மாறியது வாழ்க்கை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மாதரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் வழக்கமான உயரத்தைவிட குறைந்திருப்பதால் அவரை கிராமத்தினர் அனுதாபத்துடனே பார்த்தனர்
மாறியது வாழ்க்கை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மாதரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் வழக்கமான உயரத்தைவிட குறைந்திருப்பதால் அவரை கிராமத்தினர் அனுதாபத்துடனே பார்த்தனர்.  பத்தாம் வகுப்பை முடித்து பன்னிரண்டாம் வகுப்பை முடிக்காத கணேசன் தனது ஊரின் பெரும்பான்மையோரின் தொழிலான விவசாயத்தையே தேர்ந்தெடுத்தார்.   தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென்னை மரம், நெல் என எதைப் போட்டாலும், அவரது வாழ்க்கை வாங்கிய கடனை அடைக்கமுடியாத நிலையிலே தொடர்ந்தது.  வளர்த்துவந்த ஆடு, மாடுகளையும் பராமரிக்க வழியின்றி விற்க நேர்ந்தது.

மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றால் அரசு சலுகை கிடைக்கும் என நினைத்து கடந்த 2015-ஆம் ஆண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், அந்த மருத்துவமனை வளாகம் தன் வாழ்க்கையை திசைமாற்றப்போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

அங்கு சான்று பெற தன்னைப் போல பல குள்ளமான மாற்றுத்திறனாளிகள் காத்துக்கிடப்பதை அறிந்த கணேசன்,  அதே பகுதியைச் சேர்ந்த மனோஜை சந்தித்தார்.  தான் ஒரு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் என அறிமுகமான மனோஜ், தனது பயிற்சியாளர் ரஞ்சித்திடம் கணேசனை அழைத்துச்செல்லவும் முன் வந்தார்.

காமன்வெல்த் மாற்றுத்திறனாளி வீரரான மதுரை ரஞ்சித்திடம் அறிமுகமான கணேசனுக்கு எம்.ஜி.ஆர்.விளையாட்டு மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. குறைந்த உயரமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் சிறந்து விளங்கிய கணேசனை மாவட்ட அளவிலான போட்டிக்கு தயார்ப்படுத்தினார் ரஞ்சித்.

மதுரையில் 2015 -இல் நடந்த  மாவட்ட அளவிலான போட்டிகளில் இரும்புக் குண்டு, ஈட்டி, வட்டு எறிதலில் தங்கம் வென்றார். அதே ஆண்டு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று "பிரிவு 3' என்ற வகையில் வட்டு  எறிதலில் தங்கமும், குண்டு எறிதலில் வெள்ளியும், ஈட்டியில் வெண்கலமும் வென்றார்.

காரைக்குடியில் 2016-ஆம் ஆண்டு நடந்த மாநில அளவிலான உயரம் குறைவானவர்களுக்கான தடகளப் போட்டியில் வட்டு, ஈட்டி, குண்டு எறிதல்களில் மூன்றிலும் தங்கம் வென்று சாதனை படைத்தார். அதனடிப்படையில் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் குண்டு எறிதலில் வெள்ளியும், ஈட்டியில் வெண்கலமும் பெற்றார். இதையடுத்து சர்வதேச அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார்.

சமீபத்தில் கனடாவில் நடந்த சர்வதேச அளவிலான உயரம் குறைவானவர்களுக்கான போட்டியில் கணேசன் இந்தியா சார்பில் பங்கேற்றார். வட்டு, ஈட்டி, குண்டு எறிதல் என மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்தப் போட்டியில் உலக அளவில் 715 பேர் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து பங்கேற்ற 21 பேரும் 37பதக்கங்கள் பெற்றனர். அதில் தமிழகம் சார்பில் பெற்ற 5 தங்கப் பதக்கங்களில் மூன்று தங்கப் பதக்கங்களை கணேசன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டில் உலக அளவில் சாதித்திருக்கும் கணேசனுக்கு இன்னும் மாவட்ட,  மாநில நிர்வாகங்கள் உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை என்பது விளையாட்டு ஆர்வலர்களின் கருத்து.  ஆனாலும், கணேசன் மனம் தளரவில்லை. அடுத்து 2018 -ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஆசியன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று தேசத்துக்கு பெருமைத் தேடித்தரும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் கணேசன்.
-வ.ஜெயபாண்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com