விளக்குகள் அலங்கரிக்கும் மைசூர் தசரா - சாந்தகுமாரி சிவகடாட்சம் 

சூரிய உதயத்தின் ஆரம்பநிலை. தன் தலைவனின் வரவைக் கண்டு, கீழ்வான மங்கை, கன்னம் சிவக்க காட்சி அளிக்கிறாள்.
விளக்குகள் அலங்கரிக்கும் மைசூர் தசரா - சாந்தகுமாரி சிவகடாட்சம் 

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 15

சூரிய உதயத்தின் ஆரம்பநிலை. தன் தலைவனின் வரவைக் கண்டு, கீழ்வான மங்கை, கன்னம் சிவக்க காட்சி அளிக்கிறாள். அவ்வளவுதான், விடியலை உணர்த்த பறவைகள் கீச், கீச் என்று கத்தி, தங்கள் சிறகுகளை படபடவென்று அடித்து, மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கின்றது போல, நான் கைகளைத்தட்டி, வாவ் வாவ் என்று கூவி ஆர்ப்பரித்தேன், எதைக் கண்டு என்ற கேள்வி எழுகிறது அல்லவா!

விளக்கு வைக்கும் நேரத்தில் கண் இமைக்கும் நொடியில் சொல்லி வைத்தாற்போல, ஒரே நேரத்தில் தெருக்களின் இருபக்கங்களிலும், மரங்களிலும், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சதுக்கங்களிலும், அம்பா விலாஸ் என்கின்ற மைசூர் அரண்மனைக்கு இட்டுச் செல்கின்ற சாலைகளிலும், ஒளியைச் சிந்துகின்ற பலவிதமான வண்ணங்களைக் கொண்ட மின்சார பல்புகள் ஜொலிக்கத் தொடங்கின. சரங்களாக, பலவடிவங்களில் மனிதனுடைய அபார கற்பனை சக்தியை அவை வெளிப்படுத்த அதைப் பார்த்த நான் விடியலைக்கண்டு குதூகலிக்கும் பறவையானேன்.

தசராவின் ஆரம்பநாள் தொடங்கி விஜயதசமி வரை இப்படிப்பட்ட விளக்குகள் எங்கும் காட்சி அளிக்கின்றன. மைசூர் அரண்மனையை இந்த நாட்களில் ஒரு லட்சம் மின்சார பல்புகள் மாலை 7 மணி தொடங்கி இரவு 10 மணி வரை ஒளியூட்டி பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. 

"அம்மா துர்க்கையே, தீயவன் மகிஷாசுரனை அழித்து தருமத்தைக் காத்தவளே, எங்கள் மன இருளைப் போக்கி, அங்கே ஞானம் என்னும் ஒளிவிளக்கை ஏற்று'' என்று உணர்த்துவதுபோல இந்த விளக்குகள் ஏற்றப்படுகின்றனவோ என்று எண்ணி மகிழ்ந்தேன்.

"இருளை இருளால் விரட்டமுடியாது. ஒளியால் மட்டுமே அதைச் செய்யமுடியும். பகைமையை, பகைமையால் விரட்டமுடியாது. அது அன்பால் மட்டுமே முடியும்" என்று மார்டின் லூதர்கிங் சொன்னது எவ்வளவு உண்மை என்று இருளை விரட்டியது அந்த அதீதிய ஒளி வெள்ளம். மைசூர் தலைப்பாகை கட்டிய ஆண்கள், மைசூர் சேலைகளில் பெண்கள் என்று உள்நாட்டு ஜனம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தசராவைப் பார்க்க வந்திருந்த உல்லாசப்பயணிகளோடு வேற்றுமையை மறந்து அன்பை மூலதனமாக்கி பரிமாற்றம் செய்ததை நான் அங்கே தங்கியிருந்த நாட்களில் கண்டு மகிழ்ந்தேன்.

சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், தசரா பண்டிகையின் கொண்டாட்டங்கள் 15-ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட விஜயநகர ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு ராஜா வாடியார் அவர்களால் 1610-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தசரா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்று தொடங்கி இன்றுவரை வாடியார் ராஜாக்களின் வழித்தோன்றல்கள், தங்களை தெய்வமாகப் போற்றும் மைசூர் மக்களின் ஆதரவோடு கர்நாடக அரசின் உதவியோடு கலந்துகொள்வோர் களிக்க, பார்த்துப் பரவசம் அடையும் வகையில் தசரா கொண்டாட்டங்களை அரங்கேற்றுகிறார்கள். 

மைசூர் தசராவின் ஹைலைட் விஜயதசமி அன்று நடைபெறும் ஜம்போ சவாரியும், டார்ச்லைட் பேரேடுமாக இருக்கிறது. விஜயதசமி அன்று அரங்கேறும் இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் தேவையான டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்துவிடுவது மிகவும் அவசியமாகிறது.

விஜயதசமிக்கு முந்தைய நாட்களில் மைசூர் தசரா வழங்கிய பலவிதமான கேளிக்கைகளில் மூழ்கி நானும் என் கணவரும் ஆனந்தத்தின் எல்லைக் கோடுகளைக் கடந்தோம். ஒவ்வொரு இரவும் மைசூர் அரண்மனையில், இந்திய நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த இசை வல்லுனர்களும், நாட்டியக் கலைஞர்களும் தங்கள் திறமைகள் வெளிப்படுத்தி கூடியிருந்த மக்களை மகிழ்வித்தனர்.

காலை நேரங்களில் தசராவுக்காகவே நிர்மாணிக்கப்பட்ட பூக்களின் கண்காட்சியை குப்புனா (Kuppauna park) பார்க்கிலும், குத்துச்சண்டையை தேவராஜ் ஸ்டேடியத்திலும் கண்டு களித்தோம்.

தசரா லேசர் ஷோ, தசரா காத்தாடி திருவிழா, திரைப்பட விழா, உணவுத் திருவிழா, வளர்ப்பு பிராணிகளின் அணிவகுப்பு, விண்டேஜ் கார் ராலீஸ் என்று அட்டவணை போட்டு, அதன்படி ஒன்றையும் தவறவிடாமல் சென்று, கண்டு அனுபவித்தோம்.

மைசூர் அரண்மனைக்கு எதிர்புறம் இருந்த (Doddakere) டொட்டகரி மைதானத்தில் தசராவுக்காக நடத்தப்படும் பொருட் கண்காட்சியில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், கர்நாடகாவின் பல கிராமங்களில் இருந்தும் கைவினைப் பொருட்களைக் கொண்டு வந்து கடைவிரித்திருந்தனர். எதை வாங்குவது, வாங்காமல் விடுவது என்ற குழப்பத்தில் நான் மட்டுமல்ல, அங்கே வந்த அனைவரும் தவித்தனர்.

நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜயதசமியும் வந்து சேர்ந்தது. புத்தாடைகளை அணிந்துகொண்டு பொதுமக்கள் சாலைகளின் இருபுறமும் குழுமி இருந்தனர். நாங்கள் முன்னரே மைசூர் அரண்மனையின் வளாகத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளைப் பார்க்க நுழைவுச் சீட்டு வாங்கி இருந்ததால், எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தோம். அழகாக அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது 750 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்ட அம்பாரியில் தேவி சாமுண்டேஸ்வரி பவனி வந்தாள். அங்கே போடப்பட்டிருந்த மேடையின் அருகே யானை வந்தபொழுது அரச குடும்பத்தினரும், முதலமைச்சரும் தேவிக்கு மலர்களைத் தூவி வணங்க, ஊர்வலம் தொடங்கியது.

நாட்டுப்புறக் கலைஞர்களின் நடனம், பேண்ட் வாத்தியங்களின் முழக்கம், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, ஒட்டகங்களின் மீது சவாரி செய்தவண்ணம் வந்த பிரமுகர்கள், 46 அலங்கார ஊர்திகள் என்று கண்கொள்ளாக் காட்சிகள், வெளியே கூடியிருந்த மக்களையும் மகிழ்வித்தது. ஊர்வலம் 5 கிலோமீட்டர் தொலைவு பயணித்து கடைசியாக "வன்னி மண்டபத்தை' அடைந்தது. அங்கே இருந்த வன்னி மரத்திற்கு பூசை நடந்தது. மகாபாரத காவியத்தின்படி பாண்டவர்கள், மறைநிலை வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்திற்குக் கீழ் புதைத்து வைத்தார்களாம். அதனால் தங்களுடைய போர் ஆயுதங்களையும் மைசூரை ஆண்ட மன்னர்கள் வன்னி மரத்திற்கு கீழ் வைத்து, போரில் வெற்றிபெற வணங்கியிருக்கிறார்கள். அந்த பாரம்பரியம் மாறாமல் வன்னி மர பூசையோடு தசரா ஊர்வலம் முடிவடைந்தது. வன்னி மண்டபத்தில், இரவு அரங்கேறிய டார்ச்லைட் பரேடில் பேண்டு வாத்தியங்களின் முழக்கம், தீப்பந்தங்களை ஏந்திய வீரர்கள் செய்த சாகசங்கள், குதிரைகளின் அணிவகுப்பு, பைக்கில் வந்த கலைஞர்கள் செய்து காட்டிய வீர செயல்கள், வானவேடிக்கைகள் என்று மைசூர் தசரா நம்மை அசர வைக்கிறது. 
- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com