இயற்கை அழகு கொழிக்கும் வயநாடு!

எல்லோருக்கும் தெரிந்த ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஏலகிரி தவிர, தெற்கே கேரள மாநிலத்தில் "வயநாடு' என்று ஓர் அழகான மலைப் பிரதேசம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
இயற்கை அழகு கொழிக்கும் வயநாடு!

எல்லோருக்கும் தெரிந்த ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஏலகிரி தவிர, தெற்கே கேரள மாநிலத்தில் "வயநாடு' என்று ஓர் அழகான மலைப் பிரதேசம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்காது.  கடவுள் உருவாக்கிய மாநிலம் கேரளம் என்பார்கள்.  இயற்கை அழகு அங்குலம் அங்குமாக இடம் பிடித்திருக்கிற ஓர் இடம் உண்டு என்றால் அது வயநாடு என்று கண்ணைத் திறந்துகொண்டு சொல்லிவிடலாம்!

வயநாடு முன்பு கோழிக்கோடு மாவட்டத்தோடு இணைந்திருந்தது. இப்போது தனி மாவட்டமாகிவிட்டது.  கல்பெத்தா என்ற இடம் மாவட்டத் தலைநகர். வழி எல்லாம் இயற்கை அழகு சொட்டும் பச்சைப் பசேல் காட்சிகள்.   காபியும், தேயிலையும், குறுமிளகும் இங்கே செழிப்புக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.  முன்பு அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சும். கொசுக்கள் கோலாகலமாகத் திரிந்து, கொத்தித் தொலைக்கும். இன்று அவை எல்லாம் காலத்தின் போக்கில் மறைந்து போய்விட்டன.  இன்றைக்கு வயநாட்டில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குப் பயணம் செய்யும் எவரும், லக்கிடியில் துள்ளியோடும் மான்கள் பார்க்கலாம். சலசலக்கும் நீரோடையை ரசிக்கலாம்.  2100 அடி உயரம். ட்ரெக்கிங் எனப்படும் மலையேறுதல் இங்கே இளைஞர்களுக்கு சவால். சுல்தான் பத்தேரி (திப்பு சுல்தான் இந்த இடத்துக்கு வந்ததால் ஏற்பட்ட பெயர்), மீனங்காடி, வைத்திரி (இங்கே இருக்கும் ரிசார்ட்டுகளில் தங்க வேண்டுமானால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்!) கல்பெத்தாவில், வணிகக் கடைகள் பிரம்மாண்ட கட்டடங்களில் இயங்குவதைப் பார்த்தால், "இது ஒன்றும் பழைய வயநாடு அல்ல!' என்று ஆர்ப்பரிக்கிறதைக் கேட்க (பார்க்க!) முடியும்.   முன்பு ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல ஜீப்புகள் மட்டுமே.  இன்று ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள்.  வழுவழு சாலைகள்.  பறக்கும் வாகனங்கள்!

"இங்கே சுற்றுச் சூழலைக் கெடுக்காத வகையில் சுற்றுலா மையங்கள் அமைந்திருக்கின்றன. கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களும் 20 சதவிகிதத்துக்கு மேல் வசிப்பதால், இந்துக்களுடன் ஒட்டி உறவாடும், நிகழ்ச்சிகளில் ஒன்றிணைந்து பங்கு கொள்ளும் இயல்பான நிலைமை நிலவி வருவதை ரசிக்கலாம். வய நாட்டின் மொத்த பகுதியில் இருபத்தாறு சதவிகிதத்துக்கு மேல் காடுகள்தாம்!'' என்கிறார் சுற்றுலா வளர்ச்சியில் ஆர்வம் காண்பிக்கும் வி. ராதாகிருஷ்ணன்.  (இவர் வைத்திருக்கும் இசைக்குழு ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்படப் பாடல்கள் வழங்கி வருகிறது!)  

இங்கே சுற்றுலா செல்ல விரும்புகிறவர்கள் பார்க்கவும், ரசிக்கவும் ஏராளமான இடங்கள்!  செம்ப்ரா உச்சியே ஒரு நாள் சுற்றுலாத் தலம். கிட்டத்தட்ட 5000 படிகள். 

இதன் மேலே ஏரி! நீலி மலை, மீன்முட்டி அருவி, சேதாலயம் அருவி, 1700 மீட்டர் உயரத்தில் ஏறி, பட்சி பாதாளம்சென்றால் ஆழமான குகைகளில் வகை வகையான பறவைகள், மிருகங்களைக் காணலாம். பானாசுர சாகர அணை (ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய இயற்கை அணைக்கட்டு), சிறுத்தைகளின் இடமான கடுவாக்குழி என்று வெளியே இறங்கினால் நம்மை ஈர்த்து இழுக்கும் வெளியழகுக் காட்சிகள். அம்பலவயல் அருகே சீங்கோரி மலை.  உச்சியைப் பார்த்தால் "எப்போ விழுவாரோ?' என்று பாடத் தோன்றும்.   அந்தப் பாறை அப்படித் தவம் செய்வது போல் நிற்கிறது!

வனவிலங்குக் காட்சிகள் என்றால் இருக்கவே இருக்கின்றன முத்தங்கா வனவிலங்கு சரணாலயம், தோல்பெட்டி வனவிலங்கு சரணாலயம் என இரண்டு சரணாலயங்கள்.  முத்தங்காவில் மயில், யானை, மான், காட்டெருது எல்லாம் இருக்கட்டும்.  ராட்சஷ வெளவால்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

இங்கே அசலான மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள்.  குருவா தீவு 950 ஏக்கர். இங்கேயும் மலைவாழ் மக்களை அவர்கள் அசலான வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கலாமாம்!  பார்க்க அனுமதி பெற வேண்டுமானால், வனச்சரக வார்டன் வரம் தர வேண்டும்!  ஏனென்றால் அவர்கள் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை வாழ்வதைக் குலைப்பதையோ, அவர்கள் கலாசாரத்தில் கைவைப்பதையோ அரசு அனுமதிப்பதில்லை.  

பாரம்பரிய சுற்றுலாக் காட்சித் தலங்கள் என்று, சுல்தான் பத்தேரியில் ஜெயின் கோயில், எடக்கல் குகைகள், வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், முனியரா என்ற இடத்தில் முன்னோர்கள் மறைந்த போது, நம் முதுமக்கள் தாழி போல, அவர்களைப் புதைத்த பிரம்மாண்ட மண்பாண்டங்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூங்கில் வடிவமைப்பில் தேர்ந்த கைவினைக் கலைஞர்களின் "உறவு' என்ற தொண்டார்வ அமைப்பு மற்றும் "செயின் ட்ரி' பகுதியை நீலிமலையிலிருந்து பார்க்கலாம். இங்கிருந்துதான் "ட்ரெக்கிங்' தொடங்குகிறது. (செயின் ட்ரி- கதை கீழே, இறுதியில்.)  லூர்து மாதாவுக்கான  பள்ளிக்குன்னு சர்ச், 300 ஆண்டுகள் பழைமையான கோரோம் மசூதி, பல ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரிலிருந்து சமையல் கலைஞர்களாக வந்த பிராமணர்கள் வசிக்கும் பைங்கத்தேரி அக்ரஹாரம், மானந்தவாடியில்,1805-இல் பிரிட்டிஷாருடன் போரிட்ட மன்னன் பழசி ராஜாவின் நினைவிடம், புல்பள்ளி குகைகள் (புல்பள்ளி குகைகளில்தான் பழசி ராஜா பிரிட்டிஷ் படைகள் வந்து கைது செய்வது வரை தங்கியிருந்தார். 

குரிச்சர் என்ற வனவாசிகள் அம்பு-வில் வைத்து ராஜாவுக்கு ஆதரவாக, கொரில்லா போர் நடத்தியிருக்கின்றனர்.)  வள்ளியூர் கோயில், சீதை-லவ-குசர் கோயில், த்ரி செல்லேரி கோயில், பிரம்மாவே கட்டியதாகச் சொல்லப்படும் திருநெல்லி சிவன் கோயில், தட்சிண கங்கை எனப்படும் பாப நாசினி (இங்கே இருக்கும் விஷ்ணு கோயிலில், நம்பிக்கையுள்ளவர்கள் முன்னோருக்கும், மறைந்தவர்களுக்கும் காரியங்களைச் செய்கிறார்கள்). 15-16 கி.மீ. தூரம் அடர்ந்த காடுகள். 

அவ்வப்போது யானைகளும் நம்மிடம் வந்து நலம் விசாரித்துவிட்டுப் போகும்.  பாழடைந்த ஜெயின் கோயில் மண்டபங்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆய்வுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.  அங்கே வலுவான ஜெயின் ஆதிக்கம் இருந்திருக்கிறது.  இப்போதும் பல நில உரிமையாளர்கள் கவுண்டர் என்று அழைக்கப்பட்டாலும், ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  இதன் அருகே இந்துக் கோயில் இருந்திருக்கிறது.  அங்கேதான் திப்பு சுல்தானின் படைகள் தங்கியிருந்தனவாம். 

பொழுது போக வேண்டும் என்றால், பூக்கோடு ஏரி என்ற இயற்கையாக உருவான ஏரியில் படகோட்டலாம். சூஜிபாரா அருவியை "சென்டினல் வாட்டர் ஃபால்ஸ்' என்று அழைக்கிறார்கள்.  வயநாட்டிலேயே மிகப் பெரியது. காந்தன்பாறா நீர்வீழ்ச்சி,  காராப்புழா அணைக்கட்டு, கரலாடு ஏரி எல்லாம்  பொழுதைப் போக்க உதவும் தலங்கள்.

வயநாடே செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை ஏர்-கண்டிஷன் செய்யப்பட்டது போன்ற குளுமையோடு இருப்பதால், அந்தச் சூழ்நிலை இயற்கையாக நம்மைக் கவருகிறது.  பச்சைப் பசேல் செடிகொடிகள், மரங்கள் என்று கண்களுக்கு விருந்து அளிக்கும் காட்சிகள் ஏராளம். இவையெல்லாம் "விடுமுறையைக் கொண்டாட வயநாடு வாங்க' என்று நம்மைச் சுண்டியிழுக்கின்றன.

எப்போ வயநாடு போகப் போறீங்க? என்று கேட்கும் முன், ஒரு குட்டிக்கதை (சரித்திரம்தான்!) சொல்லிவிடுகிறேன்: பைகஸ் மரத்தை ஒரு சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்.  உள்ளூர் தகவல்படி, கரிந்தண்டன் என்ற ஓர் ஆதிவாசி இளைஞன் இடக்கு மடக்கான பாதையில் ஒரு பிரிட்டிஷ் எஞ்சினீயரை வழி காட்டி வயநாட்டுக்கு அழைத்துச் சென்றான்.  அதற்கான பெருமை தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அந்த பிரிட்டிஷ் அதிகாரி, தன் வழிகாட்டியைக் கொன்றான். அவனுடைய ஆவி அங்கே வந்து போனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தியது.  அதைக் கேள்விப்பட்ட ஒரு பூசாரி அந்த ஆவியை ஒரு சங்கிலியால் இந்த மரத்தில் பிணைத்துக் கட்டிவிட்டாராம்.  அதுதான் (செயின் ட்ரி) சங்கிலி மரம்! 

சென்னையிலிருந்து ஊட்டி வழியாகவும் வயநாடு செல்லலாம் (661 கி.மீ.) கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு வழியாக வயநாடு செல்ல 240கி.மீ. தூரம்தான். மைசூரிலிருந்து நஞ்சங்கூடு, குண்டல்பேட் வழியாகவும் வயநாட்டை அடையலாம். கோழிக்கோட்டிலிருந்து பஸ் வழியாகவும் வயநாடு அடையலாம்.
-சாருகேசி  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com