தெரிந்த பெயர் தெரியாத விவரம்: திருமலை நாயக்கர் மகால்

மதுரையில் பார்க்கவேண்டிய இடங்களில் திருமலை நாயக்கர் மகாலும் ஒன்றாகும். மதுரை நாயக்கர் மன்னர் மரபில் ஏழாவது மன்னரான திருமலை நாயக்கரால் மகால் கட்டப்பட்டது.
தெரிந்த பெயர் தெரியாத விவரம்: திருமலை நாயக்கர் மகால்

மதுரையில் பார்க்கவேண்டிய இடங்களில் திருமலை நாயக்கர் மகாலும் ஒன்றாகும். மதுரை நாயக்கர் மன்னர் மரபில் ஏழாவது மன்னரான திருமலை நாயக்கரால் மகால் கட்டப்பட்டது. கடந்த கி.பி.1623 -ஆம் ஆண்டு முதல் 1629 -ஆம் ஆண்டுக்குள் மகால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 
மகாலின் கட்டுமானத்துக்கான மண் தோண்டிய இடமே தற்போது மாரியம்மன் திருக்கோயில் அருகே அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலுக்கான தெப்பக்குளமாக உள்ளது. இங்குதான் முக்குருணி விநாயகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து நாயக்கர் தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்ட நிலையிலே இம்மகால் கட்டப்பட்டது. இத்தாலிய கட்டடக் கலையும், இந்திய கட்டடக் கலையும் ஒருங்கே அமையப்பெற்றது.
 
இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.
 
நெடுதுயர்ந்த இருவர் கட்டியணைக்கும் தூண்கள் அழகாக அமைந்த இந்த மகால் சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரு பகுதிகளைக் கொண்டது. தற்போது தர்பார் மண்டபம், நாடகசாலை மற்றும் அந்தப்புறம் என சில பகுதிகளே எஞ்சியுள்ளன.
 
நாடக சாலையின் மேற்புறம் மன்னர் குடும்பப் பெண்கள் அமர்ந்திருப்பதை கீழே உள்ளவர்கள் பார்க்கமுடியாது. ஆனால், மேலிருந்து கீழே நடப்பவைகளை துல்லியமாக பெண்களால் பார்க்கும் வகையிலே கட்டட அமைப்பு உள்ளது.
 
மகாலின் மேற்புறம் நாடகசாலைப் பகுதியில் சிறு சதுர வடிவ துளையும், அதில் கண்ணாடி பதித்தும் காணப்படுகிறது. திருடன் ஒருவன் தனது திறனை காட்ட மன்னரிடமே சவால் விட்டு அரண்மனைக்குள் புகுந்ததை நினைவூட்டுவதாக அந்த துளை இருப்பதாக கூறப்படுகிறது.

அரண்மனையின் வாயில் நவபத்கானா தெருவிலே இருந்தது. ஆனால் தற்போது அது அழிந்துவிட்டது. அரண்மனையைச் சுற்றிய சுற்றுச்சுவர் பெருமழையால் கி.பி.1873 -ஆம் ஆண்டு இடிந்துள்ளது.
 
ஆங்கிலேயர் காலத்தில் சென்னை ஆளுநராக இருந்த நேப்பியார் என்பவரால் கி.பி.1868-ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் படைகள் தங்குமிடமாகவும், காகித ஆலையாகவும் இது இருந்தது. பின்னர் நெசவுப் பட்டறையாகவும் இருந்துள்ளது.
 
1970 -ஆம் ஆண்டு முதல் ராமநாதபுரம், மதுரை மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டுள்ளன. தற்போது இங்கு தொல்லியல் துறையும், பத்திரப்பதிவு அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
 
அரண்மனை முன்பு திருமலை நாயக்கர் சிலையும், சேதமடைந்த எல்.கே.டி. பூங்காவும் உள்ளன. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடந்த போது இம்மகால் தூண்கள் சீரமைக்கப்பட்டன. அதன்பின்னர் கடந்த 1997 மற்றும் 2004, 2009 என தொடர் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
தென்னிந்தியாவிலேயே இங்குதான் ஒளியும், ஒலியும் காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அது மீண்டும் கடந்த 2009 -ஆம் ஆண்டு மறு சீரமைக்கப்பட்டது. ஆங்கிலம், தமிழில் ஒளிபரப்பாகும் இந்த காட்சி மதுரையின் வரலாறு, கண்ணகி நீதி கேட்டது என பல சம்பவங்களை மின்னொளிக் காட்சி மூலம் விளக்குவதாக உள்ளது. பிரதான பகுதியில் மன்னர் அமர்ந்த சிம்மாசனம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
மகாலின் அந்தப்புரம் கட்டடத்தில் தென்னிந்திய அளவிலான கல்வெட்டு மையம் அமைக்கப்பட்டது. ஆனால், போதிய பராமரிப்பின்றி தற்போது அது பொலிவிழந்துவிட்டது. அதேபோல அப்பகுதியில் கல்வெட்டு காட்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
மகாலின் பராமரிப்பு தொல்லியல் துறையிடமும், சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் பெற்று அனுமதிக்கும் பொறுப்பு சுற்றுலாத்துறையிடமும் உள்ளது. மகாலின் முன்பகுதியான எல்.கே.டி. பூங்கா பராமரிப்பை தற்போது மாநகராட்சி ஏற்றுள்ளது.
 
இம் மகால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தென் கிழக்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

-வ.ஜெயபாண்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com