நரசிம்மரின் 16 தோற்றங்கள் கொண்ட கோயில் சித்ரா மாதவன் 

சென்னை பூந்தமல்லியிலிருந்து திருமழிசை செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம் சித்தர்காடு. இந்த ஊரில் வரலாற்றுப் புகழ்மிக்க கோயில்கள் உள்ளன.
நரசிம்மரின் 16 தோற்றங்கள் கொண்ட கோயில் சித்ரா மாதவன் 

சென்னை பூந்தமல்லியிலிருந்து திருமழிசை செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம் சித்தர்காடு. இந்த ஊரில் வரலாற்றுப் புகழ்மிக்க கோயில்கள் உள்ளன.

அவற்றில் ஒன்று சுந்தரராஜ பெருமாள் கோயில்.  இக்கோயிலின் அருகே கண்டெடுக்கப்பட்ட  சித்தர்களின் சிற்பங்கள் மூலம், ஒரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த வனமாக இருந்தது என்றும், எண்ணற்ற சித்தர்கள் இங்கு தியானம்-யோகாசனம் போன்றவற்றை செய்துவந்துள்ளனர் என்றும், அதன் காரணமாகவே இவ்வூர் சித்தர்காடு எனப் பெயர் பெற்றுள்ளது என்றும் அறியமுடிகிறது. 

சுந்தரராஜ பெருமாள் கோயிலின் நுழைவாயிலில் ஐந்து அடுக்கு கோபுரம் உள்ளது.  முதல் அடுக்கில் உள்ள கங்காதேவி-யமுனாதேவி சிற்பங்கள் காண்போரைக் கவர்கின்றன. உள்ளே நுழைந்ததும் பெரிய மண்டபம் காணப்படுகிறது. முக்கிய சந்நிதியின் முன்னால், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன்கூடிய  அனந்த சயனப்பெருமாள் சிறிய வடிவில் காட்சி தருகிறார். அவருடன் ஒருபுறம் ரிஷிகளும், மறுபுறம் திருப்பள்ளியெழுச்சி பாடும் தெய்வீக இசைக்கலைஞர்களும் காணப்படுகின்றனர். 

பிரதான கருவறையில் விஷ்ணு, சுந்தரராஜ பெருமாளாக ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.  அதை அப்படியே பிரதி எடுத்தாற்போன்று, உற்சவமூர்த்தியின் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. நடனம் ஆடும் கிருஷ்ணரின் சிற்பத்தையும் இங்கே காணலாம்.  பன்னிரு ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,  நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.  இவ்வூரின் அருகில்தான் திருமழிசை ஆழ்வாரின் பிறந்த ஊரான திருமழிசை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்வார்களுடன், வைணவ ஆசார்யர்களின் முன்னோடியான ராமானுஜ ஆசார்யரின் சிற்பமும் இங்கு உள்ளது.

இக்கோயிலின் மிக முக்கியமான அம்சம், 16 தோற்றங்களை உடைய நரசிம்மர் சிற்பங்கள்தான். யோக நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட 16 விதமான நரசிம்மர் உருவங்கள் மண்டபத்தின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. 

லட்சுமிக்கு இத்தலத்தில் சுந்தரவல்லி தாயார் என்று பெயர்.  தனித் தனி சந்நிதியில் சுந்தரவல்லி தாயார், ஆண்டாள்  அருள்புரிகின்றனர்.  கருடகோடி சித்தர் என்பவருக்கும், இக்கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆண்டாள் கோயில் மண்டபத்தின் தூண்கள் ஒன்றில் கருடகோடி சித்தரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. 

பாண்டியர்கள் காலம் -விஜயநகர வம்சத்தினர் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் - கோயில் - சிற்பங்கள் ஆராய்ச்சியாளர்.
தமிழில்: ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com