சிங்கியின் வேண்டுகோளை ஏற்று நடம் புரிந்த சிவன்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் கிராமத்தின் அருகே உள்ள சிறிய கிராமம் மப்பேடு. இங்குதான் சிங்கீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த சிங்கீஸ்வரர் கோயிலின் வரலாறு சுவாரசியமானது.
சிங்கியின் வேண்டுகோளை ஏற்று நடம் புரிந்த சிவன்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் கிராமத்தின் அருகே உள்ள சிறிய கிராமம் மப்பேடு. இங்குதான் சிங்கீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த சிங்கீஸ்வரர் கோயிலின் வரலாறு சுவாரசியமானது.
ஒருமுறை, நடராஜரின் பிரசித்தி பெற்ற நடனக் காட்சி திருவாலங்காடு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. சிங்கி என்ற பெயருடைய நந்தி உள்ளிட்ட எட்டு இசைக்கலைஞர்கள் சிவனின் நடனத்துக்கு ஏற்ப இசைக் கருவிகளை மீட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது, மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த சிங்கி, தன் கண்கள் மூடிய நிலையில் இசையிலே மெய் மறந்திருந்தார். இதனால், அவர் நடனத்தைக் காணவில்லை. தெய்வீக நடனம் நிறைவுபெற்றது. சிங்கி தன் தவறை உணர்ந்தார். மப்பேடு வந்து சிவனைத் தொழுது, ""தெய்வீக நடனத்தை நான் காணவேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார். சிங்கியின் வேண்டுகோளை ஏற்று அவருக்காக நடம் புரிந்தார் நடராஜர். அதனால், இங்குள்ள சிவன் "சிங்கீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
கோயிலின் முக்கிய சந்நிதி கிழக்கு முகம் நோக்கி உள்ளது. கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் ஒன்று வடக்கு வழியாகவும், ஒன்று தெற்கு வழியாகவும் உள்ளது. தெற்கு வாசல் கோபுரம் ஐந்து அடுக்குகள் கொண்டது. பெரும்பாலான பக்தர்கள் தெற்கு வாயிலையே பயன்படுத்துகின்றனர். இக்கோபுரத்தின் இருபுறத்திலும் கங்காதேவியும், யமுனாதேவியும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளனர்.
விசாலமான கோயிலுக்குள், விநாயகர், முருகர், விஷ்ணு, சண்டிகேஸ்வரர் என பல சிறிய கோயில்கள் உள்ளன. இத்தலத்தில் பார்வதி தேவி "புஷ்ப குஜாம்பாள்' எனும் பெயரில் அருள் பாலிக்கிறார். தேவியின் சந்நிதி வடமேற்கில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மண்டபம் முழுவதும் உள்ள கிரானைட் தூண்கள் விஜயநகர நாயக்கர் கால கட்டடக்கலையின் பாணியில் அமைந்துள்ளன. இக்கோயிலின் விசேஷமான அம்சம் வீணை வாசிக்கும் ஆஞ்சநேயரின் அரிய சிற்பம். ஒரு சமயம், மழை வர வேண்டி ஆஞ்சநேயர் இங்கு அமிர்தவர்ஷினி ராகம் பாடினார் என்ற நம்பிக்கை உள்ளது.
இரண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலாவது பிரதான கோபுரத்தின் கீழே இருந்தது. அதில், 10-ஆம் நூற்றாண்டில் வீரபாண்டியன் தலையைக் கொய்த சோழ மன்னரைப் பற்றிய செய்தி பார்த்திபேந்திரவர்மன் என்பவரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது கல்வெட்டு கிழக்கில் உள்ள மதிற்சுவர் அருகே உள்ளது. இதில், 16-ஆம் நூற்றாண்டில், விஜய நகரப் பேரரசர்களில் ஒருவரான சதாசிவ ராயர் இக்கோயிலுக்கு இறையிலியாக நிலம் வழங்கியதைத் தெரிவிக்கிறது.
அரக்கோணம்-பூந்தமல்லி இடையே உள்ளது மப்பேடு கிராமம். கல்வெட்டுகள் இவ்வூரின் பெயரை "மப்பேடு-சீர்மை' என்று குறிப்பிடுகின்றன. சிங்கீஸ்வரரின் பழங்காலப் பெயர் "சிங்கீசுரமுடையார் தம்பிரானர்' என்பதாகும்.

கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர்
கோயில் - சிற்பங்கள் ஆராய்ச்சியாளர்.
தமிழில்: ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com