நேர்மறை சிந்தனை... மாற்றத்திற்கு தயாராகுதல்...வெற்றிக்கு வழி!

"உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே  இருக்கிறது. மாறுதல்களுக்கு ஏற்ப நாம் தயாராகாவிட்டால்,  வாழ்வில் தோல்வியைச் சந்தித்து துவண்டு போக வேண்டியதுதான்'' என்கிறார் ஏ.எல்.சூர்யா.
நேர்மறை சிந்தனை... மாற்றத்திற்கு தயாராகுதல்...வெற்றிக்கு வழி!

"உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே  இருக்கிறது. மாறுதல்களுக்கு ஏற்ப நாம் தயாராகாவிட்டால்,  வாழ்வில் தோல்வியைச் சந்தித்து துவண்டு போக வேண்டியதுதான்'' என்கிறார் ஏ.எல்.சூர்யா.

உளவியல் ஆலோசகர், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு பேச்சாளர், சுயமுன்னேற்ற நூல்களின் ஆசிரியர், இசையமைப்பாளர் என பல்வேறு பரிமாணங்களில் மிளிரும் அவரை சென்னை  தியாகராயநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

பாரதியாரின் "பாயுமொளி நீயெனக்கு' என்ற பாடலுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.  அந்தப் பாடலுக்கு நடிகை பத்மப்ரியாவை நடிக்க வைத்து,  யூ  ட்யூப்பில் அதை ஒளிபரப்ப, இயக்குநர் பாரதிராஜா உட்பட பலரும் அவரைப் பாராட்டியிருக்கின்றனர்.  "ஆழ்மனதும் அதன்  அபரிமித ரகசியங்களும்' , "பணமே பணமே ஓடி வா' என்ற இருநூல்களின் ஆசிரியர். 

பலதுறைகளிலும் எப்படி அவரால் ஆர்வத்துடன் ஈடுபட முடிகிறது? என்ற கேள்வியுடன் அவரை அணுகினோம்.

"சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், நான் படித்தது பெட்ரோலியம் துறை சார்ந்த படிப்பு.  படிப்பு  முடிந்தவுடன் எல்லாரையும்  போல பெட்ரோலியத்துறை நிறுவனம் ஒன்றில் சேர்ந்து வேலை செய்தேன். ஆனால் என்னுடைய மனம் அதில் ஒன்றவில்லை.  சிறுவயதிலேயே  கலை, இசை ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால், பெட்ரோலியத்துறை நிறுவன வேலையில் சில ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. 

அதனால் சதானந்தம் என்ற கிதார் இசைக் கலைஞரிடம் இசைக் கருவிகள் வாசிக்க பயிற்சி பெற்றேன். அவரிடம் பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டேன். இங்கிலாந்தில்  உள்ள "ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன்' நடத்திய பியானோ இசைத் தேர்வில் 5 கிரேடு வரை தேர்வு பெற்றேன். 

திரைப்படத்துக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சில இசையமைப்பாளர்களின் கீழ் பணி புரிந்தேன்.  எனக்கு இசையில் உள்ள ஆர்வம் போலவே பாரதியாரின் பாடல்களிலும் அளவுக்கதிகமாக ஆர்வம் இருக்கிறது. பாரதியாரின் "பாயுமொளி நீயெனக்கு' என்ற பாடலுக்கு இசையமைத்தால் என்ன? எனத் தோன்றியது. இசையமைத்தேன். 

2005-இல் "பூஞ்சோலை'  என்ற இசை ஆல்பத்தை உருவாக்கினேன். அந்த ஆல்பத்தில் இந்த "பாயுமொளி நீயெனக்கு'  பாடலும் இடம் பெற்றது. 

"தவமாய் தவமிருந்து' படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபுவின் அறிமுகம் 2006-இல் கிடைத்தது. அவர் "பாயுமொளி நீயெனக்கு' பாடலுக்கு பத்மப்ரியாவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.  அப்படி நடிக்க வைத்ததை  யூ ட்யூப்பில் ஒளிபரப்பினோம்.  இயக்குநர் பாரதிராஜா சார் உட்பட பலரிடம் இருந்து  பாராட்டுகள் வந்து குவிந்தன. 

இசைத்துறையில் இப்படி என் பயணம் இருந்தாலும், குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக என்னால் ஆக முடியவில்லை.  சோர்ந்து போனேன். 

அதன் பின் ஒரு பி.பி.ஓ.வில் வேலை பார்த்தேன். ஒரு கோயிலின் நிர்வாக வேலைகளில் உதவியாக இருந்தேன்.  நம்பக் கூடாதவர்களை நம்பி வாழ்க்கையில் நிறைய ஏமாந்தேன்.  

தோல்வி என்னை மிகவும் வருத்தியது. ஒரு மன நல ஆலோசகரை அணுகி அவரிடம் பேசினேன். அவர் என்னிடம் பேசிய பேச்சு, கொடுத்த உளவியல் பயிற்சிகள் என்னை நிமிர்ந்து நிற்க வைத்தன.  உளவியல் தொடர்பான நிறையப் புத்தகங்களைப் படித்தேன். வீடியோக்களைப் பார்த்தேன்.  என்னைப் போல தோல்வியால் துவண்டு போனவர்களை மீட்க நானே ஏன் தன்னம்பிக்கைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தக் கூடாது  என நினைத்தேன்.  என் பாதை மாறியது.  

"நீ உன்னை அறிந்தால்' என்ற தலைப்பில் தன்னம்பிக்கை சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தினேன்.  கிட்டத்தட்ட 80 தன்னம்பிக்கை சார்ந்த வீடியோக்களை யூ  ட்யூப்பில் அரங்கேற்றியிருக்கிறேன்.  அவற்றைப் பார்த்தவர்கள், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் கூட என்னிடம் தொலைபேசியிலும், நேரிலும் உளவியல் ஆலோசனை பெறுகிறார்கள். அவர்களுடைய மனப்பிரச்னைகள், பணப்பிரச்னைகள் என எல்லாவற்றுக்கும் என்னிடம் வந்து ஆலோசனை பெறுகிறார்கள். 

நான் அடைந்த தோல்விகள், அதனால் கிடைத்த அனுபவங்கள், தோல்வியிலிருந்து நான் மீண்டு வந்தது, மாறி மாறி பலவிதமான பணிகளில் ஈடுபட்டது எல்லாம் சேர்ந்து இப்போது என்னை புத்தகம் எழுதும் அளவுக்கு உயர்த்தியிருக்கின்றன. 

என் அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்டது இதுதான்.    எவ்வளவு துன்பம் வந்தாலும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும்;  மாறிவரும் உலகிற்கு ஏற்ப நாம் மாறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் .  இதுதொடர்பான விழிப்புணர்வை  ஏற்படுத்துவதுதான் எனது இப்போதைய பணி''  என்கிறார் ஏ.எல்.சூர்யா.
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com