இனிதான் எனக்கான "ஸ்டார்ட் பட்டன்!'

சின்ன சின்ன தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும். அப்படி ஒட்டு மொத்த
இனிதான் எனக்கான "ஸ்டார்ட் பட்டன்!'

சின்ன சின்ன தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும். அப்படி ஒட்டு மொத்த அனுபவங்களையும் பெற்று விட, இந்த ஒரு வாழ்க்கை போதாது. இதோ நம் பக்கத்தில் நடக்கிற சின்ன சின்ன தவறுகளிலிருந்து கூட, அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஏதோ ஒரு உபதேசம் போல் இருக்கலாம். 

ஆனால் உண்மை. இதைச் சொல்லி முடிக்கும் போது, இனிகோவின் முகத்தில் அவ்வளவு பிரகாசம். "அழகர்சாமியின் குதிரை', "சுந்தரபாண்டியன்' என படத்துக்கு படம் கவனம் ஈர்ப்பவர். "பிச்சுவாக்கத்தி', "வீரையன்' என எதார்த்த சினிமாக்களின் பக்கம் நிதானமாக நிற்கிறார். 

 ""திருநெல்வேலி மாவட்டம் முத்தாலபுரத்தில் ரெட்டி வேப்பன் குளம் என் சொந்த ஊர். சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம். கால் போன போக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் இருந்தே இந்த சினிமா மேல் ஆசை. 7-ஆவது படிக்கும் போது பள்ளியின் தலைமையாசிரியர் தந்த உத்வேகம் இந்தப் பயணத் தொடக்கத்துக்கு பெரும் பலம். சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றி தீவிரமாக தெரிந்து கொண்டேன். 

ஆனால் சினிமா வாசலுக்கான திறவுகோல் என்னிடம் இல்லை. சென்னை வந்து ஆயிரம் கஷ்டங்கள். நிறைய இயக்குநர்களின் வாசலில் நின்று வாய்ப்பு தேடுவேன். அப்படித்தான் "பூ' சசி சார் ஒரு ஆடிஷன் நடத்தி வாய்ப்பு தர முன் வந்தார். ஆனால், அந்தப் படத்தை உடனடியாக தொடங்க முடியாத சூழல். அப்போதுதான் லிங்குசாமி சார் ஆரம்பித்த "ஜீ' படத்துக்கு அவரிடம் பேசி வாய்ப்பு வாங்கித் தந்தார். நம் சினிமா பயணத்துக்கு குரு, தெய்வம் எல்லாமே "பூ' சசி சார்தான்'' மென் புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் நடிகர் இனிகோ பிரபாகரன்.

""சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறைய கதைகள் இருக்கும். ஆனால் எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்கள் கொடுத்தார்கள். சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் இருந்த குழப்பங்களை புரிந்துக் கொள்ள துணை நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது. 
 இவன் பெரிய ஆளு... னு சில பேர் எடைப் போட்டார்கள். அப்படி ஒரு ஆள்தான் வெங்கட்பிரபு சார். "சென்னை 600028' படத்தின் மூலம் நல்ல இடம் தந்து, பெரிய தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இப்படி வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள். 

 சில படங்களில்தான் நடித்திருக்கிறேன். பெரிய இடங்களுக்கு இன்னும் பயணப்படவில்லை. அதற்குள் நிறைய பேரின் அன்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இயல்பா இருக்கப்பா... னு நிறைய பேர் சொல்லுவதில் மகிழ்ச்சி. சமீபத்தில் வந்த "பிச்சுவாக்கத்தி' படம் அந்த ரகம்தான். 

இவற்றையெல்லாம் விட போராடி வெற்றிப் பெறத் துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் எல்லோருக்கும் என் இடம் பிடித்திருக்கிறது. சினிமாவில் தொடர்ந்து நீங்க பயணிக்கிற விதம் தனி... ஊருக்கு போகலாம் என்று இருந்த எனக்கு உங்கள் இடம் நம்பிக்கை தந்திருக்கு... னு வந்து விழுகிற வார்த்தைகள் எல்லாம் அற்புதம். இதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். தேடி வந்தவை நிறைய.. நான் தேடிப் போனவை சில. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். மனசுக்குப் பிடிக்கிற படங்களில் இருக்கிறோம் என்பதே அவ்வளவு நிறைவு. 

 அடுத்து "வீரையன்'. அறிமுக இயக்குநர் ப்ரீத் எழுதி இயக்குகிறார். திரைக்கதையில் அவ்வளவு சுவாரஸ்யம். எதிர்பார திருப்பங்கள் நிறைந்த கதை. 1980-களுக்கு மத்தியில் தஞ்சாவூர் பகுதிகளில் நடக்கிற கதை. இந்த நேரத்தில் நான் நடிக்க வேண்டிய படம். எதிர்பார்ப்பது எல்லாம் நடந்தால், இந்த படம் வேறு ஒரு நிலையில் உங்களை வந்து சேரும். உடம்பும், மனசும் லயித்து இயங்குகிற படம். காலம் பல கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நிற்கக் கூடிய படமாக இது இருக்கும். இதோ நீங்களும், நானும், நாம் எல்லாரும் பார்த்து ரசிக்கிற இந்த உலகம்தான் கதை. நல்ல படம். நல்ல இடத்துக்கு என்னைக் கொண்டு போகும். 

நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால், ஆசீர்வதிக்கப்பட்ட இடம் கிடைக்கும். என் சினிமா பயணத்தில் கிடைத்த அனுபவம் இது. எல்லாவற்றுக்கும் நேரம் எடுத்து, புதிது புதிதாக யோசித்து உழைக்கத் தயாராக இருக்கிறேன். அப்படிப் பார்த்தால் இனி வரும் படங்கள்தான் எனக்கான ஸ்டார்ட் பட்டன். 

 உன்னதமான நேரம் இது. சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. அப்படி வரும் படங்களில் நான் நிச்சயம் இருப்பேன். கேட்டதை விட, நினைத்ததை விட எல்லாமே அடுத்தடுத்து நல்லதாகவே நடந்துக் கொண்டு வருவதால்,  இது நிச்சயம் சாத்தியப்படும்'' நம்பிக்கையாக பேசுகிறார் இனிகோ பிரபாகரன்.  
-ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com