ராமசாமி சொற்பொழிவு ஆற்றினார். கூட்டம் முடிந்ததும், "பயமெனும் பேய்தனை அடித்தோம். பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்' எனும் பாரதியின் பாட்டை பெருமிதத்துடன் முழங்கிக்கொண்டு திரும்பினார்கள்.  "பாரதியின் பாடல்கள் தேசபக்தர்களுக்கு எதிர்பாராதபடி உதவின' என்று "பாரதியின் மந்திரக் கவிகள்' கட்டுரையில் தாத்தா எழுதியிருக்கிறார். தாத்தாவும், நாங்களும், உறவினர்களும் மூன்று தலைமுறைகளாக சேர்த்து வைத்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்தைத் தாண்டும். அதை வைத்து என் வீட்டில் பெரிய நூலகமே அமைத்திருக்கிறேன். தாத்தா ரா.நா-வின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் படைப்புகளையும் தொகுத்து, அறக்கட்டளையின் சார்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். தாத்தாவின் ஆசியுடன் அதை  விரைவில் நிறைவேற்றுவேன்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ரோகிணி ஜெகந்நாதன். 
- ரவிவர்மா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com