புத்த பூர்ணிமா திருவிழா- சாந்தகுமாரி சிவகடாட்சம்

கெளதம புத்தர் இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய ஆன்மிக குருக்களில் ஒருவராகத் திகழ்ந்தார்
புத்த பூர்ணிமா திருவிழா- சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 32

"அமைதியாக இரு, எதுவுமே உன் கட்டுப்பாட்டில் இல்லை'
- கெளதம புத்தர்
கெளதம புத்தர் இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய ஆன்மிக குருக்களில் ஒருவராகத் திகழ்ந்தார். கிருஸ்துவுக்கு முன்னால் ஆறிலிருந்து, நான்காவது நூற்றாண்டில் புத்தர் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவர் பிறந்தது, ஞானம் பெற்றது, மரித்தது எல்லாமே பூர்ணிமா தினத்தன்று அதாவது பெளர்ணமி அன்று நடந்திருக்கிறது. இந்த புனித பெளர்ணமி ஏப்ரல் அல்லது மே, மாதத்தில் வரும்பொழுது அதை "விசாக்' (Vesak) என்று போற்றி உலகம் முழுவதிலும் இருக்கும் பெளத்த மதத்தினர் அந்தத் திருநாளை புத்தரின் பிறந்தநாளாக இந்த பூமியில் அவர் அவதரித்த நன்நாளாக கொண்டாடுகிறார்கள்.
இந்த விசாகா தினத்தன்று புத்தர் பிறந்தநாளைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் நிகழ்வு என்றாலும், 1950-ஆம் ஆண்டில் இலங்கையில், கொழும்பில் நடந்த "வேல்ட் பெலோஷிப் ஆஃப் புத்திஸ்ட்' மாநாட்டில் விசாகத்தன்று புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது முடிவானது. அறுபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த அங்கத்தினர்கள் ஒருமனதாக இந்த முடிவை எடுத்தனர்.
கிருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமையை புனித தினமாகவும், முகமதியர்கள் வெள்ளிக்கிழமையை புனித தினமாகவும் கருதுவதுபோல, பெளத்தர்களும், இந்துக்களும் பெளர்ணமி தினத்தை வழிபடுவதற்கும், தியானம் செய்வதற்கும், வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் உகந்த தினமாக போற்றுகிறார்கள்.
வளர்ச்சியின் உச்சியில் இருக்கும் சந்திரனின் கிரகணங்கள் பூமியின் மீது உண்டாகும் புவிஈர்ப்பு சக்தி, கடல் அலைகளை உயரமாக எழச் செய்கிறது, பூமியின் தண்ணீர் நிலைகளை உயர்த்துகிறது. இதை அறிந்துதான் நம் முன்னோர்கள் பெளர்ணமி தினத்தன்று விதைகளை பூமியில் விதைத்திருக்கிறார்கள்.
பெளர்ணமி தினத்தன்று நல்ல பிள்ளைகளைப் பெற மக்கள் வேண்டுவார்கள். பெரிய, பெரிய ஞானிகளும், குருமார்களும், வேதாந்த வித்தகர்களும், அறிவாளிகளும் பெளர்ணமி தினத்தன்று இந்த பூமியில் ஜெனித்திருக்கிறார்கள். இதற்கு புத்தரின் பிறப்பே ஒரு முக்கிய சான்றாகத் திகழ்கின்றது.
பல இந்துக்களும் கெளதம புத்தரை விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக நம்புகிறார்கள். பத்து முக்கியமான விஷ்ணுவின் அவதாரங்களில் புத்தர் ஒன்பதாவது அவதார புருஷராகப் போற்றப்படுகிறார்.
முந்தைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறுகிறார், "ஒரு இந்து கங்கைக்கரையில் வேதங்களை ஓதினால், ஒரு ஜப்பானியர் புத்தரின் உருவத்தை வழிபட்டால், ஒரு ஐரோப்பியர் இயேசுவை நம்பினால், ஒரு அரேபியர் மசூதியில் குரானைப் படித்தால் அது அவர்களுடைய ஆழமான கடவுள் பக்தியும், கடவுள் அவரவருக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட முறையும் ஆகும்.''
எவ்வளவு அழகான, ஆழமான கருத்து. நம்பிக்கை எப்படியோ கடவுளும் அப்படியே. மகாத்மா காந்தி, கெளதம புத்தரின் போதனைகளை மிகவும் மதித்தார். அவருடைய பல உபதேசங்கள் மகாத்மாவின் வாழ்க்கையில் பல மறுமலர்ச்சிகளைக் கொண்டுவந்தது.
ஸ்டீவன் கோலீன்ஸ் (Steven collins) சொல்கிறார், "எல்லா மதமும் ஒன்று' என்பதை இந்து மதம் மதிக்கிறது. அது ஒன்றுதான் உலகில் உள்ள எல்லா மதங்களில் இருந்தும் வேறுபட்டு இந்தக் கருத்தை ஆமோதிக்கிறது.
அதனால்தான் கெளதம புத்தரை உலகிற்கு நல்லது சொன்னவரை, மக்களை நல்வழிப்படுத்தியவரை, இந்தியாவில் ஞானம் பெற்றவரை, விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக ஏற்றுக் கொண்டது போலும்.
சென்ற வருடம் மே மாதம் புத்த பூர்ணிமா என்று சொல்லப்படுகிற விசாக தினத்தன்று ஹரித்துவாரில் இருக்கும் பெரும்பேற்றை நானும் என் கணவரும் பெற்றோம்.
பூரண பெளர்ணமி, அந்த ஞானகுரு கெளதம புத்தரின் பிறந்தநாள். பல்லாயிரக்கணக்கான இந்துக்களும், பெளத்த மதத்தினரும் ஹரித்துவாரில் பெருக்கெடுத்து ஓடும் புனித நதியான கங்கையில் மூழகி பாவங்களைத் தொலைத்து, புனித புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ குழுமி இருந்தனர். புத்த பூர்ணிமா திருவிழா ஹரித்துவார் படித்துறைகளில் உயிர்ப்பித்து இருந்தது.
கங்கை என்கின்ற புனித நதியை இந்துக்கள் மற்றும் பெளத்தர்கள் அனைவரும் "கங்கா மாதா' என்று அன்புடன் அழைத்து வழிபடுகின்றனர். வாழ்நாளில் ஒரு முறையாவது புனித கங்கையில் மூழ்கி எழுந்து தங்கள் பாவங்களைத் தொலைக்க விழைகின்றனர்.
இது மட்டுமா இயற்கை எய்திய நெருங்கிய சொந்தபந்தங்களின் சாம்பலைக் கங்கையில் கரைத்து, அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வழி செய்கின்றனர்.
ஏன் கங்கைக்கு மட்டும் இப்படி ஒரு பெருமை கிடைத்திருக்கிறது என்பதற்கு பாகவத புராணம் விடை அளிக்கின்றது. கங்கையின் பிறப்பை அது விவரிக்கின்றது.
வாமன அவதாரத்தில் அரசன் மகாபலியின் தலையில் தன்னுடைய வலது காலை வைத்து, இடது காலை பிரபஞ்சத்தை அளக்கும் வகையில் விஷ்ணு உயர்த்த, அவருடைய கட்டை விரலின் நகம் பிரபஞ்சத்தில் ஒரு ஓட்டையைப் போட்டுவிட்டது. இந்த ஓட்டையின் வழியாக வழிந்த புனித தண்ணீர் கங்கை நதியாகப் பெருக்கெடுத்து வழிந்து விஷ்ணுவின் பாதங்களைக் கழுவி பிறகு பிரம்மாவின் குடியிருப்பான பிரம்மலோகத்தை அடைந்தது.
குங்குமப் பூக்களால் மூடப்பட்டிருந்த விஷ்ணுவின் பாதங்களைக் கழுவியதால் கங்கைக்கு குங்குமப் பூவின் நிறமான இளஞ்சிவப்பு நிறம் கிடைத்தது. பகவானின் பாதங்களில் இருந்து புறப்பட்டதால் "பாகவதப்படி' என்ற புனிதப் பெயரும் கிட்டியது. பிறகு!
தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com