உள்ளங்கைக்கு வருகிறது தமிழ் சினிமா

ஒரு வருடத்திற்கு அதிக திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது
உள்ளங்கைக்கு வருகிறது தமிழ் சினிமா

ஒரு வருடத்திற்கு அதிக திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. எடுக்கப்பட்டு இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் படங்களுக்கு என்று ஒரு பட்டியலிட்டால் அதிலும் பெரும்பாலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம்முடைய கோலிவுட் திரையரங்குகளில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் வெளிவராமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அப்படியே பெட்டியில் முடங்கிப் போகும் படங்களின் எண்ணிக்கை ஏராளம். சிறிய நட்சத்திரங்கள் தொடங்கி பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வரை எதுவும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
 பெரிய பட்ஜெட் படங்கள் கூட அதிக சிரமத்திற்குப் பின் எப்படியோ பெட்டியில் இருந்து விடுதலை அடைந்துவிடும். ஆனால் ஸ்டார் வேல்யூ இல்லாமல், கதையை நம்பி எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படங்களின் நிலைமைதான் மோசம். அப்படிப்பட்ட படங்களை திரைக்குக் கொண்டுவருவது என்பது கடைசி வரையில் இயலாத காரியம்தான்.
 புத்தம் புதிய பரிணாமம்
 உலக சினிமா விழாக்களில் எல்லாம் பங்கேற்று விருதுகள் பெற்ற படங்கள் கூட, திரைக்கு வராமல் முடங்கி கிடப்பதும்... நம்பகமான படைப்பாளிகளின் படங்களும் இதில் இடம் பெற்றிருப்பதும்தான் வேதனை. பல்வேறு உலக சினிமா விழாக்களில் எல்லாம் திரையிடப்பட்டும் கூட தமிழகத்தில் வெளியிட முடியாததால் தற்போது அந்தப் படங்கள் வெவ்வேறு வடிவ தளங்களில் வெளியாவதுதான் தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி.
 வசூல், நல்ல விமர்சனம், பரவலான கவனம், விருதுகள்... எனப் பல காரணங்களை ஒரு உலக சினிமாவுக்கான வெற்றியின் பங்குகளாக அடுக்கலாம். ஆனால், தமிழ் சினிமாவின் அடிப்படை பணம்தான்...
 அதனால்தான் படப்பிடிப்புக்கு தேவையான பணத்தை வட்டிக்கு வாங்குவது, படம் எடுத்து முடித்தாலும் அதை வெளியிட பணம் இல்லாமல் இன்னொரு நபரை எதிர்பார்த்து கையைப் பிசைந்துகொண்டு நிற்பது, திரையரங்க டிக்கெட்டுகள் மூலம் வரும் வசூல் காப்பாற்றுமா என நகம் கடித்தபடி திரிவதுமாய் இருக்கிறார்கள்.
 தமிழ் சினிமாவின் பெரும்பாலான தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்குத் தெரிந்த வருமான வழிகள், தியேட்டர் வசூல், சேட்டிலைட் ரைட்ஸ், ஃபாரீன் ரைட்ஸ்... என மிகச் சிலதான். அதில், சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் உரிமையிலும் இப்போது உலை எரிந்துகொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் வெளியிடாமல் கிடப்பில் இருக்கும் 500-க்கும் அதிகமான படங்களின் எண்ணிக்கைக்குக் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது.
 விற்பனையில் புது பாய்ச்சல் ஒரு திரைப்படத்தை 60-க்கும் அதிகமான வழிகளில் விற்பனை செய்யமுடியும் என்கிறது வளர்ந்து வந்துக் கொண்டே இருக்கிற தொழில்நுட்பம்.
 அமேசான், நெட்ஃபிலிக்ஸ் மாதிரியான இணையதளங்களின் வருகைக்குப் பிறகு, பணம் இருந்தால்தான் படம் எடுக்க முடியும் என்ற நிலை மாறியிருக்கிறது. நல்ல திரைக்கதை, அதைப் படமாக்குவதற்கான பட்ஜெட்... இரண்டும் உங்களிடம் இருந்தால், மேற்சொன்னது மாதிரி பல நிறுவனங்கள் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். நல்ல கதையும், ஆர்வமும் இருந்தால் போதும். யாரிடமும் கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லை, தயாரிப்பாளர்களைத் தேடித்திரிய வேண்டிய கட்டாயம் இல்லை என்கிற நிலை தற்போது உருவாகியுள்ளது.
 அமேசான், நெட்ஃபிலிக்ஸ், பிக்ஃபிலிக்ஸ், ஸ்புல், பாக்ஸ் டிவி, ஹாட் ஸ்டார், விங் மூவிஸ் எனப் பல தளங்கள் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடம் ரைட்ஸ் கேட்பவர்கள், "ஆல் அதர் டிஜிட்டல் மீடியா' ரைட்ûஸயும் சேர்த்து வாங்கிக் கொள்கிற பெரும் ஏமாற்று வேலை இங்கே தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது.
 ஏனென்றால், இனி எல்லாம் டிஜிட்டல் என்கிற சூழலைப் புரிந்துக் கொள்ளாத தயாரிப்பாளர்கள் சொற்ப தொகைக்கு அந்த ரைட்ûஸ கொடுத்து விடுகிறார்கள். இதைத் தயாரிப்பாளர்கள் முதலில் உணர வேண்டும். ஏனென்றால், குறும்படங்களையே அமேசான், நெட்ஃபிலிக்ஸ் மாதிரியான இணையதளங்களில் விற்பனை செய்யும் நிலை வந்து விட்டது.
 "அதற்கான வழிமுறைகள் இங்கே இருக்கிற சில தயாரிப்பாளர்களுக்குத் தெரியும் என்றாலும், அதை மற்றவர்களுக்கு சொல்ல ஆள் இல்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும். 20 வருடங்களுக்கு முன் வெளியான ஒரு படத்தை இப்போது இணையதளங்களில் வெளியீட்டு ஒவ்வொரு மாதமும் சில லட்சம் சம்பாதிக்கிற சிலரைப் நான் பார்த்திருக்கிறேன். இதை எல்லாத் தயாரிப்பாளர்களும் பின்பற்றலாம்''
 என்கிறார் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் முக்கியமானவரான தனஞ்ஜெயன்.
 "இதற்காகவே மும்பையில் சில ஏஜென்ஸிகள் உள்ளன. உங்கள் படத்தை குறிப்பிட்ட தொகைக்கு உங்களிடம் வாங்கிக் கொண்டு, உலகின் பல்வேறு மொழிகளுக்கும் "சப்-டைட்டில்" செய்து வெளியிடுகிறார்கள். நம்மிடம் 50,000-க்கும் அதிகமான படங்கள் இருக்கிறது. ஆனால் வழிகள் இல்லை'' என்று தனஞ்ஜெயன் வருத்தத்துடன் சொல்கிறார்.
 ஒரு படத்தின் தரத்தை மாற்றி, சப் டைட்டில் கொடுத்து, புது விதமான ட்ரெயல்ர் தயார் செய்து, அதன் தரத்தை மேம்படுத்திக்கொடுத்தால், அதை வாங்கி வெளியிட இணையதளங்கள் இருக்கின்றன.
 இங்கே என்னென்ன பிரச்னை...
 சினிமாவுக்கான தொழில் முனையங்கள் என்னென்ன என்ற புரிதல் இல்லாததுதான் இங்கே பிரச்னைகளுக்கு வழிகோலாக இருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற பல நல்ல படைப்புகள் தியேட்டர்களில் இரண்டு காட்சிகள் கூட ஓடவில்லை என்று புலம்புகிறோம். உதாரணமாக "கர்மா' என்ற ஒரு படம் தியேட்டரில் சரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால், அமேசான் தளத்தில் சக்கைப் போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆக, இங்கே தவறு ரசிகர்கள் மேல் இல்லை. தியேட்டரில் படம் பார்க்கிற அளவுக்கு, ரசிகர்கள் இங்கேயும் படம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உண்மையை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் புரிந்துக் கொண்டால், சின்ன தயாரிப்பாளர்கள், கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் சுற்றித் திரியும் உதவி இயக்குநர்கள் வரை எல்லோருக்கும் நல்வழிகள் இருக்கின்றன.
 புதிதாக வந்துள்ள "வியூ ஆப்'
 ஹாட் ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற பல வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் அடுத்ததாகத் தடம் பதிக்க வருகிறது, "வியு ஆப்' (Viu App). இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆன்லைன் பொழுதுபோக்கு சேவையை இலவசமாக வழங்கிவரும் நிறுவனமான Vuclip-க் குச் சொந்தமானதுதான்,
 இந்தச் செயலி.
 அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், டெல்லி, மும்பை, புனே, துபாய் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதுவரை, பல அந்நிய மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் செயல்பட்டுக்கொண்டிருந்த "வியூ ஆப்', தற்போது தனது சேவையை தமிழிலும் தொடங்கியுள்ளது.
 இந்தச் செயலியில் குறும்படங்கள், வெப் சீரிஸ், திரைப்படங்கள் மற்றும் கொரியன் சீரியல்களைத் தமிழில் காணலாம். இதுகுறித்து, Vuclip நிறுவனத்தின் செயல் அதிகாரி அருணினிடம் பேசும் போது...
 "தமிழ் ரசிகர்கள் நவீன நடைமுறைகள் மற்றும் கலாசாரங்கள் பற்றி நல்ல ரசனை உடையவர்கள். நடுநிலையான பார்வை உடையவர்கள். அவர்கள் உள்ளூர் பாணியில் சொல்லப்படும் சிறந்த கதைகளை விரும்புவார்கள். அப்படியான சிறந்த பொழுதுபோக்கினை இலவசமாக வழங்குவதில் பெருமையடைகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 படைப்பாளிகள் வெளிப்படும் தளம்
 இது மட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் முத்திரை பதிக்கும் படைப்பாளிகள், சினிமா இல்லாத தங்களது படைப்புகளை இதில் வெளியீட்டு வருகிறார்கள். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள "மாஷா அல்லா... கணேசா' எனும் குறும்படம் இதில் வெளியாகியுள்ளது.
 மும்பை தாராவியில் நடந்த இந்து -இஸ்லாம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பல ஆண்டுகளாக அமைதியாக வாழ்ந்து வந்த ஓர் இஸ்லாமிய குடும்பம் கலவரத்தில் சிக்கிய நிலையில், இந்துக் கோயிலில் தஞ்சமடைகிறது. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது, இக்குறும்படம்.
 இது தவிர தமிழில் தற்போது வரவேற்புக்குரிய குறும்படங்களான "மெட்ராஸ் மேன்சன்', "டோர் நம்பர் 403' ,
 "நிலா நிலா ஓடி வா', விஜய் சேதுபதி நடித்த "விண்ட்' உள்ளிட்ட பல குறும்படங்கள் இந்த செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 இந்தச் செயலியில் "காதல் கண்கட்டுதே', "கோ 2', "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', "கவலை வேண்டாம்' போன்ற கமர்ஷியல் சினிமாக்களையும் காணலாம்.
 இது பற்றி இயக்குநர் மோகன்ராஜா பேசும்போது...
 "மற்ற மொழிகளைவிட தமிழ் மொழியில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம். தமிழ்நாட்டு ரசிகர்களை நம்பி ஒரு காரியத்தில் தைரியமாக இறங்கலாம். என் நண்பர்கள் பலர் தற்போது வலைத்தொடர்கள் இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறேன். நான் சினிமாவுக்குள் நுழைந்து பல வருடங்களாகியும் இன்னும் சொல்வது மாதிரி எந்த விஷயங்களையும் செய்யவில்லை. இது சினிமாவின் அடுத்த தளமாக இருக்கும் என நம்புகிறேன்'' என்கிறார்.
 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் புது வீச்சு
 ரிமோட்டுக்காக சண்டை போட்டதெல்லாம் அந்தக் காலம். மொபைலிலே நேரலையில் டி.வி. பார்க்கும் லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன்கள்தான் இந்த புரட்சியின் உச்சம். பயணத்தின் போதும், யாருக்கோ காத்திருக்கும்போதும் பொழுதுபோக்க வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்கள்தான் பலருக்கும் உதவியாக இருக்கின்றன. சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்த இந்த ஆப்ஸில் எவையெல்லாம் முன்னணியில் உள்ளது என்று பார்ப்போம்....
 டாட்டா ஸ்கை மொபைல்
 செல்பேசி மூலமே செட்-டாப் பாக்ஸை கட்டுப்படுத்த முடியும். DTH அக்கவுண்ட்டை நிர்வகிப்பது, ரெக்கார்ட் செய்ய விரும்பும் நிகழ்ச்சிகளை மொபைலிலேயே ஷெட்யூல் செய்வது போன்ற அத்தனை விஷயங்களையும் இந்த அப்ளிகேஷன் மூலமாக மேற்கொள்ள முடியும். ஒரு அக்கவுண்ட்டில் இரண்டு டிவைஸ்களை மட்டுமே இந்த அப்ளிகேஷன் மூலம் இணைக்க முடியும் என்பது மட்டும்தான் சின்ன மைனஸ்.
 யப் டிவி
 இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விடியோ சேவை நிறுவனங்களில் யப் டிவியும் ஒன்று. விருப்பமான மொழியை மட்டும் தேர்வு செய்துகொண்டால், அம்மொழியில் உள்ள நிகழ்ச்சிகள் மட்டும் தனியாகப் பட்டியலிடப்படுகிறது. தமிழைப் பொருத்தவரை, சன் டிவி, ஸ்டார் விஜய், ஜெயா, கலைஞர், ராஜ், கே டிவி, சிரிப்பொலி, புதிய தலைமுறை, தந்தி, சித்திரம், கேப்டன் செய்திகள், ராஜ் செய்திகள் மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களை இந்த மொபைல் ஆப்பில் நேரலையில் காண முடியும். நிகழ்ச்சிகள் அனைத்தும் மொழி மற்றும் பிரிவு வாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எளிமையான வடிவமைப்பு இதன் பெரிய ப்ளஸ் என்றால், ஸ்கிப் செய்ய முடியாத விளம்பரங்கள் இதன் பெரிய மைனஸ். பிரீமியம் சேவையிலும் விளம்பரங்களை ஸ்கிப் செய்ய முடிவதில்லை என்பது நேயர்களின் குற்றச்சாட்டு.
 சன் நெக்ஸ்ட்
 விளம்பர இடைவேளையின்றி புதிய திரைப்படங்களையும் ஹெச்.டி தரத்தில் காண முடியும். இந்த அப்ளிகேஷனில் விடியோவின் தரத்தை நாமே தேர்ந்தெடுக்க முடிகிறது. எளிமையான வடிவமைப்பு மற்றும் ஹேங் ஆகாமல் இயங்குவது இதன் சிறப்புகள்.
 ஹாட்ஸ்டார்
 ஸ்டார் குழுமத்தின் சேனல்கள் அனைத்தையும் இலவசமாக இந்த அப்ளிகேஷன் மூலம் கண்டு ரசிக்க முடிகிறது. சாதாரண லாகின் மூலம் நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை ஐந்து நிமிடங்கள் தாமதமாகவே ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
 ஜியோ டிவி
 ஜியோ நெட்வொர்க் அக்கவுன்ட் மூலம், ஜியோ டிவி அப்ளிகேஷனில் லாகின் செய்துகொள்ளலாம். 60+ ஹெச்.டி சேனல்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட சேனல்களை இந்த மொபைல் ஆப் மூலமாகக் காண முடியும். இவை அனைத்தையும் நேரலை ஒளிபரப்பில் காண்பதோடு, விருப்பப்பட்ட நிகழ்ச்சிகளை ஒருவார காலத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் கண்டுகளிக்க முடியும்.
 ப்ளே ஸ்டோர் லிங்க்
 இந்தியாவில் கால்பதித்திருக்கும் அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் வீடியோ சேவை நிறுவனங்களுக்குப் போட்டியாக மேற்கண்ட ஆப்கள் விளங்குகின்றன. ஆனால், எக்ஸ்க்ளூசிவ் ஆன திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை இந்த இரண்டு நிறுவனங்களும் வெளியிடவிருப்பதால், ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் துறையில் இவைகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகின்றன.
 இது தவிர சன் நெக்ஸ்ட், ஏர்டெல் டிவி, ரிலையன்ஸ் எனப் பல நிறுவனங்கள் தமிழ்த் திரைப்படங்களுக்கான சந்தையைக் கச்சிதமாக உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக சினிமாக்களிலும் இது தற்போது பெருமளவு பிரதிபலிக் கொண்டிருக்கிறது. நாம் பார்க்க நினைக்கும் படங்களை இதில் உடனடியாக பார்க்குமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
 சினிமா வெளியீட்டில் நடந்து வரும் இந்த புது தொழில்நுட்ப பாய்ச்சல், இனி வருங்கால சினிமாவாக இருக்கும் என நம்பப்படுகிறது. ரசிகர்கள் விரும்புகிற தளத்தில் சினிமா காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இனி என்ன செய்யப் போகிறது தமிழ்த் திரையுலகம்...?
 }ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com