அறிந்த சென்னை - அறியாத தகவல்கள்!

சென்னை நகரத்தின் முந்நூற்றுச் சொச்ச ஆண்டு  வரலாற்றை அங்கங்கே நடந்த சொற்பொழிவுகளும், நடைப் பயணங்களும், நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.
150 ஆண்டுகளுக்கு முன்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
150 ஆண்டுகளுக்கு முன்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

சென்னை நகரத்தின் முந்நூற்றுச் சொச்ச ஆண்டு  வரலாற்றை அங்கங்கே நடந்த சொற்பொழிவுகளும், நடைப் பயணங்களும், நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.  ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே நம் சென்னை நகரத்தின் பகுதிகள் எப்படி வளர்ந்திருந்தன என்று ஓர் இளைஞர் பேசப் போகிறார்.  (எய்ம் ஃபார் சேவா என்ற அமைப்புக்காக இந்த நிகழ்ச்சி நடை பெறுகிறது.  எய்ம் ஃபார் சேவா என்பது சுவாமி தயானந்த சரசுவதி உருவாக்கிய அமைப்பு.  இவர்கள் நடத்தி வரும் ஓராசிரியர் பள்ளிகள், பின்னடைந்த பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.)

சொற்பொழிவு செய்யப்போகும் இளைஞர் பெயர் மதுசூதனன் கலைச்செல்வன்.  இவர் முகமது சாதக் ஏ.ஜே. அகடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் என்ற கல்லூரியில் கட்டுமானக் கலைப் பேராசிரியராக இருக்கிறார்.  ஆங்கிலத்திலும், தமிழிலும் அநாயாசமாகப் பேசும் ஆற்றல் மிக்கவர். "அரங்கம்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.  கோயில்களில் செதுக்கப்பட்டிருக்கும் எழுத்துகளைப் படிக்கும் எபிகிராஃபி பயிற்சி பெற்றவர். ஓவியம் வரைவார். கர்நாடக இசை கற்றிருக்கிறார்.  மிருதங்கம் வாசிப்பார்!  தரங்கம்பாடியில் உள்ள டச்சுக் கோட்டை, தஞ்சை பெரிய கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் இவற்றைப் புதுப்பிப்பதில் பங்கு கொண்டிருக்கிறார்.  காஞ்சிபுரத்தில் பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாப்பதில் ஒரு நிபுணராக இருந்து உதவியிருக்கிறார்.  

ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை என்ற வழிபாடு தனித்துவமானது.  அந்தக் கலையை அரையர் சேவை செய்பவர்களிடமே கற்று, அதைப் பற்றி அவ்வப்போது சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார்.  அமெரிக்காவில் வசித்த போது, அங்கேயும் அரையர் சேவை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

சரி, வரும் பதினைந்தாம் தேதி, தேசிகா சாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் என்ன பேசப் போகிறார்?  பேராசிரியர் மதுசூதனன் கலைச்செல்வனிடமே 
விசாரித்தோம்:
"முக்கியமாக திருமயிலை, திருவல்லிக்கேணி, திருவான்மியூர் மற்றும் திருவொற்றியூர் பற்றித்தான் பேசப் போகிறேன். இன்றைக்கு நாம் குறிப்பிடுகிற சென்னை அல்லது மெட்ராஸ், பல கிராமங்களின் தொகுப்பாகத்தான் இருந்திருக்கிறது.  சிறியதும் பெரியதுமாக நிறைய கிராமங்கள் இந்த நூற்றுக் கணக்கான ஆண்டுகளில் உருவாகி வளர்ந்திருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்வதுதான்.  விழாக்கள், பண்டிகைகள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை எல்லாம், இன்றைக்கு சென்னை எப்படி உருவாகியிருக்கிறது என்பதைக் காண்பித்தன''.

இந்தப் பழைய விஷயங்களை எப்படி எடுத்துச் சொல்லப் போகிறார்?

"நிறையப் பாசுரங்கள், பதிகங்கள் எல்லாம் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கின்றன.  இவை எல்லாம் அப்போதைய குடியிருப்புகள் பற்றி, வாழ்க்கை முறை குறித்து, உணவு முறைகள் பற்றி எல்லாம் எடுத்துச் சொல்கின்றன. இவை எல்லாம் குறிப்பாக அந்தப் பாடல்களில் தெரிவிக்கப்படுகின்றன. இவை எல்லாம் சேர்ந்துதான் இன்றைய சென்னையாக உருவாகியிருக்கின்றன! 

திருவொற்றியூர் வனங்கள் சூழ்ந்த பகுதி என்று பாடலில் வருகிறது.  அப்பர் தேவாரத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.  அதே போன்று ஆழ்வார்கள் திருவல்லிக்கேணியைப் பற்றிப் பாடும்போது திருமங்கை ஆழ்வார் பாடலைச் சொல்லலாம். திருமயிலை பற்றி சம்பந்தர் தேவாரத்தில்கூட புன்னைமரங்கள் சூழந்த இடமாகக் குறிப்பிடுகிறார். 

பவழக் கற்கள் கரையோரமாக வந்ததைச் சொல்கிறார். மாலையில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றியிருப்பதைக் கூறுகிறார்.   திருமங்கை ஆழ்வார் அடர்ந்த சோலைகள் இருந்ததைப் பாடியிருக்கிறார்.  மாடங்கள் நிறைய இருந்ததாகக் கூறுகிறார்.  தைப்பூசம் பற்றிச் சொல்லும்போது, பொங்கல் செய்து சாப்பிட்டது பற்றிப் பாடுகிறார்கள். "ஒற்றைப் புழுங்கல் அரிசியில் பொங்கல் செய்து' உண்டதாகப் பாடியிருக்கிறார்கள்.  நெய்யால் தயாரிக்கப்பட்டதாக இதில் வருகிறது.  வயல்கள், வனங்கள் பற்றி எல்லாம் 1400-ஆண்டுகளுக்கு முன், சாகுபடி செய்தது உட்படப் பாடியிருக்கிறார்கள்.  கவிதையில் மிகைப்படுத்தல் என்பது இல்லவே இல்லை.  இயல்பாக இயற்றியிருக்கிறார்கள்!'' என்கிறார் மதுசூதனன் கலைச் செல்வன்.

இந்த நிகழ்ச்சிக்குச் சென்னையின் புனிதத் தலங்கள் என்ற தலைப்பு இருப்பதால், அந்தந்த இடங்களில் பாடப்பட்ட பாடல்களை இவர் குறிப்பிடும் போது, இளம் இசைக் கலைஞர் சுனில் கார்கியன் அந்தப் பாசுரங்களையும் பதிகங்களையும் பாடுவார்.  எனவே இது இயலும், இசையும் கலந்த நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது.

நிகழ்ச்சி சுவையாக இருக்கப் போகிறது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்தான்.  மதுசூதனன் கலைச்செல்வன் சுற்றிவளைத்து எல்லாம் பேசமாட்டார்.  சுருக்கமாகப் பேசினாலும், சுவைபடப் பேசுகிறார்.  
- சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com