பிடித்த பத்து: நீலநிறம் ரொம்பப் பிடிக்கும்! 

சமயபுரம் மாரியம்மனின் அருள் இருப்பதால்தான் என்னால் இந்த அளவிற்கு வாழ முடிகிறது
பிடித்த பத்து: நீலநிறம் ரொம்பப் பிடிக்கும்! 

கின்னஸ் பட்டம் வாங்கியவரும், முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய செஃப் ஆன தாமு தனக்கு "பிடித்த பத்து' பற்றி கூறுகிறார்::
 கோயில்: சமயபுரம் மாரியம்மனின் அருள் இருப்பதால்தான் என்னால் இந்த அளவிற்கு வாழ முடிகிறது. மாதம் தவறாமல் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க சென்றுவிடுவேன். அந்த அம்மனை நினைக்கும் போதே என்னை அறியாமல் என் கைகள் வணக்கம் என்பது போல் குவிந்து விடும். என்னை பொறுத்தவரை அம்மா தான் எனக்கு எல்லாமே.
 இடம்: ஆண்டுதோறும் நான் சுமார் ஒரு வாரம் செல்லும் இடம் கொடைக்கானல். என்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையே மறக்காமல் செல்ல நேரம் குறிக்கும் இடம். பத்து நாட்கள் என்று முடிவுசெய்து அது பின்னர் ஒரு வாரம் என்று ஆகி பிறகு 5 நாட்கள் என்று குறுகிவிடும். ஆனால் அந்த சீதோஷண நிலை திரும்பி வரவிடாமல் செய்யும். சென்னையில் உள்ள வேலைப் பளு காரணமாக வந்தே சேரவேண்டும் என்பதால் வருவேன்.
 சாப்பாடு: எனக்கு அசைவம் , சைவம் என இரண்டும் பிடிக்கும். சாதாரண சாப்பாட்டில் இருந்து கல்யாண சாப்பாடு வரை ஒரு பிடி பிடிப்பேன். அசைவ உணவு என்று வந்துவிட்டால் பல்வேறு வகையான உணவுகளை ருசித்து சாப்பிடுவேன். அதிலும் மட்டன் பிரியாணியை சுவைத்து சாப்பிடுவேன். எது என் தட்டில் வந்து விழுகிறதோ அது சுவையாக இருந்தால் அதை மகிழ்ச்சியாக சாப்பிடுவேன்.
 மகள்: என் மகள் அக்க்ஷயா தான் எனக்கு எல்லாமே. அவரது சாதுவான பேச்சுமும், இனிமையாக பழகும் பண்பும் எல்லோரையும் கவரும். அவர் வீட்டில் இருந்துவிட்டால் நாங்கள் இருவரும் இணைந்து அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. அந்த அளவிற்கு வீடு ஆலோகலப்படும்.
 வண்ணங்கள்: வானவில்லைப் பிடிக்கும் என்று கூறுபவர்கள் கூட அதில் உள்ள ஒரு வண்ணத்தை தேர்ந்தெடுங்கள் என்றால் கொஞ்சம் யோசிப்பார்கள். காரணம் , ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு மனநிலையை பிரதிபலிக்கும். "நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்' என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு. அது உண்மைதான். மெரூனும் பிடிக்கும் என்றாலும் நீல நிறம் என்னை கவர்ந்த அளவிற்கு மற்ற வண்ணங்கள் கவருவதில்லை.
 திரையரங்கம்: நான் திரைப்படங்களை அதிகமாக திரையரங்கில்தான் சென்று பார்ப்பேன். காரணம் பெரிய திரையில் படங்களை பார்க்கும்போது ஏற்படும் சந்தோசம் சின்னத்திரையில் கிடைப்பதில்லை. வெளி ஊர், வெளிநாடு என்று நான் போய் வந்தாலும் எனக்கு சந்தோசத்தை தரும் திரையரங்கம் நம் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கம்தான். அங்கு சுத்தம், ஒளி, ஒலி என்று கண்ணுக்கும் காதுக்கும் நிறைவை தரும். அதற்காகவே நான் இந்த திரையரங்கிற்கு செல்வேன்.
 ஓட்டல்: என்னதான் சமையல் கலையில் நான் நிபுணன் என்றாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவதிலும் நான் மாஸ்டர்தான். எவன் ஒருவன் மற்றவர்கள் செய்வதை ரசிக்கிறானோ அவன் செய்வதில் கைதேர்ந்திருப்பான். அதே முறையில் பல வெளிநாட்டு ஓட்டல்களில் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன். சென்னை தியாகராஜ நகரில் உள்ள கிரிட் கிராண்ட் டயஸ் என்ற ஓட்டலில் தான் சாப்பாடு சிறப்பாக இருக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று சாப்பிடுவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.
 செஃப்: மும்பை தாஜ் ஓட்டலில் செஃப் ஆக இருந்த சதீஷ் அரோரா தான் எனது காட் பாதர் (எர்க் ஊஹற்ட்ங்ழ்). பல்வேறு புதிய வகை சாப்பாட்டு வகையறாக்களை எனக்கு கற்றுக் கொடுத்தவர். தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். பண்பாளர், பாசம் மிகுந்தவர்.
 காய்கறி-பழங்கள்: வெண்டைக்காயில் பல்வேறு வகையான உணவுகளை சமைக்க பிடிக்கும். ஏன், அந்த காய் ரொம்பப் பிடிக்கும்.அதேபோல் மிளகு கரமாக இருந்தாலும் மருத்துவ குணம் உள்ளது. அது முடிந்தவரை நமது உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பழங்களில் மாதுளம் பழம் சுவையாக இருக்கும். உள்ளே உள்ள கொட்டையுடனேயே அதை மென்று தின்று சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும், உடலுக்கு மிகவும் நல்லது.
 பாட்டு: அது எங்கிருந்தாலும் கேட்க விருப்பம் அதிகம். அதிலும் பழைய பாடல்கள் என்றால் பசியை மறந்து பாடல்கள் கேட்டுக்கொண்டே இருப்பேன். ஜி.ராமநாதன் முதல் இன்றைய இசையமைப்பாளர்கள் வரை பலரது பாடல்களை நான் ரசித்து கேட்பேன். அதே போன்று, சன், விஜய், ஜி தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் சிறுவர் சிறுமியர் பாடும் பாடல் நிகழ்ச்சிகள் பிடிக்கும். இந்த சிறிய வயதில் இவ்வளவு திறமைகளா? என்று நான் ஆச்சரியத்துடன் ரசித்து பார்ப்பேன்.
 - சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com