1.60 கோடி வண்ணங்களில் மிளிரும் தில்லி நார்த் - சௌத் பிளாக் கட்டடங்கள்!

நாட்டின் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய நாள்களில் மட்டும் விளக்குகளால் மின்னி வந்த நார்த் பிளாக், சௌத் பிளாக் கட்டடங்கள் தற்போது, தினந்தோறும் வண்ண விளக்குகளில்
1.60 கோடி வண்ணங்களில் மிளிரும் தில்லி நார்த் - சௌத் பிளாக் கட்டடங்கள்!

நாட்டின் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய நாள்களில் மட்டும் விளக்குகளால் மின்னி வந்த நார்த் பிளாக், சௌத் பிளாக் கட்டடங்கள் தற்போது, தினந்தோறும் வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வகையில்  புதிய தொழில்நுட்பத்தினாலான "டைனமிக்' மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரதமர் அலுவலகம், மத்திய  நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் ஆகிய முக்கிய அமைச்சகங்களின் அலுவலகங்கள் நார்த், செளத் பிளாக் கட்டடங்களில் அமைந்துள்ளன.

அவற்றின் பிரம்மாண்ட கட்டடக் கலை பகலில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுத்து வந்தது. தற்போது இரவிலும் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் சுமார் 1.60 கோடி வண்ணங்களில் மிளிரக்கூடிய இந்த டைனமிக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எனினும், இந்த புதிய மின் விளக்கு அமைப்புகளை உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவரான மஹிபால் சிங் தொடக்கி வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஒட்டி அமைந்துள்ள நார்த் மற்றும் செளத் பிளாக் கட்டடங்கள் ஓராண்டில், குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட 8 முக்கிய நாள்களில் மட்டுமே நிலையான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. அந்த மின் விளக்குகள் மொத்தமாக 16,750 சதுர மீட்டர் பரப்பளவை அலங்கரித்தன.

மத்திய பொதுப் பணித்துறையால் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய டைனமிக் மின் விளக்குகள், நார்த் மற்றும் செளத் பிளாக் கட்டடங்களில் மொத்தமாக 21,450 சதுர மீட்டர் பரப்பளவுக்கு பொருத்தப்பட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களுக்குள்ளாக குடியரசுத் தலைவர் மாளிகையிலும் இவை பொருத்தப்பட உள்ளன.

வெளிப்புற வெளிச்சத்துக்கு ஏற்றவாறு, மின்ஒளியின் அடர்த்தியை தானாகவே கூட்டிக், குறைத்துக் கொள்ளும் வகையிலான இந்த விளக்கமைப்பு மாலை 7 மணி முதல் காலை 5 மணி வரையில் ஒளிரும். அந்த வேளையில் சில நொடிகளுக்கு ஒரு முறை விளக்கின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்டது. இந்த மின் விளக்கானது இரவு 8 முதல் 9 மணி வரையில் முழு திறனையும் பிரயோகித்து கட்டடத்தை ஜொலிக்க வைக்கும்.

இந்த டைனமிக் விளக்கிற்கான மின் நுகர்வு இரவு 7 முதல் 7.30 மணி வரையிலும், இரவு 10 முதல் காலை 5 மணி வரையிலும் 25 சதவீதம் அளவிற்கு இருக்கும். இதுவே இரவு 7.30 முதல் 10 மணி வரையிலான மின்நுகர்வு 50 சதவீதமாக இருக்கும்.

பாரீஸில் உள்ள ஈஃபிள் டவர் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்களில் இந்த டைனமிக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நார்த் மற்றும் செளத் பிளாக் கட்டடங்களில் உள்ள இந்திய மற்றும் பிரிட்டிஷ் கட்டடக் கலையின் சிறப்புகளை இந்த டைனமிக் விளக்குகள் மேம்படுத்தி காட்டுகின்றன பழைய விளக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய விளக்குகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.86.40 லட்சம் வரையில் சேமிக்க முடியும்.

இந்த டைனமிக் விளக்குகளில் இருக்கும் எல்இடி பல்புகளின் எதிர்நோக்கப்படும் ஆயுள்காலம் சுமார் 1 லட்சம் மணி நேரத்துக்கும் (விளக்கு எரியும் நேரம்) அதிகமாகும். அதாவது இந்த பல்புகள் சுமார் 25 ஆண்டுகள் வரையில் நீடிக்கும். பழைய அமைப்பில் இருந்த மின் விளக்குகளின் ஆயுள்காலம் 10,000  மணி நேரமே ஆகும்.

ரூ.15.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டைனமிக் விளக்குகளுக்கான ஆண்டு மின் கட்டணம் ரூ.8.40 லட்சம் வரையில் இருக்கும். இது, முந்தைய மின்விளக்கு அமைப்புகளுக்கான கட்டணத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகும்.

இந்த விளக்கமைப்பிற்கென கணினி கட்டுப்பாட்டு மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவுக்கு தகவல் மற்றும் மின்சாரத்தை கடத்திச் செல்லக் கூடிய ஒருங்கிணைந்த ஒயர் அமைப்புகளுடன் அந்த எல்இடி விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளன.

கட்டட அமைப்புகள் மற்றும் வடிவத்துக்கு ஏற்றவாறு ஒளியை உமிழச் செய்யும் வகையில் இந்த விளக்குகளில் பிரத்யேகமாக கண்ணாடி லென்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்ட நாள்களில் விளக்கின் நிறத்தை தேவைக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள இயலும்.

இந்த டைனமிக் விளக்குகள் யாவும் மாசு மற்றும் பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்த விளக்குகள் யாவும் தரையிலிருந்தோ அல்லது புல்வெளிகளில் இருந்தோ கட்டடத்தை நோக்கி ஒளியை உமிழும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, பயன்படுத்தப்பட்டு வந்த மின் விளக்குகள் அமைப்பில், 3 வாட் திறன் கொண்ட 50,000 எல்இடி விளக்குகள் நார்த் மற்றும் செளத் பிளாக் சுவர்களை அலங்கரித்தன. முந்தைய மின் விளக்கு அமைப்புக்காக ஆண்டுதோறும் செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில், 6 முதல் 7 ஆண்டுகளில் இந்த புதிய விளக்குகளை பொருத்தியதற்கான செலவை திரும்பப் பெற முடியும். இந்த வண்ணமயமான புதிய மின் விளக்குகள் சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி உள்ளூர்வாசிகளையும் கவர்ந்து வருகிறது.
- ந. காந்திமதிநாதன்

• சுமார் 1.60 கோடி வண்ணங்களில் மிளிரக்கூடியது. 

• ஈஃபிள் கோபுரத்தையும் டைனமிக் விளக்குகள் அலங்கரித்துள்ளன. 

• தினந்தோறும் மாலை 7 மணி முதல் காலை 5 மணி வரையில் ஒளிரும்.

• இரவு 8 முதல் 9 மணி வரையில் முழு திறன்கொண்டு ஜொலிக்கும்.

• இந்த டைனமிக் விளக்குகள் ரூ.15.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

• இதிலுள்ள எல்இடி விளக்குகளுக்கு சுமார் 1 லட்சம் மணி நேர ஆயுள்காலமாகும்.

• 3 மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையிலும் பொருத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com