பிடித்த பத்து: சிட்னி நகர தமிழர்களின் விருந்தோம்பல்!

அரசியல்வாதி, பேச்சாளர், எழுத்தாளர், காமராஜர் மீது அலாதியான பற்று கொண்டவர். இவரது பேச்சை கேட்டு இவருக்கு "தமிழருவி' என்று பட்டத்தை அன்று காமராஜர் வழங்கினார். தமிழருவி மணியன் தனக்கு
பிடித்த பத்து: சிட்னி நகர தமிழர்களின் விருந்தோம்பல்!

அரசியல்வாதி, பேச்சாளர், எழுத்தாளர், காமராஜர் மீது அலாதியான பற்று கொண்டவர். இவரது பேச்சை கேட்டு இவருக்கு "தமிழருவி' என்று பட்டத்தை அன்று காமராஜர் வழங்கினார். தமிழருவி மணியன் தனக்கு "பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார்:
 நா.பா.வின் படைப்புகள்: பால்ய காலத்தில் நான் படித்த பள்ளிப் புத்தகங்கள் என்னைப் பெரிதாகப் பாதித்துவிடவில்லை. இரண்டு இதிகாசங்களையும், நான்கு வேதங்களையும், பதினெட்டு புராணங்களையும், பல்வேறு உபநிடதங்களையும் படித்து நான் என்னைச் செதுக்கிக் கொள்ளவில்லை. படைப்பிலக்கிய உலகில் "குறிஞ்சி மலர்' தான் நான் படிக்க நேர்ந்த முதல் புதினம். நா.பா. வடித்துக் காட்டிய அரவிந்தனும் பூரணியும் என்னால் என்றுமே மறக்க முடியாதவர்கள். "வாழ்ந்தால் அரவிந்தனைப் போல் வாழ வேண்டும்" என்ற தணியாத தாகம் என் ஆன்மாவை அப்போதே ஆட்கொண்டுவிட்டது. நா.பா. என்ற இலட்சிய எழுத்தாளரின் பனித்துளியை விடவும் நிர்மலமான எழுத்துக்களே என் வாழ்வை ஓர் நெறி சார்ந்த சிற்பம் போல் செதுக்கி வைத்தன. நா.பா.வின் "குறிஞ்சி மலர்', "பொன்விலங்கு', "மணிபல்லவம்', "ஆத்மாவின் இராகங்கள்' ஆகிய நான்கு படைப்புகளே நான் நேசித்து வாசிக்கும் நான்கு வேதங்கள்.
 மாநிலக் கல்லூரி: ஊருக்கு நேரம் சொல்லும் அந்த உயரமான மணிக்கூண்டு. வெள்ளைக்காரனின் கலைவண்ணத்தை வெளிப்படுத்தும் கம்பீரமான சிவப்பு நிறக் கட்டடங்கள். வெயிலை மறைத்து நிழலை வளர்க்கக் குடை பிடிக்கும் நெடிதுயர்ந்த தூங்குமூஞ்சி மரங்கள். அந்த மரங்களின் கிளைகளையே கச்சேரி மேடையாக்கி நானாவிதமான பறவைகள் சுருதி கூட்டும் சுகராகம், பார்வை படுமிடமெல்லாம் காற்று நட்டுவாங்கத்திற்கேற்ப உடலசைத்து நடனமிடும் செடிகொடிகள். எதிரே நீல அலைகள் பொங்கிப் புரளும் வங்கக்கடலின் வாழ்த்தொலிகள். எப்போதும் தேவலோகத்தில் இருப்பது போல தேகம் தழுவி சொர்க்க சுகம் காட்டி உயிர் வளர்க்கும் அமுதக்காற்று. தோழர்களோடும் தோழியர்களோடும் சேர்ந்து மகிழ்ந்த ஆயிரம் நாட்கள் என்று ஒவ்வொன்றையும் இறப்பு வரும் வரை என் இதயம் மறக்காது.
 மெரினா கடற்கரை: இந்தக் கடற்கரை மட்டும் இல்லாதிருந்தால் இந்நேரம் சென்னை ஒரு சபிக்கப்பட்ட சாக்கடையாக மாறியிருக்கும். இது சென்னைவாசிகளுக்கு இயற்கை வழங்கிய இனிய சீதனம். மெரினா கடற்கரை விரிந்து கிடக்கும் வெறும் மணற்பரப்பன்று. இது தான் காதலர்களின் கடைசிப் பிருந்தாவனம்; இளைஞர்களின் விளையாட்டு மைதானம்; முதியவர்களின் மாலைநேரப் பொழுதுபோக்கு மன்றம்; வறுமையோடு இல்லறம் நடத்தும் ஏழைகளின் இகலோக சொர்க்கம். பம்மிப் பாய்ந்து விம்மி வெடித்து வீங்கித் தணியும் நீல அலைகள் கால்களைத் தழுவியபடி நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதில் எனக்குள்ள பரவசம் சொற்களில் பிடிபடாதது.
 காமராஜர்: காமராஜர் காலடியில் தான் என் பொது வாழ்க்கைக்கான பொழுது புலர்ந்தது. முற்றும் துறந்த ஆதிசங்கரரும் பட்டினத்தாரும் கூடத் துறக்க விரும்பாத உறவு தாயின் உறவு. அந்தத் தாயின் உறவையும் பொதுவாழ்க்கைத் தூய்மைக்காகப் புறந்தள்ளிய அபூர்வமான தலைவர் காமராஜர். நாட்டு விடுதலைப் போரில் ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம்; பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்; ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர்; நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்; ஒன்பது ஆண்டுகள் தமிழக முதல்வர்; ஐந்து ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்; இரண்டு முறை இந்தியப் பிரதமர்களை உருவாக்கியவர். இவர் இறந்த போது மிஞ்சியது வெறும் 60 ரூபாய், பத்து கதர் வேட்டி - சட்டை.
 கவிஞரின் பொன்மொழி: கல்லூரிக் காலங்களில் என் ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தின் முதற்பக்கத்திலும் நான் எழுதி வைத்த பொன்மொழி:- "என் இறைவனே! என் நிலையையும் நினைப்பையும் சமப்படுத்திக் கொண்டே இரு. நினைப்புக்கு மேல் நிலையை உயர்த்துவதானால் அது உன் இஷ்டம். ஆனால், நிலைமைக்கு மேல் நினைப்பை உயர்த்தி விடாதே!'. இதுதான் என் நினைவுகளில் என்றும் நிழலாடும் கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான பொன்மொழி.
 நண்பர்கள்: என் நண்பர்கள் அனைவரும் என்மீது எல்லையற்ற அன்பு செய்வதில் ஒரே விதம். ஆனால், என்னை அணுகும் முறையில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். கருணை பொழியும் அன்னையாய், கண்டிப்பு காட்டும் தந்தையாய், அறிவுறுத்தும் ஆசானாய், அடிமை போல் சேவகம் செய்பவராய் எனக்கு வாய்த்த நண்பர்கள் பலர். இராகங்கள் வெவ்வேறு என்றாலும் பாடல் என்னவோ ஒன்றுதான். நண்பர்கள் இல்லாமற்போனால் நான் நரம்பற்ற வீணையாகி விடுவேன்.
 பழைய பாடல்கள்-படங்கள்: 1960-களிலும், 1970-களிலும் கண்ணதாசன், வாலி வழங்கிய வளமான வார்த்தைகளுக்கு விஸ்வநாதன்-இராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் வடித்துக் கொடுத்த மரபு மீறாத இசைக் கோளங்களில் உயிர்பெற்று உலவிய கந்தர்வ கானங்களை இரவுப் பொழுதில் மங்கிய வெளிச்சத்தில் தன்னந் தனிமையில் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது மனம் ஒன்றிக் கேட்கப் பிடிக்கும். சிவாஜி கணேசனின் "பாசமலர்', "பாகப்பிரிவினை‘, "பாலும் பழமும்', "பாவ மன்னிப்பு', "கப்பலோட்டிய தமிழன்', "கர்ணன்', எம்.ஜி.ஆரின் "எங்க வீட்டுப் பிள்ளை‘, "அன்பே வா', "ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களை நேரம் வாய்க்கும் போதெல்லாம் திரும்பத் திரும்ப பார்க்க பிடிக்கும்.
 மீனாட்சி அம்மன் கோயில்: எனக்கு ஆழ்ந்த கடவுள் பக்தி உண்டு. சமயத்தையும் சடங்குகளையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியும். சடங்குகளிலும் சாத்திரத்திலும் நம்பிக்கையற்ற நான், நம்மை மீறிய இறையாற்றலின் இருப்பை அனுபவத்தில் பலமுறை அழுத்தமாக உணர்ந்திருக்கிறேன். அந்த இறையாற்றலின் வடிவமாகவே நான் அனைத்துக் கடவுள்களையும், ஆலயங்களையும் பார்க்கும் பக்குவத்தை அடைந்திருக்கிறேன். மதுரை மீனாட்சியும், சமயபுரத்து மாரியம்மையும், திருச்சி உச்சிப் பிள்ளையாரும் என்னுள் நின்று என்றும் வழிநடத்துபவர்கள். மதுரை மீனாட்சி கோயிலின் பிரகாரம் முழுவதையும் ஒவ்வொரு நாள் வைகறையிலும் மானசீகமாக வலம் வருவது என் வழக்கம்.
 அயலகத் தமிழரின் விருந்தோம்பல்: உலகின் பல நாடுகளில் நான் உரை நிகழ்த்தச் சென்றிருக்கிறேன். பல்வேறு மக்களின் விருந்தோம்பலை ஏற்று மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், தொடர்ந்து நான்கு ஆண்டுகள் டிசம்பர் மாதம் முழுவதும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்ச் சங்கத் தலைவர் திருவேங்கடம் இல்லத்தில் என் மனைவியுடன் தங்கியிருந்த தருணங்களில் நான் அனுபவித்த அமைதியும் மகிழ்ச்சியும் என்றும் மறக்க முடியாதவை. அங்குள்ள யாழ்ப்பாணத் தமிழர் ஸ்ரீ, என் மீது காதலாகிக் கசிந்துருகும் அரிதினும் அரிதான நண்பர். உலகிலேயே எனக்குப் பிடித்த நகரம் சிட்னி; பிடித்த மனிதர்களும் சிட்னி வாழ் நண்பர்களே!.
 என்றும் பிடித்தவை: என் பெற்றோர், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் நான் எத்தனை பிறவி எடுத்தாலும் இதே உறவுகளாய் எனக்கு மீண்டும் மீண்டும் வந்து வாய்க்க வேண்டும். என்னைத் தவிர வேறு உலகையே அறியாத என் மனைவியே இப்பிறவியில் எனக்கு மிகவும் பிடித்தவர். எனக்காகவே வாழ்ந்து, எனக்காகவே கரைந்து கொண்டிருக்கும் அந்த மெழுகுத் திரியின் ஒளியில் தான் என் வாழ்க்கைக்கான வெளிச்சம் கிடைக்கிறது. அந்த ஒளி இல்லாமல் என் வாழ்க்கை இருண்டு போவதற்கு முன்பே நான் இறந்து போக வேண்டும். மரண தேவதையிடம் நான் கேட்கும் வரம் ஒன்றுதான். என் மனைவியின் மடியில் எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் .
 - சலன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com