கொலு, கொண்டாட்டம், கோலாகலம்!

இது நவராத்திரி சீஸன். வீதிகளில், விற்பனைக்குப் புதிய புதிய பொம்மைகள். வீடுகளில் பொம்மைக் கொலு, சிறந்த கொலுவுக்குப் பரிசு என்று ஊரே
கொலு, கொண்டாட்டம், கோலாகலம்!

இது நவராத்திரி சீஸன். வீதிகளில், விற்பனைக்குப் புதிய புதிய பொம்மைகள். வீடுகளில் பொம்மைக் கொலு, சிறந்த கொலுவுக்குப் பரிசு என்று ஊரே
அமர்க்களப்படுகிறது.  சிலர் வீட்டில் இருக்கும் பொம்மைகளை விட்டத்தில் இருந்து இறக்கி, தூசி துடைத்து,  படிக்கட்டுகள் அமைத்து அழகாக அடுக்கி
வைத்துவிடுவார்கள். கற்பனை வளம் மிகுந்தவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டு, "தீம்' உருவாக்கி, இந்த வருடம் "திருக்கல்யாணம்', இந்த வருடம் "சுற்றுச் சூழல்
பாதுகாப்பு' என்று  தூள் கிளப்புவார்கள்.    

சென்னை, தியாகராய நகர் ஜீவா பூங்கா அருகே இருக்கும் "தேஜஸ்' என்ற அமைப்பு, எந்தப் பொருள் கொடுத்தாலும் தங்க முலாம் பூசிவிடுகிற கெட்டிக்காரர்கள் நிறைந்தது. கோயில்கள் பலவற்றில் இவர்கள் பணி பிரமிக்க வைத்திருக்கிறது.  (இப்போது தில்லி மலை மந்திர் தேருக்குத் தங்க முலாம் பூசி வருகிறார்கள்!). இவர்கள் தங்கள் அலுவலகத்தில் வைத்திருக்கும் கொலு வித்தியாசமானது.  திகைப்பூட்டுவது.  பிரம்மாண்டமானது.  காரணம், திருவிளையாடல் புராண நிகழ்ச்சிகள் முழுவதையும் 64 சின்னச் சின்னக் கொலுவாக அறை முழுக்க அலங்கரித்து வைத்திருக்கிறார்கள்! 

"வருடா வருடம் "ஸ்வர்ண கொலு' என்று கொண்டாடி வருகிறோம்.  இந்த வருடம் ஆடல் அரசனான ஈசனின் 64 திருவிளையாடல்களைக் கருவாகக் கொண்டு கொலு வைத்துக் கொண்டாட முடிவு செய்தோம்.  அந்த வகையில் பல நூல்களைப் படித்து ஆராய்ந்து குறிப்புகள் எடுத்துக்கொண்டோம். பல வகையான பொம்மைகளைப் பயன்படுத்தியிருக்கிறோம். மண், மரம், பிளாஸ்டிக், காகிதம், களிமண், பாலிமார் க்ளே, பொம்மைகள் இவை. நாங்களே ஆடைகளைத் தயாரித்து, நகைகளைப் போட்டு, தலையில் முடியெல்லாம் வைத்துத் தயார் செய்தோம். சில பொம்மைகள் மட்டுமே களிமண்.  

கர்நாடக இசைப்பாடகியும், சாகித்தியகர்த்தாவுமான என் மாமியார் டி. பட்டம்மாள் எழுதி வைத்திருந்த பாடல்களைப் புரட்டியபோது, தற்செயலாக சிவபெருமானின் திருவிளையாடல்கள் பற்றி அறுபத்து நான்கு பாடல்கள் கிடைத்தன.  ஆகவே இந்த வருடம் கொலுவுக்கு "தீம்' திருவிளையாடல் புராணம் என்று தீர்மானித்தேன்!'' என்கிறார் தேஜஸின் சாந்தி. 

"அம்மாவுக்குக் கூடவே ஒத்துழைத்தவர் இன்னொரு பெண். அவர் பெயர் பிரபா!'  என்கிறார் தேஜஸின் திவ்யா.  இவர் சாந்தியின் மகள்.  அறுபத்து நாலு தடுப்புகளில், அறுபத்து நாலு திருவிளையாடல் நிகழ்ச்சிகளையும் அழகாகப் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.  காலை பதினோரு மணி முதல் மாலை ஆறு மணி வரை பார்வையாளர்கள் வந்து பார்த்து ரசிக்கலாம்.

"சில திருவிளையாடல்களுக்கு பொம்மை சேகரிக்கக் கொஞ்சம் சிரமப்பட்டோம். மீனாட்சி திருக்கல்யாணம் எல்லாம் சற்று வேலை வாங்கியது. பெண்  பன்றியின் பத்து குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் நிகழ்வுக்குப் பன்றி பொம்மை வேண்டுமே! தேடிக் கண்டுபிடித்து உருவாக்கினோம். குண்டோதரன் பொம்மையும் அப்படித்தான். அப்புறம் சமாளித்துவிட்டோம்' என்றார் சாந்தி. (இலையும், பட்சணங்களும் அசலாக இருப்பது போல் செய்திருப்பது தனி நேர்த்தி.)

விநாயகர் மீது துதிப்பாடல் தவிர, 64 பாடல்களும் சிவ பெருமானின் லீலைகள் ஒவ்வொன்றையும் விவரிக்கும் பாடல்களாக அமைந்திருக்கின்றன. இதைக்
கையேடு போன்ற ஒரு புத்தகமாக சாந்தி வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறார்.      

சரி, என்னென்ன திருவிளையாடல்கள் என்று தெரியுமா?  இதோ, பட்டியல்:
1. இந்திரன் பழி தீர்த்த படலம்  2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்  3. திருநகரம் கண்ட படலம் 4. தடாதகைப் பிராட்டியார் அவதார படலம் 5. திருமணப் படலம்   6. வெள்ளியம்பலத்தில் திருக்கூத்தாடிய படலம்  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் 8. அன்னக்குழியும் வைகையும் தோன்றிய படலம்  9. ஏழு கடல் அழைத்த படலம்  10. மலையத்துவஜனை அழைத்த படலம்  11. உக்கிரபாண்டியன் அவதார படலம்  12. உக்கிரபாண்டியனுக்கு வேல், வளை, செண்டு கொடுத்த படலம்  13. கடல் வற்ற வேல் விட்ட படலம் 14. இந்திரன் முடி மேல் வளை எறிந்த படலம் 15. மேரு மலையை செண்டால் அடித்த படலம்  16. வேதத்துக்குப் பொருள் அருளிய படலம்  17. மாணிக்கம் விற்ற படலம். 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்  19. நான்மாடக் கூடல் ஆன படலம்  20. எல்லாம் வல்ல சித்தரான படலம்  21. கல் யானைக்குக் கரும்பு கொடுத்த படலம் 22. யானை எய்த படலம் 23. விருத்த குமார பாலரான படலம்  24. கால் மாறி ஆடின படலம்  25. பழியஞ்சின படலம்  26. மாபாதகம் தீர்த்த படலம்  27. அங்கம் வெட்டின படலம்  28.  நாகம் எய்த படலம்  29. மாயப் பசுவை வதைத்த படலம்  30. மெய்க் காட்டிய படலம் 31. உலவாக்கிழி அருளிய படலம்  32. வளையல் விற்ற படலம்  33. அட்டமா சித்தி உபதேசித்த படலம்  34. விடை இலச்சி இட்ட படலம் 35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்  36. ரசவாதம் செய்த படலம் 37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்  38.  உலவாக்கோட்டை  அருளிய படலம் 39.மாமனாக வந்து வழக்குரைத்த படலம்  40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்  41. விறகு விற்ற படலம்  42. திருமுகம் கொடுத்த படலம்  43. பலகை இட்ட படலம்  44. இசை வாது வென்ற படலம்  45.  பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்த படலம்  46. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்  47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்  48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்  49. திரு ஆலவாயான படலம்  50. சுந்தரப் பேரம் பெய்த படலம்  51. சங்கப் பலகை கொடுத்த படலம்  52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் 53. கீரனைக் கரையேற்றிய படலம்  54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்  55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்  56. இடைக்காடன் கணக்கு தீர்த்த படலம் 57. வலை வீசின படலம் 58. வாதவூரருக்கு உபதேசித்த படலம்  59. நரி பரியாக்கிய படலம்  60. பரி நரியாக்கிய படலம்  61. புட்டுக்கு மண் சுமந்த படலம் 62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்  63. சமணரைக் கழுவேற்றிய படலம்  64. வன்னியும், கிணறும், லிங்கமும் அமைத்த படலம்  (அப்பாடா!)
தேஜஸுக்குப் போனால், இவை எல்லாம் இருக்கின்றனவா என்று பாருங்கள்!  பார்த்துவிட்டுப் பாராட்டுங்கள்!
-சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com