பிடித்த பத்து: செடிகளைப் பெயரிட்டு அழைப்பேன்! 

மருத்துவர் சுதா சேஷய்யன் சிறந்த பேச்சாளர்; சென்னை மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர்; பிரிட்டானிகாவின் தமிழ் என்சைக்ளோபீடியா ஆசிரியர் குழுவின் முதல் பெண் மருத்துவர்.
பிடித்த பத்து: செடிகளைப் பெயரிட்டு அழைப்பேன்! 

மருத்துவர் சுதா சேஷய்யன் சிறந்த பேச்சாளர்; சென்னை மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர்; பிரிட்டானிகாவின் தமிழ் என்சைக்ளோபீடியா ஆசிரியர் குழுவின் முதல் பெண் மருத்துவர். தனக்கு "பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார்: 
நடராஜர் திருவடிவம்: குழலூதும் கண்ணன், ஆஞ்சநேயரைத் தழுவும் ராமன், லேசாகக் கண்மூடி தியானிக்கும் தட்சிணாமூர்த்தி, மெல்லிய மந்தஹாசம் காட்டும் அம்பிகை என்று ஒவ்வொரு திருமேனியும் கொள்ளை அழகு. அழகுக்கெல்லாம் அழகு நடராஜத் திருமேனி. குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பு, பனித்த சடை, சற்றே வளைந்த தூக்கிய திருவடி, திருவடியைச் சுட்டிக்காட்டும் வீசுகரம். என பிரபஞ்சத்தின் அசைவுகள் அனைத்துக்கும் அகலிடமாய்த் திகழும் நடராஜ வடிவம் எனக்கு மிக மிகப் பிடிக்கும். என் வீட்டுக்குள் நுழைந்தவுடன் காட்சி கொடுப்பவர் அவர்தாம்!
ராமாயணம்: இந்திய இலக்கியங்கள் யாவும் படிக்கப் படிக்கப் புதிய புதிய பரிமாணங்களைத் தருகிற பொக்கிஷங்கள். அதிலும், ராம கதை. வடமொழி, தமிழ், ஹிந்துஸ்தானி, என இந்திய மொழிகளிலும் இருக்கிற ராமாயணங்களின் அழகுகளையெல்லாம் விவரிப்பதற்கு வார்த்தைகள் போதாது. நாட்டின் எல்லைகளைக் கடந்து, உலக முழுவதும் பரவிக் கிடக்கிற ராமாயணக் கூறுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் ராமாயணக் கதைகள், மிகத் தொலைவில் இருக்கும் நாடுகளிலும் ஏதோவொரு வகையில் தென்படும் ராமாயணச் சாரம் - தெரிந்து கொள்ளத் தெரிந்து கொள்ள பிரமிப்பைக் கூட்டுவிக்கும் ராம கதை பிடிக்கும். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் திகழும் கம்பராமாயணம் மிகவும் பிடிக்கும். மனித வடிவத்தில் ராமனாக நிற்பது சாக்ஷôத் சர்வேச்வரன் என்பதைக் கம்பர் காட்டும் அற்புதம்தான் என்னே!
திருவாசகம்: யாராவது தமிழ் இலக்கியம் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? பண்டைய காலம், இடைக்காலம், நவீன காலம் என்றும், கவிதை, காவியம், உரைநடை, இசைப்பாடல் என்றும் எல்லாமும் பிடிக்கும். ஆழ்வார் பாசுரங்களும் நாயன்மார் பாசுரங்களும் நிரம்பவே பிடிக்கும். மிக அதிகமாகத் திருவாசகம் பிடிக்கும். அப்பாவை நாற்காலியோடு சேர்த்துக் கட்டும் குழந்தையைப் போன்று, அன்பால் ஆண்டவனைக் கட்டிவிட்டு, "சிக்கெனப் பிடித்தேன், எங்கு எழுந்தருள்வது இனியே?' என்று கேட்கிறாரே மாணிக்கவாசகர். அந்த பக்திக்கும் அன்புக்கும் நயத்திற்கும் நிகராக எதைச் சொல்வது!
செடிகள்: பூக்கள் பூத்திருந்தால் அழகு. ஆனால், பூக்களே இல்லாமல், பச்சையாகக் காட்சி தரும் இலைகளில்தாம் எத்தனை வர்ணஜாலம்! இயற்கையின் அழகுதான் என்னே! அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம் என்று மகாகவி பாரதியார் சொன்னது, ஒற்றை நிறத்தில் ஓராயிரம் படிவங்கள் காட்டும் இலைகளின் ஜாலத்தைக் கண்டுதான் இருக்கவேண்டும். எங்கள் வீட்டுச் செடிகளுக்குப் பெயர்கள் உண்டு. எனக்கும் அவர்களுக்கும் மட்டுமே தெரிந்த உறவு அது. சற்றே உயரமாக இருக்கும் துளசிச் செடிக்குத் துளசி என்றுதான் பெயர்; அவளுக்கருகில் குட்டையாக இருப்பவள், பிருந்தா; சற்றே தள்ளி, வயலெட் நிறப் பூக்களோடு இருப்பவள், குட்டி பிருந்தூ; இப்படியே செம்பருத்தி, மருதாணி, சூரியகாந்தி, நித்திய கல்யாணி என்று எல்லாச் செடிகளுக்கும் ஏதாவதொரு பெயர் உண்டு. நேரம் கிடைக்கும்போது, அந்தப் பெயரைச் சொல்லி அவர்களிடம் பேசினால், இலைகளைச் சிலிர்த்துக் கொண்டு தலை நிமிர்த்தி நிற்கும் அழகைக் காண்பதற்குக் கண் கோடி வேண்டும்.
எங்கள் வீட்டுச் செல்லங்கள்: வீட்டு வாசலில் வந்து நிற்கும் பசுமாடு, தோட்டத்தில் குரல் கொடுக்கும் கிளி ஆகியவற்றைப் பிடிக்கும். 1970-71லிருந்து எங்கள் வீட்டில் செல்லங்கள் (நாய்கள்) உள்ளனர். முதன்முதலில் இருந்த செல்லத்தின் பெயர் அருண். இப்போது உள்ளவர்கள், ரகு, கல்யாணி, கோவிந்தன், வைஷ்ணவி ஆகியோர். இவர்கள் செய்கிற விஷமங்கள் சொல்லி மாளாது. இவர்களில் அதிதீவிர விஷமக்காரன் கோவிந்தன். 
மொழிகள், அவற்றின் பிரயோகங்கள்: எனக்குத் தெரிந்த மொழிகள் சிலவே. ஆனால், பற்பல விஷயங்களைப் படிக்கும்போது, உலக மொழிகள் அனைத்திலும், எப்படியெல்லாம் சொற்கள் உருவாகியுள்ளன என்பதை அறியும்போது மலைப்பாக இருக்கும்! மருத்துவத்தில் இருக்கும் சொற்களையும் இலக்கியத்தில் காணப்படுகிற சொற்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது, அவற்றுக்குள் இருக்கும் ஒற்றுமை வியக்க வைக்கும். ஒரேயொரு எடுத்துக்காட்டு. கால் மூட்டு, முழங்கால் மூட்டு என்கிறோமே, அதற்கான மருத்துவக் கலைச் சொல், "ஜீனு' (ஞ்ங்ய்ன்) என்பதாகும். அதையே நம்முடைய இலக்கியங்கள் "ஜானு' (த்ஹஹய்ன்) என்றழைக்கின்றன (ஆஜானுபாஹு). இத்தகைய பொருத்தங்களையும் ஒற்றுமைகளையும் மீண்டும் மீண்டும் அலசிப் பார்ப்பதும் ஆராய்வதும் எனக்குப் பிடிக்கும்.
பாடம் எடுப்பது, அதற்காகத் தயாரிப்பது: 1984 முதல் மருத்துவ மாணவர்களுக்கும் மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கும் பாடம் எடுக்கிற வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. பாடம் சொல்லிக் கொடுப்பது பிடிக்கும். அதைவிட, வகுப்புகளுக்காக ஆயத்தம் செய்து கொள்வது பிடிக்கும். ஏனென்றால், தெரிந்த பாடத்தைக்கூட, அவ்வப்போது வகுப்பெடுப்பதற்காக மீண்டும் படிக்கும்போது, புதிய கண்ணோட்டம் கிடைக்கும். 
ஊஞ்சல்: பழைய காலத்து மரச் சாமான்கள், அறைகலன்கள் பிடிக்குமென்றாலும், எனக்கு மிகவும் பிடித்தது ஊஞ்சல். ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு மெதுவாக ஆடுவது நிரம்பப் பிடிக்கும். இசை கேட்பது, கர்நாடக இசையும் பக்தி இசையும் பிடிக்கும். காரில் பயணிக்கும்போது தேவாரத் திருவாசகப் பாடல்களையும் ஊத்துக்காடு, முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், பாபநாசம் சிவன் போன்றோரின் பாடல்களையும் கேட்டுக் கொண்டே பயணிப்பது மிக மிகப் பிடிக்கும்.
ரட்யார்ட் கிப்லிங் கவிதைகள்: கவிஞர்கள் பலரின் கவிதைகளும் பிடிக்குமென்றாலும் ரட்யார்ட் கிப்லிங்கின் கவிதைகள்மீது எனக்குத் தனியான பிடிமானம் உண்டு. அவருடைய வரிகளும் சொற்களும் அப்படியே உள்ளுக்குள் புகுந்து உணர்வுக்குள் ஜாலம் செய்யும். 
பிடித்தவை பல: அப்பா-அம்மா, பெüர்ணமி நாளில் தங்கத் தாம்பாளமாகத் தகதகக்கிற முழு நிலா, கீழே நடக்கும் பரபரப்பையெல்லாம் கம்பீரமாக கவனித்துக் கொண்டிருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் கடிகாரம், குற்றால அருவியாகக் கொட்டும் அ.ச.ஞானசம்பந்தன் ஐயாவின் பேச்சு, ஒவ்வொரு வரியையும் அலசி ஆராயும் நீதியரசர் இஸ்மாயில் ஐயாவின் அணுகுமுறை, தலையைத் தலையை ஆட்டி ரசிக்கும் க.கு.கோதண்டராம ஐயாவின் ரசிகத்தன்மை, வானவரையன் வந்தியத்தேவனின் தொலைதூரப் பார்வையிலேயே பிரபஞ்ச ரகசியத்தைப் புரிய வைக்கும் கல்கியின் எழுத்துகள், என்னுடைய மாணவர்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், கணினியில் தமிழ் டைப் அடிப்பது, காஞ்சிபுரம் கைலசநாதர் கோவில், மெரீனாவின் நடைபாதை, திருவண்ணாமலை கிரிவலம்...... இன்னொரு "பிடித்த பத்து' பட்டியல் போடவா?
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com